3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - பிஎஸ் மித்ரன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா
வெளியான தேதி - 21 அக்டோபர் 2022
நேரம் - 2 மணி நேரம் 46 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

'இரும்புத் திரை' மூலம் டிஜிட்டல் உலகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என தனது முதல் படத்திலேயே வியக்க வைத்தவர் இயக்குனர் பிஎஸ் மித்ரன். அதற்குப் பிறகு அவர் இயக்கிய 'ஹீரோ' படத்தில் நல்ல கருத்தை எடுத்துக் கொண்டாலும் கொஞ்சம் சறுக்கியிருந்தார். அந்த சறுக்கலை இந்த 'சர்தார்' மூலம் சரி செய்திருக்கிறார்.

'ஸ்பை, ஏஜன்ட்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உளவாளி ஒருவரைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் தண்ணீர் பற்றிய கருத்துதான் மையம். எதிர்காலத்தில் இப்படியெல்லாம் கூட நடக்கலாம் என்ற கற்பனையை நம்பும்படியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கார்த்தி இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர். ஒரு போராட்டத்தில் கலந்து கொண்ட லைலா மர்மமான முறையில் கொல்லப்பட்டதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் கார்த்தி. அதன் பின்னணியில் பல மர்மமான விஷயங்கள் இருப்பது தெரிய வருகிறது. நாடு முழுவதும் குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய ஆரம்பிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்ட தனது அப்பா சர்தார் பற்றி ரகசியங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்திய அரசின் உளவுத் துறையான ரா-வின் உளவாளி சர்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் என இரு வேடங்களில் கார்த்தி. இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நன்றாக வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் கிராமத்தில் கூத்து கட்டும் சந்திரபோஸ், எப்படி உளவாளி சர்தார் ஆக மாறுகிறார் என்பது சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் கார்த்தியை விடவும், உளவாளி கார்த்திக்கான ஹீரோயிசம் மிரட்டலாக அமைக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் சிறையிலிருந்து தப்பிக்கும் சண்டைக் காட்சி, ரா அலுவலகத்தில் நடக்கும் சண்டைக் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஆகியவை அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன. அவற்றில் கார்த்தியின் ஆக்ஷன் நடிப்பு அசத்தலாக அமைந்துள்ளது. கார்த்தியின் வெற்றிப் படங்களிலும், முக்கியமான கதாபாத்திரங்களிலும் இந்தப் படமும் நிச்சயம் இடம் பிடிக்கும்.

கதாநாயகிகளுக்கு அதிக வேலையில்லை. மகன் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா. அப்பா கார்த்தியின் இளமைக் கால காதலியாக ரஜிஷா விஜயன். இருவருக்கும் குறைந்த காட்சிகள்தான் வந்து போகும் காட்சிகளாக இல்லாமல், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. லைலா கொஞ்ச நேரமே வந்தாலும் நல்ல விஷயத்திற்காகப் போராடி தன் உயிரை இழக்கிறார்.

மத்திய அரசுக்காக பல திட்டங்களை செயல்படுத்திக் கொடுத்து, பின் கார்ப்பரேட் முதலாளியாக மாறி, சீனாவின் ஏஜன்ட் ஆகவும் செயல்படும் வில்லனாக சங்கி பாண்டே. கார்த்தியின் வளர்ப்பு அப்பாவாக முனிஷ் காந்த். லைலாவின் மகனாக ரித்விக் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

மூன்றாம் உலகப் போர் தண்ணீரால்தான் வர வாய்ப்புள்ளது என ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். உலகத்தில் ஒரு பக்கம் தண்ணீர்ப் பஞ்சத்தால் தவிக்கிறார்கள், மற்றொரு பக்கம் அளவக்கதிகமான தண்ணீரால் பாதிப்புகளும் வருகிறது. இந்தக் காலத்தில் 'வாட்டர் பாட்டில்' என அடைத்து வைக்கப்படும் தண்ணீரால் ஒரு பெரும் வியாபாரம் நடந்து வருகிறது. எதிர்காலத்தில் தண்ணீரை அனைவரும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மித்ரன். படத்தில் சில விஷயங்கள் கொஞ்சம் கூடுதலாக சொல்லப்பட்டிருப்பது போலத் தோன்றினாலும் அவை எதிர்காலத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. படம் பார்த்த பிறகு தண்ணீர் பாட்டில் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு.

ஜிவி பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் ஏமாற்றமே. 'ஏறுமயிலேறி…' பாடல் மட்டும் பரவாயில்லை. இம்மாதிரியான படங்களைப் பார்க்கும் போது நடிகர்கள் பேசும் வசனங்கள் புரிய வேண்டும். படத்தில் இடைவெளி இல்லாமல் பின்னணி இசையை வாசித்துத் தள்ளியிருக்கிறார் ஜிவி பிரகாஷ். சவுண்ட் மிக்சிங் செய்தவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வசனங்கள் தெளிவாகக் கேட்காத அளவிற்கு மிக்சிங் செய்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் உளவாளிகள் பற்றி சில காட்சிகள் இடம் பெறுகிறது. ஒன்றுமே புரியவில்லை. வசனங்கள் மூலம் புரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் புரியாமல் போவது படத்திற்கு மைனஸ். இயக்குனராவது கவனித்திருக்க வேண்டும். இரண்டே முக்காமல் மணி நேரம் படம் இருப்பது நீளம்தான். இரண்டரை மணி நேரங்களுக்குள் படத்தை முடித்திருக்கலாம்.

சர்தார் - உண்மை உளவாளி

 

சர்தார் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சர்தார்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

கார்த்தி

நடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசு கார்த்தி. 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி பிறந்த கார்த்தி, அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். அப்படிப்பட்டவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே கிராமத்து முரட்டு இளைஞனாக அனைவரையும் கவர்ந்த கார்த்தி, தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு, ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

மேலும் விமர்சனம் ↓