2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் மற்றும் பலர்
இயக்கம் - சுசி கணேசன்
இசை - வித்யாசாகர்
தயாரிப்பு - எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் இயக்குனர் சுசிகணேசன். 11 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திருட்டுப் பயலே படத்தின் இரண்டாம் பாகமாக திருட்டுப் பயலே 2 உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சி எதுவும் இரண்டாம் பாகத்தில் கிடையாது, வேறு நட்சத்திரங்கள், வேறு கதைக்களம். ஆனால், பிளாக் மெயில் மட்டும் பொதுவாக உள்ளது.

மொபைல் போன், சமூக வலைத்தள காலகட்டமான இந்த சமயத்தில் அதன் பயன்பாடுகள் எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்துகின்றன என்பதை வெளிப்படையாகவே ஆகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் இனி போனில் பேசும் போது மிகவும் கவனமாகவும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் கவனமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

காவல் துறையின் நுண்ணறிவுப் ஐ.ஜி. உத்தரவின் பேரில் சில அமைச்சர்கள், சில உயர் அதிகாரிகள், சில விஐபிக்கள் ஆகியவர்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டு அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் பணியில் அமர்த்தப்படுகிறார் பாபி சிம்ஹா. அப்படி ஒட்டுக் கேட்கும் போது அவருடைய மனைவி அமலா பால், பிரசன்னாவிடம் அடிக்கடி பேசி வருவைதைக் கண்டுபிடிக்கிறார். அமலா பாலுக்குத் தெரியாமல் பிரசன்னா யார் என்பதைக் கண்டுபிடித்து அவரை மிரட்டிப் பார்க்கிறார். ஆனால், பாபி சிம்ஹா செய்யும் ஒட்டுக் கேட்கும் வேலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் பிரசன்னா, பாபி சிம்ஹா செய்யும் பல திருட்டுத் தனமான வேலைகளை அம்பலப்படுத்துவேன் என மிரட்டுகிறார். இந்த இரண்டு திருட்டுப் பயல்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் தான் திருட்டுப் பயலே 2.

முந்தைய படங்களை விட தோற்றத்தில் மிகவும் மாறியிருக்கிறார் பாபி சிம்ஹா. மிகவும் குண்டாகிப் போயிருக்கிறார். காக்கிச் சட்டையில் அதிகம் வராதது ஆறுதல். படத்தின் நாயகன் என்று சொன்னாலும் அவரும் குறுக்கு வழியில் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆக வாழ வேண்டும் என ஆசை கொண்டவர்தான். வெளியில் தன்னை ஹானஸ்ட் அதிகாரி ஆக காட்டிக் கொண்டு பல வேலைகள் செய்து குடும்பத்தினருக்கே தெரியாமல் கோடிகளை சம்பாதிப்பவர். அந்தத் திருட்டுத் தனமான கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே நடித்திருக்கிறார். ஆனால், ஜிகர்தன்டா அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை.

நாயகனை எதிர்ப்பதால் வேண்டுமானால் பிரசன்னாவை படத்தில் வில்லன் என்று சொல்லலாம். ஒரு ஸ்டைலிஷான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரசன்னா. சமூக வலைத்தளம் மூலமாக பெண்களை மடக்குவது, கம்ப்யூட்டர் ஹேக்கிங், திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட கேமரா மூலம் படம் எடுப்பது என இந்தக் காலத்தில் நாம் அதிகம் கேள்விப்படும் பல விஷயங்களை அவரது கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவருடைய கதாபாத்திரத்திற்கான ஒரு பின்னணியைக் காட்டியிருந்தால் அவர் கதாபாத்திரத்திற்கு இன்னும் கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.

பாபி சிம்ஹாவின் மனைவியாக அமலா பால். அதிக மேக்கப் இல்லை, ரிச்சான ஆடைகள் இல்லை. இருந்தாலும் கணவனுடன் கொஞ்சுவதில் அநியாயத்திற்கு ரொமான்சை வெளிப்படுத்தியிருக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருப்பார் போலிருக்கிறது. பல வசனங்களில் தமிழைக் கொஞ்சம் கொலை செய்திருக்கிறார், இயக்குனர் கவனித்திருக்கலாம். பிரசன்னாவிடம் சிக்கிக் கொள்வது, அதை போலீஸ் கணவன் பாபி சிம்ஹாவிடம் மறைக்கத் தவிப்பது என படத்தில் இவருக்கு நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள பல காட்சிகள் உள்ளன. அந்த விதத்தில் அமலா பால் நடிப்பில் ஆச்சரியப்பட வைக்கிறார்.

இயக்குனர் சுசி கணேசன் பிரைவேட் டிடெக்டிவ்வாக நடித்திருக்கிறார், படத்திற்குத் தேவையில்லாத கதாபாத்திரமாகவே தெரிகிறது. கிளைமாக்ஸுக்கு மட்டும் அவரது கதாபாத்திரம் பயன்படுகிறது. மற்ற கதாபாத்திரங்களில் ஐ.ஜி. ஆக நடித்திருக்கும் வழக்கு எண் 18/9 கவனிக்கப்படுவார்.

வித்யாசகர் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. அதிலும் அமலா பால் ஆடிப்பாடும் முதல் பாடலும், அதற்கான நடனமும் 90களை ஞாபகப்படுத்துகிறது. பின்னணி இசையில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

படம் இடைவேளை வரை சுவாரசியமாகவே நகர்கிறது. இடைவேளைக்குப் பின், பாபி சிம்ஹா, பிரசன்னா இடையிலான மோதலை சீக்கிரமே முடித்திருக்கலாம். வெளிநாடு போவது எல்லாம் படத்தை இழுக்கிறது.

திருட்டுப் பயலே 2 - முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் திருட்டுப் பயல்கள் தான்

 

பட குழுவினர்

திருட்டுப்பயலே-2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓