Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மஞ்சப்பை

மஞ்சப்பை,Manjapai
09 ஜூன், 2014 - 20:31 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மஞ்சப்பை

தினமலர் விமர்சனம்


தாத்தாவக ராஜ்கிரண், பேரனாக விமல் நடிக்க இன்றைய நம் சமூக கட்டமைப்பில் அரிதாகி வரும் தாத்தா - பேரனின் பாசத்தையும், நேசத்தையும் மிக நேர்த்தியாக எடுத்து சொல்லியிருக்கும் திரைப்படம் தான் ‛‛மஞ்சப்பை''. இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் என்.ராகவனின் இயக்கத்தில், இயக்குநர் சற்குணம் பிரதர்ஸூம், இயக்குநர் என்.லிங்குசாமி பிரதர்ஸூம் இணைந்து தயாரித்திருக்கும் ‛‛மஞ்சப்பை'' திரைப்படம் குறித்து பார்ப்போம்...

கதைப்படி, அப்பா, அம்மாவை சின்ன வயதிலேயே விபத்தொன்றில் பறிகொடுத்துவிட்டு, கிராமத்து தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து ஆளாகி, சிட்டியில் பெரிய ஐ.டி. கம்பெனியில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கிறார் விமல். கூடவே, மருத்துவம் படிக்கும் லட்சுமிமேனின் கடைக்கண் பார்வையும், காதலும் கிடைக்க, மிகவும் சந்தோஷ வாழ்க்கை வாழும் விமலுக்கு, அவர் எதிர்பார்த்த மாதிரியே அமெரிக்காவில் செட்டில் ஆகும் வாய்ப்பும் தேடி வருகிறது. இன்னும் இரண்டொரு மாதங்களில் அமெரிக்கா செல்ல வேண்டிய சூழலில், அந்த கொஞ்சகாலத்திற்கு தன்னை வளர்த்து ஆளாக்கிய தாத்தாவை சிட்டிக்கு வரவழைத்து, சகல சவுகரியங்களும் நிரம்பிய பிளாட்டில் தங்க வைத்து சந்தோஷப்படுத்த எண்ணுகிறார் விமல்.

விமலின் விருப்பப்படி நகரத்திற்கு வரும் தாத்தா ராஜ்கிரணின் பட்டிக்காட்டு தனங்களால், விமலின் அமெரிக்க ஆசையும், காதலியை கல்யாணம் கட்டிக் கொள்ளும் எண்ணமும் தவிடு பொடியாகிறது. தன்னால் கெட இருந்த தன் பேரனின் ஆசை, அபிலானஷகளை, தன் பேரன் மீண்டும் அடைய ராஜ்கிரண் எடுக்கும் முயற்சியும், அதனால் விமலுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் தான் ‛மஞ்சப்பை' படத்தின் மொத்த கதையும்!

கரடுமுரடான நாயகராக இருந்து அதன்பின் அதேபாணியில் அப்பாவான ராஜ்கிரண்., இப்படத்தில் தாத்தாவாக நல்லி எலும்பு கடிப்பதில் தொடங்கி... நான்கைந்து பேரை தூக்கிபோட்டு பந்தாடுவது வரை தன் பாணியில் தாத்தாவாகவும், தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். அதிலும் பிரட்ரோஸ்ட் மெஷின் எனக்கருதி, விமலின் அமெரிக்க ஆசையை பூர்த்தி செய்யும் பிராஜக்ட்டுகளுடன் காத்திருக்கும், லேப்-டாப்பில் பிரட்டை வைத்து, அதை அடுப்பில் தூக்கி வைத்து வெடிக்க வைக்கும் பட்டிக்காட்டு தனத்தில் தொடங்கி, எலி மருத்து தின்ற குழந்தைக்கு உப்பு-புளி கரைசல் மருந்து கொடுத்து அதை பிழைக்க வைக்கும் பட்டிக்காட்டு மருத்துவம் பார்ப்பது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.

ஐ.டி. இளைஞராக விமல். விமலை ஐ.டி. இளைஞராக அதுவும், அமெரிக்க ஆசையுடன் திரியும் சாப்ட்வேர் ஹயாக பார்ப்பது சற்றே கடினம் என்றாலும், விமலின் நிறை, குறைகளை அறிந்து அவரை அழகாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் என்.ராகவன், விமல் வரும் காட்சிகளில் எல்லாம் விமல் வாயிலாக மிளிருகிறார். விமலும் வழக்கம் போலவே தாத்தா - பேரன் பாசக்காட்சிகளிலும், லட்சுமியுடனான காதல் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார் மிரட்டி!

ேஹாய்... என ஒரு மாதிரி கவர்ந்திழுக்கும் சப்தத்துடன் வரும் லட்சுமி மேனன், லாங்-ஷாட்டுகளில் அழகாகவும், குளோசப் ஷாட்டுகளில் தன் வயதை தாண்டிய வளர்ச்சியுடனும் மிரட்டுகிறார்.

‛காதல்' சரவணன், ‛கும்கி' அஸ்வின், எல்.எம்.எம்.சுவாமிநாதன் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில், ‛இசைஞானி' இளையராஜா எட்டிப்பார்த்தாலும், ‛ஆகாசநிலவு', ‛அன்புதான்', ‛பத்து பத்து‛, ‛சட்டென' உள்ளிட்ட ஐந்து பாடல்களும் இதமாகவே இருப்பது ‛மஞ்சப்பை'யின் பெரும்பலம்!

தேவாவின் படத்தொகுப்பு, மாசாணியின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளும் ப்ளஸ்!

ஆகமொத்தத்தில், என்.ராகவனின் எழுத்து-இயக்கத்தில், ‛மஞ்சப்பை' வழக்கமான ‛கமர்ஷியல், கலெக்ஷ்ன் - சினிமாபொய்' அல்ல...! மலிந்து வரும் தாத்தா - பேரன் பாச உறவிற்கு மகுடம் சூட்டியிருக்கும் ‛மெய்' என்றால் மிகையல்ல!!


---------------------------------------------------------------------நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...


வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


பொதுவா கிராமத்துல இருந்து நகரத்துக்கு வர்ற பெருசுங்களை மஞ்சப்பைன்னு கிண்டலா சொல்வாங்க .ஆனா அந்த மாதிரி பெரியவங்க கிட்டே நமக்குத்தெரியாத, நம்ம கிட்டே இல்லாத அனுபவ அறிவு இருக்கு அவங்களை அலட்சியப்படுத்தக்கூடாது, அவங்க அட்வைஸ் நமக்கு என்னைக்கும் தேவை என்பதை உணர்த்தும் படம் தான் 130 நிமிடங்கள் ஓடும் இந்த மஞ்சப்பை. அதனால மஞ்சள் துண்டு, மஞ்சப்பை கிட்டே நாம எப்பவும் ஜாக்கிரதையாவே இருந்துக்கனும்.


ஹீரோ ஐ.டி கம்பெனில ஒரு லட்சம் ரூபாய் சம்பளம், மாசா மாசம் வாங்கும் ஆள். அவர் நகரத்தில் இருக்கார். தாத்தா கிராமத்தில். அம்மா, அப்பா சின்ன வயசுலயே இல்லை, எல்லாம் தாத்தா தான். சிட்டில கண் டாக்டரை எதேச்சையா சந்திச்சு ஹீரோ லவ்வறார். காதலுக்கே கண் இல்லைங்கறப்போ காதல்ல விழுந்த கண் டாக்டருக்கு மட்டும் கண் இருக்கவா போகுது? அவரும் லவ்வுது.


கிராமத்துல இருந்து தாத்தா வர்றார். அவர் அப்பாவித்தனமா செய்யும் பல விஷயங்கள் ஹீரோவுக்கு எதிராக முடிஞ்சிடுது. ஹீரோயின் காதல் பரிசா கொடுத்த சட்டையை வேற யாருக்கோ தந்துடறார் தாத்தா. இது ஹீரோயினுக்குப்பிடிக்கலை. ஹீரோ குடியிருக்கும் அபார்மெண்ட்டில் எல்லோர் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் தாத்தா. அவர் எப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறார் என்பதே மிச்ச மீதிக்கதை.


ஹீரோ சந்தேகமே இல்லாம ராஜ்கிரண் தான். கலக்கலான நடிப்பு. அவர் பேரன் மீது மட்டும் இல்லாமல் அபார்ட்மெண்ட்டில் குடி இருக்கும் அனைவர் மீதும் அன்பைப்பொழிவது கிராமத்து யதார்த்தம். தவமாய் தவமிருந்து படத்துக்குப்பின் இவருக்கு கிடைச்ச நல்ல தீனி இந்தப்படம்.


செகண்ட் ஹீரோவா விமல். குறை சொல்ல முடியாத நடிப்பு.


ஹீரோயினா திருப்பதி லட்டு, புட்டு வைத்த குழாப்புட்டு, தாடையில் இருக்கும் தழும்பைக்கூட அழகின் இன்னொரு லேண்ட் மார்க்காக மாத்திய மார்க்கமான பொண்ணு கண்ணுக்கு லட்சணமான லட்சுமி மேனன். இவரது டிரஸ்ஸிங்க் சென்ஸ் வழக்கம் போல் அருமை. நதியாவுக்கு அடுத்து ஆடை கலையாமல் பார்த்துக்கொள்ளும் அருமை நாயகி. சில காட்சிகளில் வில்லியாக தோன்ற வேண்டிய கட்டாயம்.


பூவே பூச்சுடவா படத்தின் உல்டா, ரீ-மேக்காக அதாவது பாட்டி பேத்திக்குப்பதிலாக, தாத்தா - பேரன் கதை, அதை இயக்குநர் பாசிட்டிவ் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமன் இயக்கினால் எப்படி இருக்கும்? அது போல் குடும்பபாங்கான கதை.


மஞ்சப்பை - தாத்தா பேரன் பாசம் சொல்லும் பேமிலி மெலோ டிராமா. ராஜ்கிரண் நடிப்பு டாப்!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மஞ்சப்பை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in