காதல், பிரிவு, லவ் வித் ரிலேஷன்ஷிப் என ஏற்கனவே பாலிவுட்டில் பழக்கப்பட்ட காதலை கொஞ்சம் டிரெண்ட்டியாக கரண் ஜோகர் இயக்கி, தடைகள் பல தாண்டி வெளியாகியிருக்கும் படம் தான் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'.
சொந்தமாக விமானம் வைத்திருக்கும் அளவுக்கு பெரிய பணக்காரர் அயான் எனும் ரன்பீர்கபூர். படிப்பு விஷயத்திற்காக லண்டன் செல்லும் அயான், அங்கு பப் ஒன்றில் அலிசா எனும் அனுஷ்கா சர்மாவை சந்திக்கிறார். இருவரும் தங்களை பற்றி நிறைய பகிர்ந்து கொள்கிறார்கள். ரன்பீர், அனுஷ்கா மீது காதல் கொள்கிறார், ஆனால் அனுஷ்காவோ, ரன்பீரை நண்பராகத்தான் பார்ப்பதாக கூறுகிறார். ஏனென்றால் அனுஷ்கா, ஏற்கனவே அலி எனும் பவத் கான் உடன் காதல் வயப்பட்டு, அந்த காதல் பிரேக்ப்பாகிவிடுவதால் ரன்பீர் உடனான காதலை தவிர்க்கிறார். இந்தச்சூழலில், கணவரை விவாகரத்து செய்த சாபா எனும் ஐஸ்வர்யாராய் என்ட்ரியாகிறார். அயனின் பார்வை சாபா மீது திரும்புகிறது. இருவரும் நெருக்கமாகிறார்கள், பின்னர் இவர்களும் பிரிகிறார்கள். இறுதியில் யார், யாரோடு இணைந்தார்கள் என்பதுடன் இந்த நால்வரின் காதல், நட்பு, அழுகை, காதல்... ஆகியவை தான் படத்தின் மீதிக்கதை.
நிறைய தோல்விப்படங்களை கொடுத்த ரன்பீருக்கு இந்தப்படம் நிச்சயம் ஆறுதல் தரும் என்று சொல்லலாம். ரன்பீர், தன் ரோலை மிக அழகாக நடித்திருக்கிறார். அதிலும் தன்னை விட மூத்தவரான ஐஸ்வர்யாவுடான நெருக்கமான காட்சிகளில் தயக்கமின்றி சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார்.
ஐஸ்வர்யாராய்க்கு படத்தில் பெரிய ரோல் இல்லை என்றாலும் தன் கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார். ஐஸ்வர்யாவை போன்றே அனுஷ்கா சர்மா, பாகிஸ்தான் நடிகர் பவாத்கான், கெஸ்ட் ரோலில் வரும் ஷாரூக்கான், ஆலியாபட், லிசா ஹெய்டன் ஆகியோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
கரண் ஜோகருக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட காதல், பின்னர் அதில் ஒரு பிரேக்கப் போன்ற கதைக்களம் தான். ஆனால் அதை கொஞ்சம் புதிதாக ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா ஆகியோருக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி தந்திருக்கிறார். தன்னுடைய பேவரைட் சப்ஜெக்ட்டான லவ் சப்ஜெக்ட் என்பதால் கரண், அதை சிறப்பாக எடுத்திருக்கிறார் இயக்குநர். அதேசமயம் படத்தின் முன்பாதி சிறப்பாக இருக்கிறது, பின்பாதி மிக மெதுவாக நகர்வதுடன், நீளமாக இருப்பதும் ரசிகனை சலிப்படைய செய்கிறது.
படத்தின் பெரிய பலமே இசையும், ஒளிப்பதிவும் தான். படத்தொகுப்பு கொஞ்சம் சுமார் தான்.
மொத்தத்தில், ‛‛ஏய் தில் ஹே முஷ்கில் - புதிய மொந்தை, பழைய கள்!''