கேங்கர்ஸ்
விமர்சனம்
தயாரிப்பு - அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா
இயக்கம் - சுந்தர்.சி
நடிகர்கள் - சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரேசா, வாணி போஜன்,ஹரீஷ் பெராடி, மைம் கோபி, அருள் தாஸ், முனிஷ் காந்த், பக்ஸ், விச்சு, சந்தான பாரதி, மதுசூதன்.
இசை - சத்யா
வெளியான தேதி - 24.04.2025
நேரம் - 2 மணி நேரம் 40 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5
கதைக்களம்
தென் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போகிறார். இதுகுறித்து அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கேத்ரின் தெரசா கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கடிதம் எழுதுகிறார். அதில் அந்த ஊர் சேர்மன் மைம் கோபி மீது சந்தேகம் இருப்பதாக சொல்லி இருக்கிறார். அந்த புகாரின் பேரில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை நியமிக்கிறது.
சுந்தர் சி அதே பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வருகிறார். ஏற்கனவே அதே பள்ளியில் வடிவேலு பிடி மாஸ்டர் ஆக வேலை செய்கிறார். உள்ளூர் அரசியல்வாதியான மைம் கோபி மற்றும் அருள் தாஸ் இருவரும் பள்ளியை சமூக விரோத செயலுக்காக பயன்படுத்துகின்றனர். இதனால் ஆத்திரமடையும் சுந்தர். சி, அடையாளம் தெரியாதபடி வேஷம் போட்டுக் கொண்டு அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். இதைப் பார்த்த கேத்ரின் தெரசா, சுந்தர் சி தான் அந்த அண்டர் கவர் போலீஸ் என நினைக்கிறார்.
இந்த நிலையில் மாணவி காணாமல் போனதற்கு மைம் கோபி அண்ணன் மகன் தான் காரணம் என தெரிந்து கொள்ளும் சுந்தர் சி, அவரை கடுமையாக தாக்குகிறார். வலி தாங்க முடியாமல் அவர் வெளிநாட்டில் மறைந்து வாழ்ந்து வரும் தனது தந்தை ஹரீஷ் பெராடியை அழைக்கிறார். ஹரீஷ் பெராடி வந்த பிறகு என்ன நடந்தது? யார் அந்த அண்டர் கவர் போலீஸ் அதிகாரி? உண்மையில் சுந்தர் சி.க்கும், ஹரீஷ் பெராடிக்கும் என்ன தொடர்பு? அதன்
பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
இயக்குனர் சுந்தர் சி, நடிகர் வடிவேலு காம்பினேஷனில் ஏற்கனவே வெளியான ‛வின்னர், தலைநகரம்' போன்ற படங்கள் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் ஆக அமைந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி ஒன்று சேர்ந்து ‛கேங்கர்ஸ்' ஆக வந்துள்ளனர். இயக்குனர் சுந்தர் சி.,யின் பலமே காமெடிதான். அதை மீண்டும் கையில் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காமெடியில் கலக்க முடியாமல் தவித்து வந்த வடிவேலுவுக்கு இந்த படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார் சுந்தர் சி. பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு தனது சக்சஸ் பார்முலாவை பயன்படுத்தி ஹாட்ரிக் (கடந்த மே மாதம் அரண்மனை- 4, சமீபத்தில் மதகஜராஜா, தற்போது கேங்கர்ஸ்) வெற்றி பெற்றுள்ளார்.
படத்தின் மெயின் பில்லர் ஆக வடிவேலு கலக்கி இருக்கிறார். ‛மாமன்னன்' படத்தில் எமோஷன் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்த வடிவேலு, காமெடி சப்ஜெக்ட்டில் பழையபடி கொடிகட்டி பறக்க முடியாமல் குமுறி வந்தார். அந்தக் குறையை போக்கி மீண்டும் தான் ஒரு காமெடி கிங் என நிரூபிக்கும் வகையில் பெர்பார்ம் செய்கிறார். பொதுவாக பாடி லாங்குவேஜ் மூலமும் டயலாக் டெலிவரி மூலமும் சிரிக்க வைக்கும் வடிவேலு இதில் கவுண்டர் டயலாக் போட்டு அசத்தியிருக்கிறார். அது திரையில் செமையாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
ஏராளமான கெட்டப்புகளில் படம் முழுக்க பவனி வரும் வடிவேலுவுக்கு பெண் வேடம் மாஸ்டர் பீஸ் கெட்அப். ஆசிரியையாக வரும் கேத்ரின் தெரசா நடிப்பு கதைக்கு பலமாக உள்ளது. கொஞ்ச நேரம் வந்தாலும் வாணி போஜன் மனதில் பதிகிறார். வில்லன் கேரக்டரில் ஹரீஷ் பெராடி, அருள்தாஸ், மைம் கோபி ஆகியோர் மிரட்டியுள்ளனர். இவர்களோடு சந்தான பாரதி, விச்சு, பக்ஸ், முனீஸ் காந்த் ஆகியோர் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகின்றனர்.
கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு ரசிக்கும் படியாக உள்ளது.சி.சத்யா இசையில் திருவிழா பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல் உள்ளது.
பிளஸ் & மைனஸ்
தமிழ் சினிமாவில் அதிகம் (எடுத்த)சமைத்த பழைய புளித்த மாவை மசாலா சேர்த்து, அதில் ஆக்சன், காமெடி தூவி புது ரெசிபியாக பரிமாறி இருக்கிறார். வடிவேலு போன்ற காமெடி ஜாம்பவானை சரியாக பயன்படுத்தி ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். தற்போதைய சூழலில் ரசிகர்களை 2 மணி நேரம் இருக்கையில் உட்கார வைப்பது என்பது முடியாத காரியமாக இருக்கும் வேலையில், 2:40 நிமிடத்திற்கு ரசிகர்களை இருக்கையில் அமர வைத்தது இயக்குனரின் பிளஸ். அதேநேரம் முதல் பாதி முழுவதும் ஜவ்வு போல் இழுத்து இன்டர்வல் பிளாக் காட்சிக்காக பொறுமையை சோதித்துள்ளார். முதல் பாதியில் சோதித்த பொறுமையை இரண்டாம் பாதியில் சரிகட்டி விட்டார்.
கேங்கர்ஸ் - கோடைக்கால காமெடி ஜூஸ்
கேங்கர்ஸ் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கேங்கர்ஸ்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்