வி (தெலுங்கு),V (Telugu)
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி
தயாரிப்பு - ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
இயக்கம் - மோகன் கிருஷ்ண இந்திராகாந்தி
இசை - தமன், அமித் திரிவேதி
வெளியான தேதி - 5 செப்டம்பர் 2020 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கொரானோ ஊரடங்கு காரணமாக ஓடிடி தளங்களில் அனைத்து மொழிகளிலும் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தெலுங்கில் வந்துள்ள பெரிய படம் இது. இம்மாதிரியான த்ரில்லர் வகை படங்களை ஓடிடி தளங்களுக்குப் பொருத்தமான படங்கள்.

எதிர்பார்த்த அளவிற்கு படத்தில் பெரிய பரபரப்பு, சஸ்பென்ஸ் இல்லையென்றாலும் போரடிக்காமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மோகன் கிருஷ்ண இந்திராகாந்தி.

தெலங்கானா காவல்துறையில் டிசிபி ஆக இருப்பவர் சுதீர்பாபு. அவருக்கு சவால் விடுத்து ஒரு சைக்கோ கொலைகாரன் அடுத்தடுத்து ஐந்து பேரை கொலை செய்வேன் எனச் சொல்லி அதைச் செய்தும் காட்டுகிறார். அந்த சைக்கோ கொலைகாரனாக நானி. அவர் ஏன் இப்படி கொலைகளைச் செய்கிறார், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் இரண்டு நாயகர்கள் சுதீர் பாபு, நானி. ஆனால், நானியை விட சுதீர் பாபுவுக்குத்தான் முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. டிசிபி ஆக அப்படியே கதாபாத்திரத்தில் உள்வாங்கிக் கொண்டு கம்பீரமாக நடித்திருக்கிறார் சுதீர்.

தெலுங்குத் திரையுலகத்தில் வித்தியாசமான படம், கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நானி. இந்த முறை ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கொஞ்சம் நீளமான தாடி, சோகமான முகம், மிரட்டலான குரல் என நானி வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார்.

படத்தில் இரண்டு கதாநாயகிகள் நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி. சுதீர் பாபு ஜோடியாக நிவேதா தாமஸ். இவர் நானிக்கு உதவி செய்யும் கதாபாத்திரமோ என நம்மையும் சந்தேகிக்க வைக்கிறார்கள். அதிதி பிளாஷ்பேக்கில் மட்டும்தான் வருவார் என ஒரு கட்டத்தில் நமக்கும் புரிய ஆரம்பித்துவிடுகிறது.

தமிழில் வெளிவந்த ராட்சசன் படத்தின் பின்னணி இசையை ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள்.படத்திற்குப் பின்னணி இசை தமன். பாடல்களுக்கு அமித் திரிவேதி இசையமைத்திருக்கிறார். இரவு நேரக் காட்சிகளில் த்ரில்லிங்கை இன்னும் அதிகப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.வின்டா.

இடைவேளை வரை படம் கொஞ்சம் பரபரப்பாக நகர்கிறது. ஆனாலும், ரயில், பேருந்து ஆகியவற்றில் நானி உடன் பயணிப்பவர்களை பயமுறுத்தும் காட்சிகள் படத்திற்குத் தேவையில்லாத காட்சிகள். பிளாஷ்பேக்கில் நானி ஒரு ராணுவ வீரர் என சுற்றி வளைத்து கதை சொல்கிறார்கள். அது படத்தின் வேகத்தை அப்படியே குறைத்துவிடுகிறது.

எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் ரசிக்கும் படமாகத்தான் இருக்கிறது. இன்னும் திரைக்கதையை வலுவாக அமைத்திருந்தால் நல்ல த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.

வி - ஓகே

 

பட குழுவினர்

வி (தெலுங்கு)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓