அரண்மனை 4,Aranmanai 4
Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பென்ஸ் மீடியா, அவ்னி சினிமேக்ஸ்
இயக்கம் - சுந்தர் சி
இசை - ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு - சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு
வெளியான தேதி - 3 மே 2024
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவின் முதலாவது நான்காம் பாகத் திரைப்படம். இதற்கு முன்பு வெளியான இப்படத்தின் மூன்று பாகங்களுமே பேய்ப் படங்களாக இருந்தது. இதுவும் ஒரு பேய்ப் படம்தான். ஆனால், முந்தைய படங்களைக் காட்டிலும் தொழில்நுட்பத் தரத்தில் மிகவும் முத்திரை பதித்துள்ள படமாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு கிராபிக்ஸ் காட்சிகள் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு படக்குழு உழைத்திருக்கிறது.

இந்த 2024ம் ஆண்டில் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பதில் இதுவரை வந்த படங்கள் தடுமாறின. அந்த தடுமாற்றத்தை இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் சுந்தர் சி சரி செய்திருக்கிறார். குழந்தைகளுடன், குடும்பங்களுடன் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

வக்கீலாக இருப்பவர் சுந்தர் சி. அவரது தங்கை தமன்னா பத்து வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி காதலனுடன் திருமணம் செய்து கொண்டவர். காட்டுப்பகுதியில் உள்ள கிராமமான கோவூர் என்ற இடத்தில் காதலன் சந்தோஷ் பிரதாப், ஒரு மகள், ஒரு மகனுடன் வசித்து வருகிறார் தமன்னா. சந்தோஷ் பிரதாப், தமன்னா திடீரென மர்மமாக இறந்து போகிறார்கள். அதைக் கேட்டு சுந்தர் சி, அந்த கிராமத்திற்குப் போகிறார். தங்கை தமன்னா, மாப்பிள்ளை சந்தோஷ பிரதாப் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'அரண்மனை' படத்தின் முந்தைய பாகங்களிலும் ஒரு அரண்மனை, பல கதாபாத்திரங்கள் இருக்கும். இந்தப் படத்தில் அரண்மனை இருக்கிறது, அந்த பல கதாபாத்திரங்களை, சில கதாபாத்திரங்களாகக் குறைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. சுவாரசியமான திரைக்கதை, பரபரப்பான காட்சிகள், அசத்தலான கிராபிக்ஸ் என இரண்டரை மணி நேரமும் நம் கண்களை அகல வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

முந்தைய பாகங்களில் அண்ணனாக வந்து என்ன செய்தாரோ அதையேதான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் சுந்தர் சி. இந்தப் படத்தில் கூடுதலாக அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை தனக்காக அமைத்துக் கொண்டுள்ளார். காதல் காட்சிகள் இல்லாமல் இருப்பது ஆச்சரியம்.

தமன்னா, ராஷி கண்ணா இருவரது கிளாமர் பாடலைப் பார்த்த ரசிகர்கள் படத்தில் அது எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆனால், படம் முடிந்த பின்தான் அந்தப் பாடலை சேர்த்திருக்கிறார்கள். படத்திற்குள் அப்படிப்பட்ட பாடலை வைக்க இடமேயில்லை. தமன்னா படம் முழுவதும் தனது குழந்தைகளுக்காக ஏங்குகிறார். பேயாக இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். வழக்கமான மேக்கப் இல்லாமல் ஒரே ஒரு புடவையில் படம் முழுவதும் வந்து போகிறார்.

சுந்தர் சி ஜோடியாக ராஷி கண்ணா இருப்பார் என்று பார்த்தால் அதற்கான காட்சிகளையும் வைக்காமல் விட்டுவிட்டார்கள். அரண்மனையின் வாரிசாக நடித்திருக்கிறார் ராஷி கண்ணா. இவருக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாமோ ?.

படத்தின் நகைச்சுவைக்கு யோகிபாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, சேஷு கூட்டணி பொறுப்பேற்றிருக்கிறார்கள். யோகிபாபு, கணேஷ் இருவரது கூட்டணி அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறது.

ஹிப்ஹாப் தமிழா பின்னணி இசை காட்சிகளை பரபரப்பாய் மாற்றியிருக்கிறது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு, குருராஜ் கலை இயக்கம், கிராபிக்ஸ் காட்சிகள் அரண்மனையின் அரணாக அமைந்துள்ளன.

படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் பேய் பற்றிய குட்டிக் கதை. அதன்பின் அந்த பேய் பற்றிய விளக்கத்தை ஒரு சாமியார் சொல்வது ஆகியவை மனதில் பதியவில்லை. அதை இன்னும் சுலபமாக சொல்லியிருக்கலாம். இருப்பினும் இரண்டரை மணி நேரமும் படம் பரபரப்பாக நகர்ந்து ரசிக்க வைக்கிறது.

அரண்மனை 4 - 2024ன் ஆட்டம் ஆரம்பம்

 

அரண்மனை 4 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அரண்மனை 4

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓