இஎம்ஐ
விமர்சனம்
தயாரிப்பு : சபரி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : சதாசிவம் சின்ராஜ்
நடிகர்கள் : சதாசிவம் சின்ராஜ், சாய் தன்யா, பிளாக் பாண்டி, ஆதவன், இயக்குனர் பேரரசு, லொள்ளு சபா மனோகர், ஒ.ஏ.கே.சுந்தர், செந்தி குமாரி
ஒளிப்பதிவு : பிரான்சிஸ்
இசை : ஸ்ரீநாத் பிச்சை
வெளியான தேதி : 04.04.2025
நேரம் : 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் : 2.25/5
கதைக்களம்
மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் கெமிஸ்ட்ரியன் ஆக பணிபுரிந்து வரும் சதாசிவம் சின்ராஜ், அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாய் தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். காதலிக்கும் போது புல்லட், திருமணத்துக்கு பிறகு காதல் மனைவிக்காக கார் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை மாத தவணை (இ எம் ஐ) மூலம் வாங்குகிறார். திடீரென அவருக்கு வேலை போனதால் வாங்கிய கடனுக்கு மாதத் தவணை கட்ட முடியாமல் போகிறது. இதனால் கடன் கொடுத்த பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது. பணத்தை வசூல் செய்ய அடியாட்கள் வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் டார்ச்சரும், அவர் அனுபவிக்கும் அவமானங்களும் தான் படத்தின் மீதி கதை.
கையில் பணம் இல்லாவிட்டாலும் இஎம்ஐ மூலம் பொருட்களை வாங்கலாம் என்ற நிலை இன்று பல நடுத்தர குடும்பங்களில் இருக்கிறது. அப்படி சம்பளத்தை நம்பி இஎம்ஐயில் பொருட்களை வாங்குவது குறித்தும், தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு கடன் கட்ட முடியாமல் அவதிப்படுவோர் நிலை பற்றியும், பைனான்ஸ் கம்பெனியில் இருந்து கொடுக்கப்படும் டார்ச்சர் பற்றியும் இயக்குனர் சதாசிவம் சின்ராஜ் சொல்லி இருக்கிறார். மாத தவணையில் கடன் வாங்கி சீரழியும் பல குடும்பங்களின் வலியையும், துன்பங்களையும் இந்த சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வாக சொல்லி இருப்பதோடு நடிகராகவும் லீடு ரோலில் நடித்திருக்கிறார் சதாசிவம் சின்ராஜ்.
இயக்குனர் பொறுப்போடு ஹீரோவாகவும் நடித்துள்ள சதாசிவம் சின்ராஜ், முதல் படம் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பு பயிற்சி நிச்சயம் தேவை. அவரது மனைவியாக வரும் சாய் தன்யா, காதல் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இ எம் ஐ வசூல் செய்யும் வங்கி ஏஜென்ட்டாக வரும் ஆதவன் நடிப்பு சிறப்பாக உள்ளது. நண்பனாக வரும் பிளாக் பாண்டி, காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றி விடுகிறார்.
சாய் தன்யா தந்தையாக வரும் இயக்குனர் பேரரசு சில காட்சிகள் வந்தாலும் மனதில் பதிகிறார். லொள்ளு சபா மனோகர், ஒ.ஏ.கே.சுந்தர், செந்தி குமாரி
ஆகியோரின் நடிப்பு ஓகே ரகம்.
ஸ்ரீநாத் பிச்சை, இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பிரான்சிஸ் ஒளிப்பதிவு ரசிக்க வைத்தாலும் புதிதாக எதையும் கேமராவில் காட்டவில்லை.
பிளஸ் அண்ட் மைனஸ்
கிரெடிட் கார்டு மூலம் தேவையில்லாத பொருட்களை வாங்கி, ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்கும் நடுத்தர குடும்பஸ்தர்களுக்கு இந்த படம் அவசியம். அதே நேரம் இந்த கதையை 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். இன்று மக்களும் விழிப்புணர்வாக இருக்கின்றனர். அதோடு பைனான்ஸ் கம்பெனிகளும் தகுதியானவர்களுக்கு மட்டுமே, அதுவும் கடனை வசூலிக்க முடியும் என்பவர்களுக்கு மட்டுமே பணத்தை கடனாக கொடுக்கின்றனர். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். பாடல்களும் காமெடியும் படத்தில் பெரிய மைனஸ்.
இ எம் ஐ - மீட்டர் வட்டி