தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 1991ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பிறந்தார் ஹன்சிகா. இவரது தந்தை பிரதீப் மோத்வானி தொழிலதிபர், தாய் தோல் சிகிச்சை நிபுணர். சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, குமரியானதும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கிய தேசமுத்ரு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஹன்சிகா, தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
நடிகர் சிம்புடன் காதல் வயப்பட்டு, பின்னர் அந்த காதலை முறித்து கொண்டார் ஹன்சிகா. ஒவ்வொரு ஆண்டு தனது பிறந்தநாளின் போதும், ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதை வழக்கமாக கொண்டுள்ள உயர்ந்த உள்ளம் படைத்தவர்.