புஷ்பா,Pushpa

புஷ்பா - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மைத்ரி மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - சுகுமார்
இசை - தேவிஸ்ரீபிரசாத்
நடிப்பு - அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா
வெளியான தேதி - 17 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

காடுகளை மையமாக வைத்து அதிகமான திரைப்படங்கள் வந்ததில்லை. அதற்காக நிறைய உழைக்க வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் போது இயற்கையான பல பிரச்சினைகள் வரும். மழை, வெயில், இருட்டு, பூச்சிகள் என பல விஷயங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். அதையெல்லாம் மீறி காடுகளை மையமாக வைத்து வந்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இந்த 'புஷ்பா' படத்தைப் பொறுத்தவரையில் காடுகளின் பின்னணியில் படத்தை எடுக்க கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது உழைப்பு சரியான கதை இல்லாததால் வீணாகப் போயிருக்கிறது.

'கேஜிஎப்' படத்தைப் பார்த்து இப்படி ஒரு படம் பண்ணலாம் என்ற எண்ணம் இப்படத்தின் இயக்குனர் சுகுமாருக்கு வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தப் படம் தங்கச் சுரங்கம் பற்றியது, இந்தப் படம் தங்கத்திற்கு நிகரான செம்மரம் பற்றியது, அவ்வளவுதான் வித்தியாசம். 'கேஜிஎப்' படத்தில் இருப்பது போன்ற கதாபாத்திரங்கள், அதே அம்மா சென்டிமென்ட் என இரண்டிற்கும் அதிக வித்தியாசமில்லை.

செம்மரக் கடத்தல் அதிகம் நடைபெறும் சித்தூர் பகுதி, சேஷாசலம் காடுகளில் நடக்கும் கதை என படத்தின் பின்னணியை அமைத்திருக்கிறார்கள். அங்கு செம்மரக் கடத்தலில் சாதாரண கூலியாக வேலைக்குச் சேர்கிறார் புஷ்பா (அல்லு அர்ஜுன்). படிப்படியாக உயர்ந்து கமிஷனுக்கு வேலை செய்ய ஆரம்பித்து, சிண்டிகேட்டை மீறி சென்னை ஏஜென்ட்டுக்கே மரத்தை அனுப்புகிறார். பின்னர் சிண்டிகேட்டின் தலைமைப் பதவிக்கும் வருகிறார். யாரும் அசைக்க முடியாதவராக அடங்காதவனாக இருக்கும் புஷ்பாவுக்கு ஆட்டம் கொடுக்க புதிதாக காட்டிலாகா அதிகாரியாக பதவிக்கு வருகிறார் பன்வர் சிங் ஷெகாவத் (பகத்பாசில்). இருவரது சந்திப்புமே மோதலில் ஆரம்பமாகிறது. இதன் தொடர்ச்சி இரண்டாம் பாகத்தில் வரப் போகிறது.

எந்த ஒரு படத்திற்கும் முக்கியம் கதை, திரைக்கதை. இந்தப் படத்தில் அழுத்தமான கதை இல்லாததும், விறுவிறுப்பான திரைக்கதை இல்லாததும் படத்திற்கு எதிர்மறையாக அமைந்துவிட்டது. இரண்டு பாகமாக எடுக்கலாம் என முதலிலேயே திட்டமிட்டிருந்து அதற்கேற்றபடி கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கலாம். இந்த முதல் பாகத்தில் சிறிய வில்லன்களை வைத்துக் கொள்வோம், இரண்டாம் பாகத்தில் ஒரே ஒரு முக்கிய வில்லனை வைத்துக் கொள்வோம் என இடையில் முடிவு செய்தது போலத் தெரிகிறது. சாதாரண வில்லன்களுடன் புஷ்பா மோதி அவரது நேரத்தையும் வீணடித்து, நமது நேரத்தையும் வீணடித்துவிட்டார்.

புஷ்பா கதாபாத்திரத்திற்காக தன்னை நிறையவே மாற்றிக் கொண்டிருக்கிறார் அல்லு அர்ஜுன். இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்ததில்லை என்று சொல்லுமளவிற்கு நடித்திருக்கிறார். நடை, உடை, பாவனை, உடல்மொழி என அனைத்திலும் புஷ்பா என்கிற புஷ்பராஜ்தான் கண்ணுக்குத் தெரிகிறார். தமிழில் அவருக்காகக் குரல் கொடுத்தவருக்கு படக்குழுவினர் கோடானு கோடி நன்றி சொல்ல வேண்டும். வித்தியாசமான தமிழுடன், பொருத்தமான குரலுடன் அல்லுவிற்கான டப்பிங் அமைந்து ரசிக்க வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் தனி அவதாரம் எடுத்திருக்கிறார் அல்லு. 'புஷ்பான்னா பிளவர் இல்ல, பயர்” என்கிறார். அந்த 'பயர்' இரண்டாம் பாகத்தில் அதிகம் இருக்கும் என எதிர்பார்ப்போம்.

கிராமத்துப் பெண்ணாக ராஷ்மிகா மந்தானா. பாவாடை தாவணியில் கொஞ்சம் கிளாமருடன் வருகிறார். ராஷ்மிகாவின் வழக்கமான துறுதுறுப்பு மிஸ்ஸிங். இருவரையும் காதலர்களாக்கவே நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். 'சாமி சாமி' பாடலில் மட்டும் எக்ஸ்பிரஷன்களை அள்ளி விடுகிறார் ராஷ்மிகா.

அண்ணன், தம்பிகளாக மூவர். அண்ணன் கொண்டா ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜய் கோஷ் மட்டும் நமக்கு அடையாளம் தெரிகிறது. இவர்களுடன் கூட்டணி அமைத்துத்தான் புஷ்பா மரக்கடத்தலில் ஈடுபடுகிறார். சிண்டிகேட் தலைவர் மங்களம் சீனுவாக நகைச்சுவை நடிகர் சுனில். வில்லத்தனமும் இவருக்கு நன்றாகவே வருகிறது.

ஒரே ஒரு பாடலில் செக்சியான நடனமாடுகிறார் சமந்தா. முன்னணி கதாநாயகியாக நடிப்பவர் இந்த அளவிற்கு இறங்கி நடிப்பது ஆச்சரியம்தான்.

கிளைமாக்சுக்கு கொஞ்ச நேரம் முன்பாகத்தான் பகத் பாசில் என்ட்ரி ஆகிறார். ஆரம்பக் காட்சியே அதிர்ச்சிதான். இரண்டாம் பாகத்தில் முக்கிய வில்லனாக படத்தில் இருப்பார் எனத் தெரிகிறது.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், 'சாமி…சாமி…' பாடலும், 'ஓ சொல்றியா..' பாடலும் ரசிக்க வைக்கிறது. மிரோஸ்லா குபா ப்ரோசெக் தன்னுடைய ஒளிப்பதிவுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். கார்த்திகா சீனிவாஸ், ரூபன் என இரண்டு எடிட்டர்கள் படத்திற்கு. தேவையற்ற சில காட்சிகளை நீக்கியிருக்கலாம். மூன்று மணி நேரப் படம் என்பது தேவையேயில்லை.

எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த முதல் பாகம் ஏமாற்றமே, இரண்டாம் பாகத்திற்காக இன்னும் அழுத்தமான கதை, திரைக்கதை, காட்சிகளுடன் வந்து நம்மை ஏமாற்றமாட்டார்கள் என எதிர்பார்ப்போம்.

புஷ்பா - Push இல்லை…

 

புஷ்பா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

புஷ்பா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

அல்லு அர்ஜூன்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன். 1982ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் பிறந்தவர் அல்லு அர்ஜூன். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்தின் மகனான அல்லு அர்ஜூன், சின்ன வயதிலிருந்தே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர், ராகவேந்திரா ராவ் இயக்கிய கங்கோத்ரி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். 2003ம் ஆண்டு, சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அயான் என்ற மகன் உள்ளார். நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், மாடலிங், பாடகர், டான்சர் என் அசத்தி கொண்டிருக்கிறார் அல்லு் அர்ஜூன்.

மேலும் விமர்சனம் ↓