என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா
விமர்சனம்
நடிப்பு - அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல், அர்ஜுன், சரத்குமார் மற்றும் பலர்
இயக்கம் - வி.வம்சி
இசை - விஷால் சேகர்
தயாரிப்பு - ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ்
தமிழ்நாட்டில் சமீப காலமாக தெலுங்குப் படங்களும் அதிகமாக தமிழ் பேச ஆரம்பித்துவிட்டது. இடையில் சில வருடங்களாக அதிகம் வெளிவராத தெலுங்கு டப்பிங் படங்கள் தற்போது அதிகமாகி வருகின்றன.
இதுவரை தான் நடித்த எந்த ஒரு தெலுங்கு டப்பிங் படத்தையும் தமிழில் டப் செய்து வெளியிட அனுமதிக்காத அல்லு அர்ஜுன் இந்தப் படத்தை டப்பிங் செய்து வெளியிட அனுமதி கொடுத்துள்ளார்.
படத்தின் தலைப்பே இது எந்த மாதிரியான படம் என்பதைப் புரிய வைத்திருக்கும். நாட்டைக் காக்க பார்டர்-ல் சென்று போராட நினைக்கும் ஒரு ராணுவ வீரர், பக்கா ரவுடி ஒருவருடன் போராடுவதுதான் படத்தின் கதை.
தெலுங்கு ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்த மாதிரியான படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், தமிழ் ரசிகர்களை அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றிவிட முடியாது.
மிகவும் கோபக்கார ராணுவ வீரரான அல்லு அர்ஜுன் தன்னுடைய கோபத்தால் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ராணுவத்தில் சேர்ந்தவர். ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றதால் அவரை ராணுவத்தை விட்டு நீக்க முடிவு செய்கிறார்கள். மனநல அதிகாரி ஒருவரின் சம்மத கையெழுத்தை வாங்கி வந்தால் அவரை மீண்டும் ராணுவத்தில் சேர்ப்போம் என்று சொல்கிறார்கள். அதற்காக அந்த மனநல அதிகாரியிடம் செல்கிறார் அல்லு அர்ஜுன். அல்லு அர்ஜுனின் அப்பா அர்ஜுன் தான் அந்த மனநல அதிகாரி.
யாரால் வீட்டை விட்டு வெளியேறினாரோ அவரிடமே கையெழுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை அல்லு அர்ஜுனுக்கு. அதே சமயம் அந்த ஊரில் நடக்கும் ரவுடியிசத்திற்கு முடிவு கட்டும் வேலையையும் அல்லு அர்ஜுன் பார்க்க வேண்டியிருக்கிறது. ரவுடியிசத்தை ஒழித்து, அப்பாவிடம் கையெழுத்து வாங்கி மீண்டும் ராணுவத்தில் இணைந்தாரா இல்லையா என்பது தான் தலைப்பைப் போலவே மிக நீளமான இந்தப் படத்தின் கதை.
அல்லு அர்ஜுன் ஒரே சமயத்தில் ஐம்பது பேரை அடிக்கிறார் என்று நம்பும்படியான கதாபாத்திர அமைப்பு அவருக்கு. உடம்பை நன்றாக வைத்துக் கொண்டு அதிரடி நடிப்பில் அனலடிக்க வைக்கிறார். அவரை கோபக்காரனாகக் காட்ட வேண்டும் என்பதற்காக அனைத்து நேரத்திலும் அவரை சுருட்டு பிடிப்பவராகவே காட்டுவதும், அடிக்கடி தண்ணி அடிப்பதாகக் காட்டுவதும் ஒழுக்கத்தை மீறிய செயல்கள். பார்டர் சென்று பணிபுரிய ஆசைப்படுபவர், அந்த பார்டர்-ஐப் பற்றியே டபுள் மீனிங் டயலாக் பேசுவதெல்லாம் டூ மச். ஹீரோவின் கதாபாத்திரம் மட்டும்தான் ராணுவ வீரர். மற்றபடி உள்ளூர் ரவுடியை எதிர்க்கும் சராசரி ஆக்ஷ்ன் ஹீரோ தான்.
ராணுவ வீரரைக் காதலிக்கும் கிளாமர் நாயகியாக அனு இம்மானுவேல். அரைகுறை ஆடையுடன் தான் அதிகம் வலம் வருகிறார். தெலுங்குப் படங்களில் நாயகிகளுக்கு ஹீரோவைக் காதலிப்பதும், டூயட் பாடுவது மட்டுமே வேலையாக இருக்கும். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது.
அம்மா சென்டிமென்ட்டுகளையே அதிகம் பார்த்த நமக்கு இந்தப் படத்தில் அப்பா சென்டிமென்ட். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் படத்தில் அதிகமான நேரம் வருகிறார். இந்த அர்ஜுன் தமிழ் நடிகர் அர்ஜுன். நாயகன் அல்லு அர்ஜுன் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் என குழம்ப வேண்டாம். நதியாவுக்கு முக்கியத்துவம் இல்லை சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அதிலும் அவ்வளவு இளைத்துப் போய்...பார்க்கவே பாவமாகத் தெரிகிறார்.
தமிழ் நடிகர் சரத்குமார் தான் வில்லன். டெம்ப்ளேட் உள்ளூர் தாதா கதாபாத்திரம். இன்னும் எத்தனை படங்களில் தான் இப்படியான வில்லன்களைப் பார்ப்பது. ப்ளீஸ், அப்படிப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ரிட்டயர்மென்ட் கொடுங்கள் இயக்குனர்களே.
ராணுவக் கதையிலும் சம்பந்தமில்லாமல் பாடல்களை இடைச் செருகலாக நுழைப்பதில் தெலுங்கு இயக்குனர்களுக்கு நிகர் அவர்களேதான். விஷால் சேகர் இசையில் பாடல்கள் கமர்ஷியல் மசாலா.
ஒரு சில வசனங்களில் தமிழின் மொழி மாற்ற வசனகர்த்தா ரசிக்க வைக்கிறார். வழக்கமான கமர்ஷியல் கார நெடி தெலுங்கு மசாலாவை தேசப்பற்று என்று சொல்லி வசூல் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா - ஏமாற்றம்
பட குழுவினர்
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
அல்லு அர்ஜூன்
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன். 1982ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் பிறந்தவர் அல்லு அர்ஜூன். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்தின் மகனான அல்லு அர்ஜூன், சின்ன வயதிலிருந்தே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர், ராகவேந்திரா ராவ் இயக்கிய கங்கோத்ரி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். 2003ம் ஆண்டு, சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அயான் என்ற மகன் உள்ளார். நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், மாடலிங், பாடகர், டான்சர் என் அசத்தி கொண்டிருக்கிறார் அல்லு் அர்ஜூன்.