பொன்னியின் செல்வன் 2
விமர்சனம்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் - மணிரத்னம்
இசை - ஏஆர் ரஹ்மான்
நடிப்பு - விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி
வெளியான தேதி - 28 ஏப்ரல் 2023
நேரம் - 2 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 4/5
இன்றைய தலைமுறை ஒரு பிரம்மாண்ட சரித்திரப் படத்தைக் காணும் வாய்ப்பை, சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஏற்படுத்தித் தந்த இயக்குனர் மணிரத்னத்திற்கு முதல் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன்பு சில ஜாம்பவான்கள் எடுக்க முயன்று இயலாமல் போனதொரு படம். அதை முடித்துக் காட்டியதே பெரும் சாதனைதான். அந்த சாதனையைப் படைக்க படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் கோடான கோடி நன்றியைச் சொல்ல வேண்டும்.
ஆதித்த கரிகாலன், நந்தினி ஆகியோரு இளமைக் கால சந்திப்பு, காதல் ஆகியவற்றுடன் படத்தின் டைட்டில் நகர்கிறது. அதன்பின் முதல் பாகத்தில் என்ன சொல்லப்பட்டது என்பது கமல்ஹாசனின் பின்னணிக் குரலுடன் விளக்கவுரையாக அமைந்து நம்மை இரண்டாம் பாகத்திற்குள் இழுத்துச் செல்கிறது.
முதல் பாகத்தில் கடல் சீற்றத்தில் சிக்கி களத்துடன் மூழ்கிய அருண்மொழிவர்மன், வந்தியத் தேவன் ஆகியோர் உயிருடன் திரும்பி வருகிறார்கள். ஆதித்த கரிகாலனைக் கொன்று பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் நந்தினி, தங்களது சோழ சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற குந்தவை எடுக்கும் முயற்சிகள், சிற்றரசர்கள் செய்யும் சதியை அவர்களிருக்கும் கடம்பூருக்கே சென்று ஏளனம் செய்யும் ஆதித்த கரிகாலன், தனது முன்னாள் காதலனான சோழச் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றும் மந்தாகினி என இந்த இரண்டாம் பாகம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது.
இரண்டாம் பாகத்தில் அனைத்து நடிகர்களுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த சில காட்சிகளை இயக்குனர் மணிரத்னம் அமைத்திருந்தாலும், நந்தினியும், ஆதித்த கரிகாலனும் மற்றவர்களை விட தங்களது தேர்ந்த நடிப்பால் நம்மை ஆட்கொள்கிறார்கள். 'நாகப்பாம்பு' என நந்தினி பற்றி ஆதித்த கரிகாலன் சொல்வது போலவே படம் முழுவதும் தனது பழி வாங்கும் வெறியை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அப்படிப்பட்ட பழி வாங்கும் பெண்ணுக்குள் அவரது தாயைப் பற்றித் தெரிந்ததும் அவருக்குள்ளும் பாசம் இருக்கிறது என்பதைக் கண்ணீர் மூலம் புரிய வைக்கிறார்.
ஆவேசம் நிறைந்த இளவரசர் ஆதித்த கரிகாலனாக படம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் விக்ரம். தன் முன்னாள் காதலி நந்தினியை அவர் சந்தித்துப் பேசும் அந்த கடம்பூர் மாளிகைக் காட்சி ஒன்று போதும் விக்ரமின் நடிப்பைப் பற்றிப் பாராட்டிப் பேச. நாவலைப் போலவே படத்திலும் அவரைக் கொன்றது யார் என்ற கேள்விக்கு விடை சொல்லாமல் விட்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் படம் முழுவதையும் ஆட்கொண்டிருக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் தனது முத்திரையையும் பதித்துள்ளார் வந்தியத் தேவன் கார்த்தி. உண்மையான நண்பன், வீரன் எப்படி இருப்பார் என்பது கார்த்தியின் நடிப்பில் வெளிப்படுவது சிறப்பு. வந்தியத்தேவன், குந்தவை இருவரும் சந்திக்கும் அந்தக் காட்சியில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும், வசனமும் நம்மையும் அவர்களது காதல் வலைக்குள் விழ வைத்துவிடுகிறது.
'பொன்னியின் செல்வன்' என்று படத்திற்கு தலைப்பை வைத்து அவருக்கான முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லையே என்ற ஒரு குறை வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் பெருந்தன்மையான குணம் படைத்த அருண்மொழி வர்மனின் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி அக்கதாபாத்திரத்தின் மதிப்பு குறையாமல் நடித்திருக்கிறார். 14 வருடங்கள் கழித்தே அருண்மொழி வர்மன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக முடிசூடிக் கொண்டார் என்பது எவ்வளவு பெருந்தன்மையான குணம். அந்தக் குணம் ஜெயம் ரவியின் நடிப்பில் இயல்பாய் வருவது பாராட்டுக்குரியது.
அழகிலும், அரசியலிலும் சிறந்து விளங்கும் இளவரசியாக த்ரிஷா. குந்தவை என்ற பேரழகி இப்படித்தான் இருந்திருப்பாரோ என தன் நடிப்பின் மூலம் காட்சிக்குக் காட்சி வியக்க வைக்கிறார்.
சுந்தர சோழர், பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், மதுராந்தகத் தேவர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளார், ஆழ்வார்க்கடியான், ரவிதாசன், பூங்குழலி, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோரது காட்சிகள் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர்களுக்குரிய முக்கியத்தவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ரவி வர்மன் ஒளிப்பதிவு முதல் பாகத்தைவிடவும், இரண்டாம் பாகத்தில் இன்னும் சிறப்பாக இருக்கிறது. ஏஆர் ரகுமான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களை மட்டும் கொஞ்சமே கொஞ்சம் இடம் பெறச் செய்தது பெரும் வருத்தம். கிளைமாக்சில் மட்டுமே போர்க்களக் காட்சிகள் வருகிறது. இடையில் அவ்வப்போது சில சண்டைகள் வந்து போகிறது.
முதல் பாகத்தையும், இந்த இரண்டாம் பாகத்தையும் பார்த்த பிறகு இளைய தலைமுறையின் 'பொன்னியின் செல்வன்' நாவல் புத்தகங்களை வாங்கிப் படிக்காமல் போனால் அதற்கு மணிரத்னம் மட்டுமே காரணமாக இருப்பார். அந்த அளவிற்கு ஐந்து மணி நேரத்திற்குள்ளாக 'பொன்னியின் செல்வன்' சரித்திரத்தை ரசிக்க வைத்துவிட்டார்.
விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் சில பிரம்மாண்ட சரித்திரப் படங்களை மற்ற மொரிகளில் எடுத்து ஆயிரம் கோடி வசூலித்திருந்தாலும், ஆயிரம் ஆண்டு புகழ் வாய்ந்த இந்த ராஜராஜ சோழனின் சரித்திரத்தை எந்த மிகைப்படுத்தலும், செயற்கைத்தனங்களும் இல்லாமல் செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார் மணி ரத்னம்.
நாவலில் இல்லாத சில கதாபாத்திரங்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறாமல் போனதும் நாவல் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமாக இருந்திருக்கும். கல்கி எழுதிய நாவலில் இடம் பெறாத கிளைமாக்ஸ் காட்சியை படத்திற்காக சேர்த்தது ஏன் என்று தெரியவில்லை...???
இனி, வரப்போகும் பல சரித்திரப் படங்களுக்கு ஒரு சரியான துவக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இந்த இரண்டு பாகங்களுடன் நிற்காமல், 'சோழர்களின் சரித்திரப் பயணத்தை' அடுத்தடுத்து தர வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை வைப்பார்கள்.
பொன்னியின் செல்வன் 2 - வெற்றிவேல்… வீரவேல்…
பொன்னியின் செல்வன் 2 தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
பொன்னியின் செல்வன் 2
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
விக்ரம்
நடிகர் விக்ரமின் இயற்பெயர் ஜான் கென்னடி. 1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம்தேதி பரமக்குடியில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரமின் ரசிகர்கள் அவரை சீயான் என்ற பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள். பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். ராவணன் படத்தின் மூலம் இந்தியிலும் நடிக்கத் தொட்ங்கிய விக்ரம், தனது தனிப்பட்ட வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவர்.