
மஹா
விமர்சனம்
தயாரிப்பு - எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - யு.ஆர்.ஜமீல்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - ஹன்சிகா, ஸ்ரீகாந்த், சிம்பு
வெளியான தேதி - 22 ஜுலை 2022
நேரம் - 1 மணி நேரம் 49 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பெண் குழந்தை கடத்தல் பற்றிய படங்கள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு த்ரில்லர் படம் இது. இம்மாதிரியான 'சைக்கோ'த்தனமான படங்களைப் பார்க்கும் போது பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் நிறையவே பயப்படுவார்கள்.
படத்தை ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாகக் கொடுக்காமல் மிக மெதுவான திரைக்கதை அமைத்து நம் பொறுமையை சோதிக்கிறார் படத்தின் இயக்குனர் ஜமீல். சிம்பு போன்ற ஒரு முன்னணி நடிகர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவரையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்திருக்கிறார்.
ஹன்சிகா ஏர்--ஹோஸ்டஸ் ஆக இருந்தவர். காதல் கணவர் சிம்புவை இழந்து ஒரே மகள் மானஸ்வியுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு சைக்கோ கொலைகாரன் மானஸ்வியைக் கடத்தி கொலை செய்துவிடுகிறான். அது போல தொடர்ந்து கடத்தல்களைச் செய்பவன். தன் மகளை கடத்திக் கொன்ற அந்த கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ஹன்சிகா. காவல் துறை அதிகாரியான ஸ்ரீகாந்த் ஒரு பக்கம் இந்த வழக்கு பற்றி விசாரித்து வரும் சூழ்நிலையில், ஹன்சிகா கொலைகாரனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம். சிம்பு எப்போது இவ்வளவு குண்டாக இருந்தார் என்று யோசிக்க வைக்கிறது. எதற்காக அவர் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரே ஒரு சண்டைக் காட்சிக்கும், ஒரே ஒரு காதல் காட்சிக்கும் மட்டும் பயன்பட்டிருக்கிறார்.
படத்தில் ஹன்சிகாவைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. 'ஓகே ஓகே'வில் இளம் ரசிகர்களைக் கவர்ந்த ஹன்சிகாவா இது என ஆச்சரியப்பட வைக்கிறார். முகத்தில் ஏன் இவ்வளவு சோகம் எனத் தெரியவில்லை. இருப்பினும் தன் மகளையும், கணவரையும் இழந்த சோகத்திற்கு அது இயல்பாகவே உதவி புரிந்திருக்கிறது. ஆனால், ஹன்சிகா இவ்வளவு அழுது கொண்டே இருப்பதெல்லாம் எந்த ரசிகருக்குப் பிடிக்கும்.
காவல் துறை உதவி அதிகாரியாக ஸ்ரீகாந்த். அவர் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு வில்லனைத் தேடிப் போகும் காட்சியில் தியேட்டர்களில் சிரித்து வைக்கிறார்கள். அதிலும் பல தமிழ்ப் படங்களில் வந்தது போல, கிளைமாக்சில் எல்லாம் முடிந்த பிறகு அவர் ஏதோ என்கவுன்டர் செய்வது போல பரபரப்பாக வர தியேட்டரே சிரிக்கிறது.
மலையாள சுஜித் சங்கர் படத்தில் வில்லன். சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.
படத்திற்குப் பின்னணி இசை ஜிப்ரான். நேற்று வெளிவந்த மற்றொரு படமான 'தேஜாவு' படத்தில் தன் பின்னணி இசையால் அந்தப் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றிய ஜிப்ரானா இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என ஆச்சரியப்பட வைக்கிறார்.
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக ஓடும் படம். அதைக் கூட இவ்வளவு சுமாராக எப்படி எடுக்க முடிகிறது என்பது அதிர்ச்சிதான்.
மஹா - ஆஆஆஆஆ…
மஹா தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
மஹா
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்