ஜப்பான்,Japan

ஜப்பான் - வீடியோ ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - ராஜு முருகன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - கார்த்தி, அனு இம்மானுவேல்
வெளியான தேதி - 10 நவம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 36 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

கமர்ஷியல் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்துள்ள கார்த்தியும், அதற்கு நேரெதிராக கலைப் படங்களாக எடுத்த இயக்குனரான ராஜு முருகனும் முதல் முறை இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இது கார்த்தியின் 25வது படம்.

கதாபாத்திரங்களில் காட்டிய அக்கறை, கவனத்தை படத்தின் கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் இந்தப் படமும் 'ஜப்பான்' நாட்டைப் போன்றே பேசப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப் போரில் கடுமையான அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகி வீழ்ந்த நாடாக இருந்தாலும் எழுந்த நாடாக மாறியது ஜப்பான். அது போல தான் வீழ்ந்தாலும் எழ வேண்டும் என தனது அம்மா 'ஜப்பான்' எனப் பெயர் வைத்ததாக கார்த்தி படத்தில் ஒரு வசனம் பேசுகிறார். அது போல படத்தில் கார்த்தி பெயர் வாங்குகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மையக் கரு.

ஒரு அருமையான அம்மா சென்டிமென்ட் படத்தில் இருக்கிறது, ஆனால் அது கிளைமாக்ஸில் தான் வருகிறது. அதை படத்தின் இடையில் வைத்திருந்தால் இன்னும் சென்டிமென்ட்டாக இருந்திருக்கும்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. அதை நகைத் திருடனான கார்த்தி தான் செய்திருப்பார் என காவல்துறை தனிப் படைகளை அமைத்து விசாரணையை ஆரம்பிக்கிறது. சுனில் தலைமையில் ஒரு படையும், விஜய் மில்டன் தலைமையில் மற்றொரு படையும் கார்த்தியைத் தேடி புறப்படுகிறது. இருவருமே கார்த்தியை நெருங்கியபின் தான் அவருக்கு அந்தக் கொள்ளை பற்றிய பல விவரங்கள் தெரிய வருகிறது. தன் பெயரை வைத்து வேறு யாரோ அதைச் செய்திருக்கிறார்கள் என அந்தத் திருடனைத் தேடி கார்த்தியும் போகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஜப்பான் கதாபாத்திரத்திற்கென தனி ஹேர்ஸ்டைல், ஆடை வடிவமைப்பு, பேச்சு என தன்னை நிறையவே மாற்றிக் கொண்டிருக்கிறார் கார்த்தி. அவரைப் பார்த்தால் ஒரு நகைத் திருடன் என்று நம்பும்படி அந்தத் தோற்றமும், அவரது செயலும் நம்ப வைக்கிறது. படம் முழுவதும் அவரைச் சுற்றியே நகர்வதால் மற்றவர்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாத காட்சிகள் என விரல் விட்டு எண்ணிவிடலாம். கார்த்தி கதாபாத்திரத்திற்கு 'எய்ட்ஸ்' இருக்கிறது என்பது படத்தில் எந்தவிதத்திலும் பயன்படவில்லை. ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு படம் முடியும் போது நல்ல பெயர் வர வேண்டும் என முடித்திருந்தாலும் அது 'டச்சிங்' ஆகவே உள்ளது.

படத்தில் ஒரு கதாநாயகி வேண்டுமென அனு இம்மானுவேல் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தை வைத்துதான் ஒரு 'டுவிஸ்ட்' படத்தில் வருகிறது. கொஞ்ச நேரமே வந்து காணாமல் போகிறார் அனு.


மற்ற கதாபாத்திரங்களில் சுனில் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் மற்றவர்களை விடவும் முந்தி நிற்கிறது. கார்த்தி கூடவே இருப்பவராக வாகை சந்திரசேகர். இயக்குனர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் கூட நடிகராகி, யதார்த்தமாய் நடித்திருக்கிறார். புதிய வாய்ப்புகள் வரலாம். கேஎஸ் ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ் சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

ஜிவி பிரகாஷ்குமார் இசை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, பாடல்களிலும் ஏமாற்றியிருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பல இடங்களை காட்சிகளின் வேகத்திற்கேற்ப பதிவு செய்துள்ளது.

படத்தின் ஆரம்பத்திலிருந்து இடைவேளை வரை திரைக்கதை எதையெதையோ நோக்கி இலக்கில்லாமல் பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின்தான் படத்தின் கதைக்குள்ளேயே வருகிறார்கள். 200 கோடி நகைகள் கொள்ளை, போலீஸ் விசாரணை, திருடன் என பரபரப்பான ஆடு, புலி ஆட்டத்தை ஆடியிருக்கலாம். ஆனால், அதற்கான காய் நகர்த்தல் சரியில்லை.

ஜப்பான் - மினுக்கு

 

ஜப்பான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஜப்பான்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

கார்த்தி

நடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசு கார்த்தி. 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி பிறந்த கார்த்தி, அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். அப்படிப்பட்டவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே கிராமத்து முரட்டு இளைஞனாக அனைவரையும் கவர்ந்த கார்த்தி, தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு, ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

மேலும் விமர்சனம் ↓