ஹே சினாமிகா,Hey Sinamika
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜியோ ஸ்டுடியோஸ்
இயக்கம் - பிருந்தா
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால்
வெளியான தேதி - 3 மார்ச் 2022
நேரம் - 2 மணி நேரம் 29 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிக மிகக் குறைவு. கடந்த சில வருடங்களாகத்தான் பல பெண் உதவி இயக்குனர்கள் பல படங்களில் பணியாற்றி வருகிறார்கள். எதிர்காலங்களில் நிறைய பெண் இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு வர வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், நடன இயக்குனர்களாக பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் பல வருடங்களாகப் பிரபலமாக இருக்கும், பல முன்னணி நடிகர்கள், நடிகைகளை ஆட வைத்த 'பிருந்தா மாஸ்டர்' என்றழைக்கப்படும் பிருந்தா இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

பெண்கள் இயக்குனர்களாக வரும் போதுதான் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களது கருத்துக்கள், எண்ணங்கள், பார்வைகள் படமாக வர முடியும். இந்தப் படத்தில் ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து அவளுக்கான எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் பிருந்தா. உளவியல் ரீதியான ஒரு படம், அதை எந்தக் குழப்பமும் இல்லாமல் அதிக ஆச்சரியம், கொஞ்சம் தடுமாற்றத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதரி. 'வாயை மூடிப் பேசவும்' படத்தின் கதாநாயகனாக துல்கர் இந்தப் படத்தில் வாயை மூடாமல் எப்போதும், விடாமல் ரேடியோ ஆர்ஜே போல பேசிக் கொண்டேயிருக்கிறார். திருமணத்திற்குப் பின்பு துல்கரின் அந்த குணம், அதிதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பாதிக்கிறது. அதனால், சைக்காலஜிஸ்ட்டான காஜல் அகர்வாலிடம் உதவி கேட்கிறார். தனது கணவர் துல்கரைக் காதலிப்பது போல நடிக்கச் சொல்கிறார். துல்கர் காதலில் விழுந்தால் அதை வைத்து அவரைப் பிரிந்துவிட நினைக்கிறார். அதிதியின் மிரட்டலான அன்பால் அதை ஏற்றுக் கொண்டு துல்கரை நெருங்குகிறார் காஜல். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பேசுவார், பேசுகிறார், பேசிக் கொண்டே இருப்பார் என்று சொல்வது போல் நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருக்கும் குணம் கொண்டவர் யாழன் ஆன துல்கர் சல்மான். எதைப் பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சலிக்காமல் பேசுவார். அதிதியைக் காதலித்து மணந்து கொண்டு 'ஹவுஸ் ஹஸ்பென்ட்' ஆக இருக்கிறார். சமைப்பதில் அவ்வளவு ஆர்வம், செடி கொடிகள் வளர்ப்பது என இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஹஸ்பென்ட் கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்கும் ஒரு கதாபாத்திரம், ஆனால், பேச்சைத் தவிர. தமிழில் அடிக்கடி நடிக்காமல் சரியாகத் தேர்வு செய்து நடிப்பவர் துல்கர். அதை இந்தப் படத்திலும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். அவரை ரசிக்கவே முதல் நாள் முதல் காட்சியில் தியேட்டரில் அத்தனை இளம் பெண் ரசிகைகள். அடிக்கடி தமிழிலும் நடிக்க வாருங்கள் துல்கர்.

தமிழில் எந்த ஒரு கனமான கதாபாத்திரத்திலும் நடிக்கக் கூடிய நடிகைகள் குறைவுதான். 80, 90களுக்குப் பிறகு கடந்த இருபது வருடங்களாக அப்படி நடிக்கும் நடிகைகளைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. ஆனால், நான் இருக்கிறேன் என ஆஜர் ஆகிறார் அதிதி ராவ் ஹைதரி. கணவன் துல்கரை ரொம்பவும் பிடிக்கும், ஆனால், கொஞ்சமாகப் பிடிக்காது. அந்தக் கொஞ்சமாகப் பிடிக்காத காரணத்திற்காக அவரைப் பிரிய நினைப்பது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் எந்தக் காட்சியில், எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி இயல்பாய் நடித்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையின் பெரும்பாலான பெண்களின் குணத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரம். அதில் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

சைக்காலஜிஸ்ட் மலர்விழியாக காஜல் அகர்வால். இடைவேளைக்கு சற்று முன்னர்தான் வருகிறார். ஒரு மெச்சூர்டான கதாபாத்திரம். ஆரம்பத்தில் கொஞ்சம் காமெடித்தனமாகக் காட்டிவிட்டு அப்புறம் சீரியசான கதாபாத்திரமாக மாற்றிவிடுகிறார்கள். காஜலுக்கு திருணமாகிவிட்டதாலோ என்னவோ அவரிடம் இருக்கும் அந்த குறும்புத்தனம் நிறையவே மிஸ்ஸிங்.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு 'ஸ்பேஸ்' இல்லாமல் படம் முழுவதும் துல்கர், அதிதி, காஜல் ஆகியோரைச் சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. யோகி பாபு ஒரே ஒரு காட்சியில் எதற்கு வந்தார் என்றே தெரியாமல் வந்து போகிறார். ஆர்ஜே விஜய் ஆரம்பத்தில் துல்கரிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் அந்த ஒரு காட்சியிலேயே தன்னைப் பற்றி பேச வைக்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையில் பின்னணி இசை உணர்வை இன்னும் அழுத்தமாக்குகிறது. பாடல்கள் படம் பார்க்கும் போது ஏதோ செய்தாலும் வெளியில் வந்தால் மறந்துவிடுகிறது. ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட். வேறு ஒரு கலரில் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் பிருந்தாவிடம் மணிரத்தினத்தின் பாதிப்பு அதிகம் இருக்கிறது. 'மௌனராகம், அலைபாயுதே, ஓ காதல் கண்மணி' படங்களின் சாயல் ஆங்காங்கே வந்து போகிறது. இடைவேளை வரை சுவாரசியமாக நகரும் படம் இடைவேளைக்குப் பிறகு தடுமாறுகிறது. பின் கிளைமாக்சில் வந்து சில பல நியாயம் சொல்லி சினிமாத்தனமாக முடித்திருக்கிறார்.

ஹே சினாமிகா - ஓகே சினாமிகா

 

ஹே சினாமிகா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஹே சினாமிகா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓