தினமலர் விமர்சனம்
அந்த ஊரில் முத்தின கத்திரிக்காயாக திரியும் முத்து பாண்டி .,ஆளே இல்லாத தேசிய கட்சிக்கு தலைவர். அவரது அப்பா , தாத்தா எல்லாம் அரசியலில் தோத்தும் செத்தும் போனதால் , அரசியலே வேண்டாம் என வெறுத்துப் போன குடும்பத்தில் இருந்து எதிர்பாராமல் அரசியலுக்குள் குதித்த முத்து பாண்டியின் அரசியல் எதிரிகள்... வெவ்வேறு கட்சியில் இருக்கும் அண்ணன் ,தம்பிகளான புல்லட் மருது, வாஞ்சி நாதன் இருவரும். அந்த ஊரில் சேர்மன் , கவுன்சிலர் எனபதவி வகித்தபடி ., எதையெடுத்தாலும் கமிஷன் பிரதர் .... என காசு பார்க்கும் இருவரையும், அவர்களது கட்சியையும் காலி பண்ணிவிட்டு முத்துப்பாண்டி அரசியலிலும் ., தன் கூட படித்த மாதவி- இன்ஸ் ரவிக்குமார் ஜோடியினுடைய பெண் வாரிசு மாயாவுடனான காதலிலும் எவ்வாறு ஜெயிக்கிறார் ? என்பதும் தான் முத்தின கத்திரிககா படத்தின் காமெடி கரு , கதை , களம் , காட்சிப்படுத்தல் எல்லாம்.
மணவறையில்
மூன்று முடிச்சு போடக்கூட கை உதறும் முத்தின
கத்திரிக்காயாக ., அதே நேரம் நினைத்ததை எல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல்
முடிக்கும்
முத்துப்பாண்டியாக சுந்தர்.சி .. சற்று இடைவெளிக்குப் பின் சூப்பர்
ஜி! லவ் மேரேஜா அரேன்ஜ் மேரேஜா ? எனக் கேட்டு கேட்டு அடியாள் கோஷ்டியை தனக்கு பெண்
கிடைக்காத கோபத்தில் புரட்டுவது ., பூனம் பஜ்வாவை தான் முத்தின கத்திரிக்காய்
என்பதை மறந்து ,துரத்தி , துரத்தி காதலிப்பது ...என துள் ளாட்டம் போட்டிருக்கிறார்.
அதிலும் சு.சியும் அவர் உதவியாளராக வரும் சதீஷும் அடிக்கும் காமெடி கூத்துக்கள்
களேபரம் .
மாயாவாக பூனம் பஜ்வா மந்திர புன்னகையுடன் , மந்தகாச உடம்புடன் ழுத்தின கத்திரிக்கா சு.சிக்கு ஏற்ற பிஞ்சு வெள்ளரிக் காயக பிரமாதப்படுத் தியிருக்கிறார்.
அம்மா கிரணிடம் ., மகள்பூனம் பஜ்வா ஒரு இடத்தில் அதானே பார்த்தேன் ... உன் ஆள விட்டுத்தர மாட்டீயே... பரவாயில்லை .. என்னும் இடம் ஆபாசம் என்றாலும் அபத்தமாகத் தெரியவில்லை.
அது எப்படி தலைவா ? மாட்ட கட்டுன அதே கயித்துல கன்னுகுட்டியையும் கட்டப் பார்த்த .... என சரவணனாக சதிஷ் ஹீரோ சு.சியையே கலாய்ப் பதில் தொடங்கி இண்டியாகேட்டுங்கற கேட்டே இல்ல.... என நம் தலைநகர் டெல்லியை சுத்தி பார்த்தபடி பன்ச் பேசுவது ... வரை காமெடியில் கலக்கியிருக்கிறார்.ஆனாலும் ., பொண்ணு இல்லன்னாலும் உனக்குஅம்மா இருக்கு ன்றது கொஞ்சம் ஓவர் .
புல்லட் மருதுவாகவி டிவி கணேஷ் , வாஞ்சிநாதனாக சிங்கம் புலி ,பாவி
பாபுவா க யோகி பாபு , இன்ஸ், ரவிக்குமாராக ரவி மரியா , கோபியாகஸ்ரீமன் , சாமியாக
சித்ராலட்சுமணன் , சிங்கப்பூர் தீபன், சிவன்ஸ்ரீனிவாசன் எல்லோரும் கச்சிதம்.
அதிலும் யோகி பாபு .,
அவனான்னு பார்க்க சொன்னா அவனே வந்து பார்க்குற அளவுக்கு
அப்படியாடா பார்ப்பா .. பாபு ., என்பதும் , கார் பேன்ட் மேல உட்கார்ந்து பாரு
..என்பதும் யோகி பாபு வரும் காட்சியில் எல்லாம் க்ளாப்ஸ் பண்ண வைக்கிறது .
அம்மா கேரக்டர்களில் வரும் சுமித்ரா, கிரண் இருவரும் கூட பத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.அதிலும் , சு.சியும் , சுமித்ரா வும் ஹீரோயினுக்கு முன் நடத்தும் சர்க்கரை இல்லா காபி காட்சி அம்மா சென்டிமெண்ட் , கண்களில் நீர் வரவழைக்கும் கச்சிதம்.
சும்மா சொல்லக் கூடாது ... அவ செம்ம பிகரு ... ஆஹா , ஓஹோ எலெக்ஷனு ...அண்டா குண்டால் லாம் சின்னம் கேட்குமே.... உள்ளிட்ட பாடல்கள் சித்தர்த் விபின் இசையில் ஓகேரகராகம். பானு முருகனின் ஒளிப்பதிவு பலம்.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு தேவை இல்லாத சில காட்சிகளை இன்னும் கத்தரித்திருக்கலாம்.
நான், சம்பாதிச்சா மட்டும் ரூபா நோட்டுல காந்தி மதி போட்டாவா போடப்
போறான் ..... காந்தி போட்டோ தான்.. போடுவான் எனும் வசனங்கள் படத்திற்கு ப்ளஸ்
என்றாலும்., மீடியா , மற்றும் பாலிடிக்ஸை தேவைக்கு அதிகமாகவே காமெடி என்ற பெயரில்
கலாய்த்திருக்கும் வெங்கட்ரா கவனின் எழுத்து இயக்கம் சற்றே கண்ணை கட்டுகிறது.
மற்றபடி ., " முத்தின கத்திரிக்காய் - காமெடி கொஸ்து!
--------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
'லாஜிக், நீதி எல்லாவற்றையும் தூக்கிக் குப்பையில் போடு. இரண்டு மணி நேரம் படம் பார்ப்பவர்கள் ஜாலியாகச் சிரித்தாலே போதும்' - தான் இயக்கினாலும் சரி நடித்தாலும் சரி சுந்தர் சிக்கு இதுதான் கொள்கை. இந்தப் படமும் அப்படித்தான்.
மலையாளத்தில் சக்கை போடு போட்ட படத்தை தமிழில் எடுத்திருக்கிறார்கள். இயக்கம் வேங்கட்ராகவன். சிந்தர்.சி. யை விட 20வயது மூத்தவர்கள் எல்லாம் சினிமாவில் போட்டுத் தாக்கி கொண்டிருக்கும் போது, தன்னுடைய 40 ப்ளஸ் வயதை படம் பூராவும் கண்டலடிக்க வைத்து, தன்னை 'முத்தின கத்திரிக்கா' என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு பெரிய துணிச்சல் வேண்டும்! ஆக்ஷன், காமெடி என்று அசத்துகிறார் குஷ்பு புருஷன்!
தன்னுடைய வயதைப் பொருட்படுத்தாமல், 40 வயதுக்கு மேலதான் எம்.ஜி.ஆரே ஹீரோ ஆனாரு தெரியுமா? என்று சுந்தர் சமாளிக்க, 'ஆனா 40 வயதுல டெண்டுல்கர் ரிட்டயரே ஆயிட்டாரு' என்று பதில் வருவது ஹாஹா!
கதை? : கல்யாணமே ஆகாத சுந்தருக்கு பூனம் பாஜ்வாவைப் பார்த்ததும் காதல் வருகிறது.
அந்தப் பெண், சின்ன வயதில் தான் லவ்ஸ் விட்ட கிரணின் மகள்தான் என்று தெரியவருகிறது. இடையே அரசியலில் தான் பெரிய ஆளாக வேண்டும் என்று சில தகிடுத்தத்தங்களையும் சுந்தர் செய்ய, கல்யாணம் நடந்ததா? அரசியலில் ஜெயித்தாரா என்பதுதான் ஸ்டோரி.
அப்போதுதான் வெடித்த வௌ்ளரிப்பழம் மாதிரி இருக்கிறர் பூனம் பாஜ்வா. பாடல் காட்சியில் கரெக்ட்டாய் க்ளாமர் காட்டுகிறார்! ஹிஹி, ராசிக்கு கிரண்.
அரசியலில் நடக்கும் அழிச்சாட்டியங்களை அசால்டாகக் காட்டியிருக்கிறார்கள்!
சதீஷ், வி.டி.வி. கணேஷ், சிங்கம்புலி எல்லாரும் புன்னகைக்க வைக்கிறார்கள்.
சித்தார்த் விபின் இசையில் 'எனக்கென்ன ஆச்சோ' பாடல் க்யூட்...
முத்தின கத்திரிக்கா.. - சுவை அதிகம்
- குமுதம் ரேட்டிங் - ஓகே
----------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
பச்சை மிளகாயை சாம்பாரில் இட்டுச் சமைத்துச் சாப்பிடுவதற்கும், அப்படியே சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா? அரசியல் நையாண்டிப் படங்களில் இழையோடும், கேலியால் எள்ளுவது ஒருவகை; நேரடியாகப் போட்டுத் தாக்குவது இன்னொரு வகை. இந்தப் படம் மிளகாயைக் 'கறக் மொறுக்' என சமைக்காமல் சாப்பிடும் ரகம்.
கதாநாயகனுக்கு 40 வயது எனத் தயங்காமல் ஒத்துக் கொண்டிருக்கும் புதுமைக்கு ஒரு ஜே! தன்னுடைய முன்னாள் காதலியின் மகளையே, காதலிப்பதாகவும் இனனொரு புதுமை செய்திருக்கிறார்கள். ஆனால் மாமியாம் மருமகனுமே வாஞ்சையான பார்வைகளை பரிமாறிக் கொள்வது விரசம் என்றால், சு.சி. ஆடை மாற்றும் காட்சி விரசத்தின் உச்சம்.
இடைவேளை வரை படம் மிக மெதுவாக நகர்கிறது. அதன்பின் ஓரளவு பரவாயில்லை. ஆனால் லெட்டர் பேடு கட்சிக்காரருக்கு தில்லி வரை செல்வாக்கு இருப்பதாகக் காட்டியிருப்பது காதில் வைத்த கூடைப்பூ!
தேர்தல் சமயத்தில் தலைவர் சைக்கிளில் பவனி வருவது, சாலையோரக் கடையில் தேநீர் அருந்துவது, நடைப் பயணம் மேற்கொள்வது, குழந்தைக்குப் பெயர் வைப்பது, கமிஷன் வாங்குவது என சமீபத்திய அரசியல் நிகழ்ச்சிகளை அப்பட்டமாகக் கிண்டல் செய்திருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறவும், காதலியைக் கைப்பிடிக்கவும் சுந்தர் சி. செய்யும் அஜால் குஜால்கள் எதிர்பாராத ட்விஸ்ட்கள்.
பிச்சைக்காரர்களைக் கட்சிக்காரர்களுக்கும் கூத்தில் ஓரளவு சிரிப்பு வருகிறது. யோகிபாபு, வி.டி.வி. கணேஷ், சிங்கம்புலி போன்றவர்கள் இருந்தும் அவர்களது சேட்டை சிரிப்புக்குப் பதில் எரிச்சலையே கிளப்புகிறது. சதீஷின் நகைச்சுவை தேவலை. உடல்மொழியும் அபாரம். மீடியா நபர்களைக் கலாய்த்திருப்பது ஓவர்.
சற்றே பூசினாற்போல இருக்கும் பூனல் பஜ்வா, நடிப்பில் இன்னும் ஆரம்ப கட்டம்தான்.
போலீஸ்னா போலீஸ் வேலைதான் பார்ப்பாங்க; பொறுக்கின்னா பொறுக்கி வேலைதான் பார்ப்பான். அரசியல்வாதி மட்டும்தான் ஆல்ரவுண்டர் மாதிரியான குண்டூசி வசனங்கள் ஆங்காங்கே உண்டு.
காதலியின் மனம் கவர, நாயைக் கொஞ்ச நினைத்து அடித்துவிடும் காட்சியில் சிரிப்பலைகள்!
மொத்தத்தில் பொருத்தமான தலைப்பு!
கோவை முருகன் திரையரங்கில் படம் பார்த்த பன்னிமடை குமார் கருத்து: ட்ரைலரப் பார்த்து நெம்ப எதிர்பார்த்து வந்தனுங்க. ஆனா படம் முச்சூடும் அரசியல் பத்தியே இருக்குதுங்க. மண்ட காஞ்சி போயிட்டுதுங்க. படம் ஆகாவளிங்க.