3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் மற்றும் பலர்
இயக்கம் - பி.எஸ்.மித்ரன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரி

தமிழ் சினிமாவில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் வருவது அரிதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை எடுப்பதற்கு தனிப்பட்ட சில ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டியதிருக்கும்.

மக்களுக்குத் தெரியாத பல விஷயங்களை திரைக்கதையிலும், காட்சிகளிலும் அறிவுபூர்வமாக நுழைக்க வேண்டும். படம் பார்க்கும் ரசிகர்கள் பொய் சொன்னால் கூட நம்பும் விதமாக அவை இருக்க வேண்டும்.

ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அம்மாதிரியான ஆராய்ச்சிகளில் இறங்கி பல தகவல்களைத் திரட்டி இப்படிப்பட்ட படங்களைக் கொடுக்கிறார்கள். அந்த ஒரு சில இயக்குனர்களில் இப்படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் நிச்சயம் இடம் பெறுவார்.

இன்று சாதாரண மக்கள் கையிலும் புழங்கிக் கொண்டிருக்கும் 'ஸ்மார்ட் போன்'களால் எந்த மாதிரியான ஆபத்துகள் வரலாம், நமது தொலை பேசி எண்ணைத் தெரிந்து வைத்திருப்போர் நம்மைப் பற்றி வேறு என்ன விஷயங்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என படத்தில் புட்டுப்புட்டு வைக்கிறார்.

ராணுவ அதிகாரியாக இருக்கிறார் விஷால். அவருடைய தங்கையின் திருமணத்தை நடத்துவதற்கு அவருக்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. அதனால், அப்பா டெல்லி கணேஷ் பெயரில் ஜெராக்ஸ் கடை நடத்தப் போவதாகச் சொல்லி வங்கியில் 6 லட்ச ரூபாய் கடன் பெறுகிறார். ஆனால், திடீரென அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த அந்த 10 லட்ச ரூபாயும் காணாமல் போய்விடுகிறது. அது எப்படி காணாமல் போனது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை திடுக்கிடும் தகவல்களுடன் திரைக்கதை அமைத்து படத்தைப் பரபரப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மித்ரன்.

இரும்புத்திரை மாதிரியான கதைகள் விஷாலுக்கு இருட்டுக் கடை அல்வா சாப்பிடுவது போல. காட்சிக்குக் காட்சி அவருடைய அதிரடியில் அலற வைக்கிறார். இதற்கு முன் நடித்த படங்களில் விட இந்தப் படத்தில் நகைச்சுவையிலும், மெச்சூரிட்டியான நடிப்பிலும் ஒரு படி மேலே ஏறியிருக்கிறார். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் எந்த ஒரு நடிகருக்கும் வெற்றி நிச்சயம். சில படங்களில் தன்னுடைய வளர்ச்சியை இழந்த விஷால் இந்தப் படத்தில் சரியான கதையைத் தேர்வு செய்து அந்த இழப்புகளை ஈடு செய்துவிடுவார். இதே மாதிரியான பாதையில் சென்றால் விஷாலை எந்த இரும்புத் திரையும் தடுத்து நிறுத்திவிடாது.

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் வந்த படங்களில் அழகான ஹீரோயின் இருந்தும் காதல் காட்சிகளே இல்லாத படமாக இந்தப் படம் இருக்கும். மனநல மருத்துவராக ஒரு மெச்சூர்டு தோற்றத்தில் சமந்தா. எந்த ஒரு காட்சியிலும் துளி கூட கிளாமர் இல்லாமல், தேவையற்ற பாடல்கள் இல்லாமல் இருக்கும் ஒரு படத்தில், ஒரு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருப்பது ஆச்சரியமே.

விறுவிறுப்பான கதையில் ரோபோ சங்கரின் நகைச்சுவையும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. கதையோடு சேர்ந்த கதாபாத்திரமும், காட்சிகளோடு சேர்ந்த நகைச்சுவையும் அதற்குக் கை கொடுத்திருக்கிறது.

படத்தின் வில்லன் அர்ஜுன். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை அவர் விவரிக்கும் போது வியப்பாக இருக்கிறது. படத்தில் இடம் பெறுவது போல வங்கிக் கணக்குகளில் பணம் எல்லாம் நொடிக்கு நொடி காணாமல் போனால் இனி யாருமே ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யவே மாட்டார்கள். 'மங்காத்தா' படத்திற்குப் பிறகு ஜென்டில்மேன் வில்லனாக அர்ஜுன் அசத்தல்.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. கதையோடும், காட்சிகளோடும் இணைந்தே பயணிக்கிறது இசை. தேவையற்ற பாடல்கள் படத்தில் இல்லாதது பெரிய ஆறுதல்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு, ரூபனின் படத் தொகுப்பு இந்த டெக்னிக்கல் படத்தின் சிறப்பான டெக்னிக் அம்சங்கள். கம்யூட்டர் சார்ந்த தொழில்நுட்ப அரங்குகளில் வியக்க வைத்திருக்கிறார் கலை இயக்குனர் உமேஷ் ஜே குமார். திலீப் சுப்பராயனின் அதிரடி ஆக்ஷ்ன் அருமை. அதிலும், அந்த சுரங்கப்பாதை சண்டைக் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் குறை என்று சொன்னால் நீளம் தான். விஷால் அவருடைய சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்ற அப்பா, தங்கையைச் சந்திக்கும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். இடைவேளைக்குப் பின்னர் அர்ஜுன் யார் என்பதைக் கண்டுபிடிப்பதிலும், அவரை விரட்டுவதிலும் இன்னும் சில கூடுதல் காட்சிகளை சேர்த்திருக்கலாம்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தேவையில்லாமல் நம் மொபைல் எண்கள், மெயில் முகவரிகள், தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்குப் பகிர்வதை நாம் முற்றிலும் தவிர்ப்போம். இனி, நமக்கு வரும் பிசினஸ் அழைப்புகளையும் தவிர்ப்போம். மொபைல் போன்கள் நம் தனிப்பட்ட டைரியாக இருக்கும் பட்சத்தில் பயமில்லை, அதைப் பகிர ஆரம்பித்தால் எந்த இரும்புக்கரமும் அதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க முடியாது.

ஆதார் கார்டுகளின் பாதுகாப்பு பற்றி நாட்டில் பல விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்த சமயத்தில் ஆதார் கார்டு ரகசியங்கள் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை என்பதை இந்தப் படத்தில் கற்பனையாகக் காட்டியிருப்பது மக்களிடம் ஒரு பயத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.

இரும்புத்திரை - வெளிச்சம்!

 

பட குழுவினர்

இரும்புத்திரை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓