2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய்சேதுபதி, ஜோதிகா, அதிதிராவ் ஹைதரி, டயானா எரப்பா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா மற்றும் பலர்
இயக்கம் - மணிரத்னம்
இசை - ஏஆர் ரகுமான்
தயாரிப்பு - மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்ஷன்ஸ்


தமிழ் சினிமாவில் மற்றுமொரு கேங்ஸ்டர் திரைப்படம். ஆனால், இது மணிரத்னம் படம் என்பதால் அது வேறு மாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தியேட்டருக்குள் ரசிகர்கள் நுழைவார்கள். அந்த எதிர்பார்ப்பை மணிரத்னம் மீண்டும் ஒரு முறை பொய்யாக்கிவிட்டார்.

நாயகன் படத்தைக் கொடுத்த மணிரத்னமா இது என்று ஆச்சரியப்பட வைக்கிறார். இந்த செக்கச் சிவந்த வானம் படத்தை நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

கேங்ஸ்டர் அப்பா பிரகாஷ்ராஜ், அவருக்கு அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு ஆகியோர் மூன்று மகன்கள். அரவிந்த்சாமி அப்பாவுக்கு வலதுகரமாக கூடவே இருக்கிறார். அருண்விஜய், துபாயில் ஷேக்குகளுடன் பிசினஸ் செய்கிறார். சிம்பு செர்பியாவில் துப்பாக்கி, ஆயுதக் கடத்தல் செய்கிறார். அப்பா பிரகாஷ்ராஜை யாரோ குண்டு வைத்து கொல்ல முயற்சிக்கிறார்கள். பின்னர் பிரகாஷ்ராஜ் மாரடைப்பில் இறக்க, அப்பா இடத்தை மூத்த மகன் அரவிந்த்சாமி பிடிக்கிறார். இதனால், ஆத்திரமடையும் தம்பிகள் அருண்விஜய், சிம்பு, அரவிந்த்சாமியை ஆட்டம் காண வைக்க முயற்சிக்கிறார்கள். அப்பா இடத்தை அரவிந்த்சாமி தக்க வைத்துக் கொண்டாரா, இழந்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பிரகாஷ்ராஜ் இறப்பதற்கு முன்பு தன்னைக் கொல்ல முயற்சித்தது யார் என்ற உண்மையை சொன்ன போதே படத்தின் சஸ்பென்ஸ் போய்விடுகிறது. அதனால், அவருடைய இடத்தைப் பிடிக்க மகன்கள் போட்டி போடுவதெல்லாம் ஒட்டாமல் போய்விடுகிறது.

பிரகாஷ்ராஜ் குண்டடிபட்டு சாகக் கிடக்க, சிம்புவை செர்பியாவில் அறிமுகம் செய்கிறார்கள். ரசிகர்கள் பிரகாஷ்ராஜ் இறந்தாலும் பரவாயில்லை என சிம்புவின் அறிமுகக் காட்சியைப் பார்த்து கூச்சல் போடுகிறார்கள். இயக்குனர் மணிரத்னம் இதை கவனிக்கத் தவறியது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். மற்ற தமிழ்ப் படங்களைப் போல மணிரத்னம் படத்திலும் தீபாவளி துப்பாக்கி போல சுட்டுக் கொண்டேயிருக்கும் காட்சிகள் இருப்பதை நம்பமுடியவில்லை. யூ டூ மணிரத்னம் ?.

அரவிந்த்சாமிக்கு ஷார்ட் ஆன முடிவெட்டி, ரப் அண்ட் டப் ஆடை கொடுத்தாலும் அவரை ரவுடியாகப் பார்க்க முடியவில்லை. அதையும் மீறி அவருடைய முகத்தில் அமுல் பேபி களை தாண்டவமாடுகிறது. அழகான மனைவி ஜோதிகா இருக்க சின்ன வீடாக அதிதி ராவ் ஹைதரி இருப்பது ஏன் என்றும் தெரியவில்லை. இப்படி காட்சிகள் வைத்தாலாவது அரவிந்த்சாமியை ஆக்ஷன் ஹீரோவாக ஏற்றுக் கொள்வார்கள் என இயக்குனர் நினைத்தாரா தெரியவில்லை.

சிம்புவை அவரது பாணி கதாபாத்திரத்திலேயே நடிக்க விட்டிருக்கிறார் இயக்குனர். அவரும் நான் யார் மீதும் அன்பு வைக்கிறதில்லை, அப்புறம் அவர்கள் பிரிந்தால் தாங்க முடியவில்லை, என்ற ரீதியில் வசனம் பேசி ரசிக்க வைக்கிறார். அதிதியை மிரட்டும் போதும், அம்மாவிடம் பாசத்திற்காக ஏங்கும் போதும் மட்டுமே சிம்புவுக்கு நடிக்க வாய்ப்பு.

அருண் விஜய் தன்னை பிசினஸ் மேனாக காட்டிக் கொள்ள கஷ்டப்படவில்லை. அவருடைய தோற்றமும், நடிப்பும் அதை எளிதாக்கியிருக்கிறது. தன்னை அடிக்க வந்த அரவிந்த்சாமி அடியாட்களிடமே பிசினஸ்தனத்தைக் காட்டுவது சிறப்பு.

வழக்கம் போல விஜய் சேதுபதி தன் நடிப்பால் மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார். அவருக்கே உரித்தான தெனாவெட்டான கதாபாத்திரம் அமைந்தால் விடுவாரா என்ன ?. அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி ஆகிய நால்வரில் படத்தின் ஹீரோ யார் என்பதற்கு கிளைமாக்சில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர். ஒரே ஒரு காட்சியில் மட்டும் போலீஸ் உடையில் வரும் விஜய்சேதுபதி மற்ற காட்சிகளில் போலீசாகவேதான் இருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. படத்தின் சுவாரசியத்தைக் கூட்டுவது யார் என்று கேள்வி எழுந்தால் அது விஜய் சேதுபதி மட்டுமே என்று உரக்கச் சொல்லலாம்.

ஜோதிகா, அதிதிராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா என்ற வரிசையில்தான் படத்தில் இவர்களுக்கான வசனங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. ஜோதிகாவிற்கு பத்து வரிகள், அதிதிக்கு ஐந்து வரிகள், ஐஸ்வர்யாவுக்கு இரண்டு வரிகள், டயானாவுக்கு ஒரு வரி. ஜோதிகாவிற்கு மட்டுமே கோபப்படவும், பாசத்தைக் காட்டவும் சில காட்சிகள். மற்றவர்கள் மணிரத்னம் படத்தில் நடித்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள். பிரகாஷ்ராஜ், ஜெயசுதா இருவரின் நடிப்பிலும் அனுபவம் தெரிகிறது. பிரகாஷ்ராஜ்க்கு எதிரி என்று ஒருவரை சொல்ல வேண்டும் என்பதற்காகவே தியாகராஜன் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் முழு பாடல் ஒன்று கூட படத்தில் வரவில்லை. அவ்வப்போது வந்து செல்கிறது. எல்லா பாடல்களுமே கேட்க ஒரே மாதிரி இருக்கிறது. மணிரத்னம் படங்களில் ஒளிப்பதிவு கூட தனியாகத் தெரியும். ஆனால், இந்தப் படத்தில் அதிகமான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே நகர்வதால் அதிலும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஒரு கேங்ஸ்டர் குடும்பம், அதில் வாரிசு சண்டை, அவர்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் கொன்று கொல்கிறார்கள், யாரிடமும் நேர்மை இல்லை, பாசம் இல்லை, பதவி, பணம்தான் பெரிதாகத் தெரிகிறது. இதையே ஒரு குடும்பக் கதையாகச் சொன்னால் விசு, வீ.சேகர் ஆகியோர் படத்தைப் பார்த்த மாதிரி இருக்கும். இது மணிரத்னம், ஏஆர் ரகுமான் என்பதால் வேறு கலர், வேறு வரவேற்பு, அவ்வளவே...மணிரத்னம் என்ன படம் கொடுத்தாலும் பார்ப்போம் என்று சொல்லும் ரசிகர்களுக்கான படம்.

செக்கச் சிவந்த வானம் - இன்னும் சிவந்து இருக்கலாம்

 

பட குழுவினர்

செக்கச் சிவந்த வானம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓