விமர்சனம்
------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
உணர்வுகளை உரசிப்பார்த்து புரிந்து கொள்ள வைக்கும் படம். தி இன்டச்சபிள்ஸ் என்ற பிரெஞ்சுப் பட ரீமேக் என்றாலும் தமிழுக்கு ஏத்தபடி நேர்மையாகத் தந்திருக்கிறார் இயக்குநர் வம்சி.
விபத்தில் சிக்கி கழுத்துக்குக் கீழே எந்த அசைவும் இல்லாத கோடி கோடி கோடீஸ்வர நாராகர்ஜூனாவை கவனித்துக் கொள்ளும் கேர்டேக்கராக பங்களாவுக்குள் நுழைகிறார் கார்த்தி. அவருக்கு இவரும் இவருக்கு அவரும் எவ்வளவு முக்கியமானவர்களாக அன்பானவர்களாக மாறுகிறார்கள் என்பதுதான் கதை. அதை சொன்ன விதத்தில்தான் மிரள வைக்கிறார் இயக்குநர்.
அம்மா, தம்பி, தங்கச்சி என்ற மிடில்கிளாஸ் இளைஞர் கார்த்தி. சின்னச் சின்ன திருட்டு, ஜெயில் என்று வெறுப்பேற்றியவர் நாகார்ஜூனாவின் வீட்டுக்குள் நுழைந்ததும் கதை வேகம் பிடிக்கிறது. சக்கர நார்காலியிலேயே கிடக்கும் நாகார்ஜூனாவுக்கு கார்த்தியின் யதார்த்தமான அப்ரோச் பிடித்துப்போக, அவர் காட்டும் இன்னொசன்ஸ் திரைக்குள்ளிருக்கும் நாகார்ஜூனாவை மட்டுமல்ல, வெளியே இருக்கும் ரசிகர்களையும் சிரிக்க வைக்கிறது. அந்த ஜாலி உதார் உடல்மொழி கார்த்திக்கு கச்சிதம்.
சக்கர நாற்காலியிலேயே படம் முழுவதும் வந்தாலும், ஒரு புன்னகையில், ஒரு பார்வையில், ஒரு கண்ணசைவிலேயே எல்லாத்தையும் பேசி சபாஷ் வாங்குகிறார் நாகார்ஜூனா.
நாகார்ஜூனாவின் அழகான செகரட்டரி தமன்னா. ரசகுல்லா தமன்னாவை கார்த்தி துரத்தத் துரத்த அவர் விழும் நேரத்திற்காக மனசு அடித்துக் கொள்கிறது. அள்ளுது அழகு.
பிரகாஷ்ராஜ் என்ட்ரி ஆனதும் முடமான பணக்காரர், சொத்து, அபகரிப்பு, என்று தடம் மாறப் போகிறதோ என்று மனம் நினைக்கும்போது அதை தவிர்த்திருப்பது டாப். கொஞ்சமே வந்தாலும் பிரகாஷ்ராஜ் பிரமாதம்.
படத்தில் ஸ்ரேயா, அனுஷ்கா, ஜெயப்ரதா, விவேக் இருக்காக. ஆனால் நாட்அவுட் ஆகாம - படத்திற்கு ப்ளஸாக.. இருக்காக.
சென்னை ஈ.சி.ஆரைத் தாண்டி படம் போகாதா எனறு ஏங்கும்போதே, பிரான்ஸூக்கு இலவசமாக சுற்றிக் காட்டி தெறிக்க விடுகிறார் ஒளிப்பதிவாளர். இசை தேவைக்கேற்ப அழகாக வருடிவிட்டுப் போகிறது. படத்தின் பெரிய ப்ளஸ் ராஜூமுருகன், முருகேஷ் பாபு வசனங்கள்தான்.
எல்லாம் சரி, ஊனமான தன்னால், காதலி அனுஷ்காவின் வாழ்க்கை பாழாயிடக்கூடாது என்பதற்காக, அவரிடமிருந்து தள்ளிப்போகும் நாகார்ஜூனாவை கிளைமாக்ஸில் ஸ்ரேயாவை ஏற்றுக் கொள்ள வைப்பது என்ன லாஜிக் அப்ப ஸ்ரேயா வாழ்க்கை? குறைகள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவும் நட்புதான் வாழ்க்கை என்று சொல்லியவிதம் ஏ கிளாஸ்!
தோழா - கவிதை
குமுதம் ரேட்டிங் - ஓக
--------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
மாற்றுத் திறனாளி என்றாலே அவரது குறையை மையப்படுத்தி, கண்ணீர் சிந்த வைக்கும் ஸ்ரீவள்ள காலத்து சென்டிமென்டைக் கைவிட்டிருக்கிறது தோழா. அவருக்கு ஒரு காதலியோ, டேட்டிங்கோ கூட வைக்கமாட்டார்கள். இடிந்துபோய் தன் குறையையே பெரிதாகப் பேசிக் கொண்டு இருப்பார். வருந்துவார். பழைய காதலியைக் கண்டுபிடித்தால், அவர் இவருக்காகவே காலம் மழுக்க காத்திருந்துபேஜார் பண்ணுவார். இதுபோன்ற வழக்கமான தமிழ் சினிமா தேய்வழக்கு(க்ளிஷே)களை ஒதுக்கிவைத்ததில் அசத்தியிருக்கிறது தோழா.. பிரெஞ்சு படம் ஒன்றில் தமிழ் வடிவம் என்றாலும் தமிழக்கு ஏற்ப நேர்த்தியாகத் திருத்தி அமைந்திருப்பது, மனத்துள் பதிய உதவுகிறது.
நாகார்ஜூனா சக்கர நாற்காலிக்காரர். உதவிக்கு ஆள் தேவை; பச்சாதாபப் படவோ இரக்கப்படவோ தேவையில்லை. ஒரு சக மனிதராக நினைத்து இயல்பாகப் பழகி, பணி செய்ய ஆள் தேடுகிறார் நாகார்ஜூனா. கார்த்தி சரியான சாய்ஸ். இருவருக்குள்ளும் இழையோடும் அன்னியோன்யமும் பக்குவமும்தான் படம் நெடுக. உணர்வுப் பிணைப்புக்குக் குந்தகம் செய்யும் படாபடா வில்லன், பிரச்னை, டமால் டுமீல், டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை என்று எந்தத் தொந்தரவும் மசாலாவும் இல்லாமல், பூப்போல் மலர்கிறது தோழா.
வசனங்கள் கூர்மை என்றால், காட்சிகள் கச்சிதம். புறா ஒன்று கிளையில் சிக்கிப் பறக்கத் தவிக்கும் காட்சி நாகார்ஜூனாவின் கையறுநிலைக்கு ஒப்பீடு. மற்றொரு காட்சியில், நாகார்ஜூனா மன மகிழ்ச்சியை வெளிப்படுத்த, புறா சிறகை விரித்து உயர உயரப் பறப்பது நெகிழ்ச்சிக் கவிதை. விவோக இருந்தாலும் நகைச்சுவைக்குத் தனி டிராக் கிடையாது; பிரகாஷ்ராஜ் இருந்தாலும் வில்லத்தனம் கிடையாது; தமன்னா இருந்தாலும் கவர்ச்சி கிடையாது. எல்லோரும் நல்லவர்களே.
படத்தின் ஹைலைட்டே கேமராதான். பாரீஸின் அழகை அள்ளுவதிலும், கார் ரேஸின் வேகத்தைப் பதிவு செய்வதிலும், உணர்வுகளுக்கு ஏற்ப லைட்டிங் அமைப்பதிலும் பி.எஸ். வினோத் கேமரா வித்தியாசம். பாடல்கள் மனத்தில் தங்கவில்லை.
நாகார்ஜூனா என்றால் இன்னும் அவரது உதயம் பட மிடுக்குதான் ஞாபகம் வரும். அங்கிருந்து அவர் ரொம்ப தூரம் நடிப்பில் முன்னேறியுள்ளது தோழாவின் வெற்றி. படம் முழுவதும் வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு, கை கால்களை அசைக்காமல், முகபாவனைகளைக் கொண்டே தோழாவைத் தோளில் சுமந்திருக்கிறார். கார்த்தியின் இயல்பான துடுக்கத்தனம், துருதுரு படத்துக்குப் புத்துணர்ச்சி. அழகு பதுமை தமன்னா, ஸ்கிரீனில் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் நடந்து கொண்டே இருப்பது நமக்கு கால் வலிக்கிறது! ஜெயசுதா, அமரிக்கையான அம்மா.
என்னதான் தமிழ்ப் படம் என்றாலும், தெலுங்கு வாசனை ரொம்பவே தூக்கல், கார் ரேஸிங்கை, மைதானத்தில் செய்வது வேறு. ஆனால், அதை நெடுஞ்சாலைகளில் செய்வதும், சாகசமாகச் சித்தரிப்பதும் பார்க்கும் இளைஞர்கள் திசை திருப்புவது உறுதி.
படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. காட்சிக்குத் தேவைப்படும் உரிய கால அவகாசத்தைக் கொடுத்து, பார்வையாளர்கள் மனத்தில் உணர்வுகளைப் பதிய வைப்பது முக்கியம். உரிய இடங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி, பார்வையாளர்களின் கண்களைக் கசிய வைக்கவும் வேண்டும். தமிழர்கள் இயக்குநர் வம்சியைக் கொண்டாடுவது நிச்சயம்.
தோழா - உணர்வு மழை















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!