Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

குக்கூ

குக்கூ,Cuckoo
 • குக்கூ
 • தினேஷ்
 • மாளவிகா
 • இயக்குனர்: ராஜூ முருகன்
19 ஏப், 2014 - 22:58 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » குக்கூ

தினமலர் விமர்சனம்குக்கூ, கண் தெரியாதவர்களின் கலர்புல் காதல், காமெடி, உணர்ச்சிகள், கண்ணீர் பின்னணிகள் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை இதுவரை யாரும் திரையில் காட்டிராத சுவாரஸ்யத்துடன், கண்களுடைய எல்லோரும் கண்கொட்டாமல் ரசிக்கும்படியும், பார்வையற்றவர்களுக்காக கடவுளிடம் கண்ணீர் மல்க யாசிக்கும்படியும் தன் முதல் படத்திலேயே பக்காவாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன் என்றால் மிகையல்ல!


கதைப்படி, மேடை கலைக்குழு ஒன்றில் இளையராஜா பாடல்களை பாடியபடி எல்லோரையும் வசியபடுத்தும் பார்வையற்ற தமிழ் எனும் அட்டக்கத்தி தினேஷ், மீதி நேரங்களில் சென்னை, மின்சார இரயில்களில், பிற பார்வையற்ற இளைஞர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன பொருட்களை, பொம்மைகளை விற்று ஜீவனம் நடத்துகிறார். தான் இதுமாதிரி பொருட்களை வியாபாரயம் செய்யும் மின்சார இரயில்களில், அடிக்கடி பிரயாணித்து ஆசிரியை ஆக படிக்கும், தன் மாதிரியே பார்வையற்ற சுதந்திரக்கொடி எனும் அறிமுகநாயகி மாளவிகா மீது தமிழ் தினேஷூக்கு முதலில் மோதலும், பின் காதலும் பிறக்கிறது.


தன் காதலை சுதந்திரக்கொடியிடம் ஒரு சிடியில் பேசி நண்பர் உதவியுடன் தமிழ் வெளிப்படுத்த போகும் தருவாயில், நாயகி சுதந்திரத்திற்கு அவருக்கு பல விதத்திலும் உதவும் இளம் சமூக சேவகர் ஒருவர் மீது காதல் இருப்பது தெரிய வருகிறது. கூடவே பார்வை உடைய ஒருவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் நாயகியின் லட்சியமும் தெரிய வருகிறது. அதனால், சுதந்திரக்கொடி பையில் வைத்த சி.டி.யை திரும்ப எடுக்கவும் முடியாமல், காதல் அம்பை தொடுக்கவும் முடியாமல் அறை திரும்புகிறார். இதுஒரு பக்கம் என்றால் மற்றொருபக்கம், சுதந்திரகொடியின் முரட்டு குப்பத்து அண்ணன், தன் ஆட்டோ ஓட்டுநர் நண்பன் செய்யும் பண உதவிகளுக்கு கைமாறாக சுதந்திரத்தை அவனுக்கே கட்டி வைக்க சபதம் பூண்டிருக்கிறார் எனும் விவரமும் தெரியவருகிறது.


நாயகியின் லட்சியம், நாயகி சுதந்திரத்தின் முரட்டு அண்ணனின் சபதம்... உள்ளிட்ட சகலமும் தவிடுபொடியாகி அந்த பார்வையற்ற அழகி சுதந்திரக்கொடி எனும் மாளவிகா, நம் பார்வையற்ற தமிழ் எனும் தினேஷூக்கு கிடைத்தாரா.? அல்லது இளையராஜாவின் சோகப்பாடல்களும், கனவு டூயட்டுகளுமே நம் நாயகருக்கு நிரந்தரமானதா..? என்பதற்கு வித்தியாசமும், விறுவிறுப்பாகவும், நெஞ்சை உலுக்கும் திருப்பங்களுடன் விடை சொல்கிறது குக்கூ திரைப்படத்தின் மீதிக்கதை!


காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... இதில் கண் தெரியாதவர்கள்குள்ளும் காதல் உண்டு! என்பதை கண் தெரிந்த ரசிகர்கள் எல்லோரும் கண் அயராமல் கண்டுகளிக்கும்படி கலர்புல்லாக காட்சிக்கு காட்சி சொல்லி இருக்கும் காரணத்திற்காகவே இயக்குநர் ராஜூ முருகனுக்கு தயக்கமின்றி ஒருடஜன் ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்!


தமிழ் கதாபாத்திரத்தில் பார்வையற்ற இளைஞராக வாழ்ந்திருக்கிறார் நாயகர் தினேஷ் என்று தான் சொல்ல வேண்டும். மின்சார இரயில்களிலும், இரயில் நிலையங்களை ஒட்டியும் நாம் அவ்வப்போது கூட்டமாக பார்க்கும் பார்வையற்ற இளைஞர்களில், யாரோ ஒருவரை நம் கண்முன் காட்சிக்கு காட்சி கொண்டு வந்து நிறுத்தி, நம் கண்களில் கண்ணீர் துளிகளை எட்டிபார்க்க செய்து விடுகிறார். கதாநாயகி முதலில் நாயகருடன் ஏற்படும் முட்டல் மோதலில், முதல்நாள் நாயகருக்கு ஏற்படுத்திய நெற்றி காயத்தில், மறுநாள் கைவைத்து கடவுளை பிரார்திக்கும் காட்சியில், ஹீரோவின் மெய்சிலிர்ப்பு ஆகட்டும், பின்னணியில் புல்லாங்குழல் வாசித்துப்போகும் பெரியவர், கலர் பலூன்கள், பஞ்சுமிட்டாய்கள் கொண்டு செல்லும் வியாபாரிகள் என காட்டுமிடத்தில் நாயகர் தினேஷின் பிலீங், படம் பார்க்கும் நம்மையும் அவர்களின் காதலுக்குள் அழைத்து போய்விடுகிறது. அதன்பின் தமிழ்-தினேஷூக்கு ஏற்படும் இன்பம், துன்பம், காதல், கலாட்டா, காமெடி, அடி, உதை, இழப்பு, ஏற்பு... எல்லாவற்றிலும் பார்வையற்ற பாத்திரமென்றாலும்... ரசிகனான நம்மை, அந்த இடத்தில் தமிழ் தினேஷாகவே பொருத்திக் கொண்டும், புகுத்திக் கொண்டும் படம் முழுதையும் பார்க்க முடிவது தான் குக்கூவின் பெரிய பிளஸ்! இதற்கு பெரிய காரணம் இயக்குநர் ராஜூ முருகன் என்றாலும், தினேஷின் உயிரை கொடுக்கும் நடிப்பும், பாத்திரமும் முக்கிய காரணியாகும்! குட் ஆக்டிங்! கீப் இட் அப் தினேஷ்!!


அட்டக்கத்தி தினேஷ் மாதிரியே அறிமுக நாயகி மாளவிகா மேனனும் பார்வையற்ற பெண்ணாக மிரட்டி இருக்கிறார் மிரட்டி! இரண்டாவது சந்திப்பிலேயே நாயகர், தன்னை நான்கு ஸ்டாப் தள்ளி இறக்கி விட வைத்த கொடூரம் கண்டு, அம்மணி மாளவிகா பொங்குவதும், அதற்காக அடுத்தமுறை நாயகருக்கு அவர் தரும் அதிரடியும் ஒரு நிமிடம் நம்மை ஆடிப்போகச் செய்து விடுகிறது. லூசு, லூசு... என அம்மணி, தினேஷை கொஞ்சும் இடங்களில் ஆகட்டும், செக்யூரிட்டியாக ஏ.டி.எம். வாசலில் சாப்பிட்டபடி இருந்து கொண்டே இல்லை என சொல்லும் அண்ணன் பற்றி, அண்ணி வச்ச மீன் குழம்பு வாசனை எனக்குத் தெரியாதா என தோழியிடம் தன் மனப்பக்குவத்தை வெளிப்படுத்தும் இடத்தில் ஆகட்டும், தினேஷிடம் மனதை பறிகொடுக்கும் இடங்களில் ஆகட்டும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார் அம்மணி!


மேடை கலைக்குழுவில் எம்.ஜி.ஆர்., அஜீத், விஜய்யாக வலம் வரும் நட்சத்திரங்கள் சந்திரபாபுவாக 3 மனைவிகளின் கணவனாக கலக்கி, கலைகுழுவையும் நடத்தும் ஈஸ்வர், ஆடுகளம் முருகதாஸ், இயக்குநர் ராஜூ முருகன் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


சந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.?), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.


அண்ணனை விட தம்பிக்கு தான் பவர்..., இருட்டில் கிடைத்த சுதந்திரம்..., தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு ஷொட்டு வைக்க தூண்டுகிறது.


என்னதான் உண்மை என்றாலும் பார்வையற்றவர்களை பிடிவாதக்காரர்கள், நினைத்ததை நினைத்த மாத்திரத்திலேயே செய்து முடிக்க நினைக்கும் அடம்பாவிகள், என்றெல்லாம் சொல்லாமல் சொல்லி சித்தரித்து இருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு குட்டு வைக்கவும் தோன்றுகிறது.


குக்கூ என சத்தமிடும் கதாநாயகியின் கடிகாரத்திற்கும், ஒரு அப்பா இமேஜை கொடுத்து அதிலும் சென்டிமென்ட்டை புகுத்தியிருக்கும் இயக்குநர் ராஜூ முருகன், ஒரு சில இடங்களில் நீள அகலங்களை சற்றே குறைத்து இருந்தார் என்றால் குக்கூ இன்னும் அழகாக கூவியிருக்கும்.


ஆனாலும், குக்கூ - செம கிக்கூ..., தயாரிப்பாளர்களுக்கும், புதுமை விரும்பும் ரசிகர்களுக்கும் ஒருசேர லக்கூ!---------------------------------------------------------------------கல்கி சினி விமர்சனம்

இந்தப் பரந்த உலகம் அழகா? அழகில்லையா? என்றே தெரியாம தங்களோட எண்ணங்களுக்கு அழகூட்டி பார்க்கிற பார்வையிழந்த மனிதர்களோட இரண்டரை மணி நேரம் பயணித்த அனுபவம் "குக்கூ.


யார் எப்படி இருப்பார்கள், கலர்ன்னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க முடியாத பார்வையிழந்த ஒவ்வொருத்தரும், ப்ரைல் மூலமாக ஆசிரியர் பணிக்காகப் படிக்கறதும், நடந்து வர்ற சத்தத்த வச்சி யார் வர்றாங்கன்னு கண்டு பிடிக்கிறதும், எந்தவொரு பொது இடமா இருந்தாலும் தங்களுக்குப் பார்வையில்லைங்கிற குறையே தெரியாதபடி பார்வையுள்ள மனிதனை விட பக்குவப்பட்டவங்களா நடந்துக்கறதும் அழகு. இந்த அழகான கூடாரத்துலதான் பயணிக்கிறாங்க தமிழ் (அட்டக்கத்தி தினேஷ்), சுதந்திரக்கொடி (புதுமுகம் மாளவிகா). கொஞ்சம் கடலை, கிண்டல், காமெடி, கேலி, வைராக்யம்ன்னு கலந்து கட்டுற திரைக்கதைல எல்லாத்தையும் மீறி தமிழ், சுதந்திரக் கொடி காதல் ஒண்ணு சேருதாங்கிறதுதான் க்ளைமாக்ஸ்.


நாடகக்குழு, தமிழோட நண்பரா வர்றவர், "ஆடுகளம் முருகதாஸ்னு எல்லாரும் அவங்கவங்களுக்குன்னு கொடுத்த காமெடிக் காட்சில அருமையா நடிச்சிருக்காங்க. ஒவ்வொருத்தரும் தங்களுக்கான கேரக்டரை பக்குவமா செய்ய, எல்லாத்தையும் கோத்து நம்மள சீட்ட விட்டு நகரவிடாமல் முடிச்சுப் போட்டு விடுவது தமிழ், சுதந்திரக் கொடியின் காதல்.


தன்னோட காதலரைக் கட்டிப்பிடிச்சு எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறதும், ஹீரோ மாதிரி போஸ்ட் கம்பத்துல ஏறி காதலியோட பேசுறதும் கலக்கல்! வில்லனே இல்லாத காதல் கிடையாதுங்கிற மாதிரி, இதுலயும் சின்ன வில்லனை உள்ள நுழைச்சிப் படத்தையே திசை திருப்ப வச்சிடுறாரு இயக்குனர் ராஜுமுருகன். தனக்கு ஏற்பாடு பண்ணிருக்கிற திருமணத்திலேர்ந்து தப்பிச்சு காதலனைத் தேடி தன்னந்தனியா நடுராத்திரி ஹை-வே ரோட்டுல நடக்கும்போது, பாக்கற ஒவ்வொருத்தர் மனசுலயும் "பருத்தி வீரன் க்ளைமாக்ஸ் காட்சிய மனசுல ஓடவிடறதும், தமிழ் தன்னோட காதலியத் தேடி அலையும்போது "காதல் படத்தோட காட்சியை மனசுல ஓடவிடுறதும், எதிர்பாராத பதைபதைப்பான காட்சிகள். மனதை நெருட வைக்கிற காட்சிகளா இருந்தாலும், படத்துக்குப் பக்கபலம். சந்தோஷ நாராயணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

"அட்டகத்திக்குப் பின் தினேஷ், ஹீரோவா நடித்த ரெண்டாவது படம். பார்வையிழந்தவரின் வலியை உணர்ந்த மாதிரியான நடிப்பு. புதுமுகம் மாளவிகா கோடம்பாக்கத்துக்குப் படையெடுத்த மற்றொரு தேவதை. நடிப்பிலும் அழகு.


பார்வை இருக்கிற பெண்களுக்கே சமூகத்துல நிறைய பிரச்னைங்க இருக்கற காலத்துல, பார்வையிழந்த பெண் படும் கஷ்டத்த, தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்கற ரசிகர்களோட மனசு வலிக்காத அளவுக்கு கொஞ்சமா காட்டி, அவங்களோட உணர்ச்சிப் பூர்வமானக் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். பின்பாதி சென்டிமென்ட் தூக்கல். தவிர்த்திருக்கலாம்.


குக்கூ - ரசனையான செல்லுலாயிட் குயில்!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

குக்கூ தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in