தினமலர் விமர்சனம் » கடல்
தினமலர் விமர்சனம்
அந்தகாலத்து "அலைகள் ஓய்வதில்லை" ஜோடிகள் கார்த்திக்-ராதாவின் வாரிசுகள் கவுதம் கார்த்திக் - துளசி ராதா இருவரும் காதல் ஜோடிகளாக களம் இறங்கிட, மணிரத்னம் இயக்கி இருக்கும் படம்தான் "கடல்!" அது காதல் படமா, மோதல் படமா... கருத்து பரப்பும் படமா...? கடத்தல் படமா...? என்பதெல்லாம் ஆழ்கடல் போல அதன் இயக்குனர் மணிரத்னத்திற்கே புரியாத புதிராக இருந்திருக்குமோ...? எனும் சந்தேகத்தை கிளப்புகிறது "கடல்" படத்தின் திரை மொழியும், சில பல காட்சியமைப்புகளும்! டெக்னிக்கலாக கடல் படத்தின் பல காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இருந்தாலும், மேற்படி புரியாதபுதிர் சமாச்சாரங்களால் தியேட்டரில் உடல்நெளியும் ரசிகர்களின் மனோநிலை "கடல்" படத்தின் பெரும் பலவீனம் என்றால் மிகையல்ல!!
கதைப்படி கிறிஸ்தவம் படித்து பாதிரியராக ஊழியம் செய்ய பிரியப்பட்டு வரும் பணக்கார இளைஞர் அரவிந்த்சாமி, அதே பிஷப் மடத்தில் பயிலும் ஏழை அர்ஜூனின் ஒழுங்கினங்களையும், சுயகட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையையும், மேலிடத்தில் சொல்லி அந்த குருகுலத்தை விட்டு அனுப்புகிறார். குடும்ப சூழலை சொல்லி, அர்ஜூன் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் அரவிந்தசாமி அவரை போட்டுக் கொடுத்ததால் அங்கிருந்து கிளம்பும் அர்ஜூன், இதேமாதிரி ஒருநாள் நீயும் அவமானப்படுவாய் அன்று புரியும் என் நிலை... என்று சபதம் இட்டுவிட்டு கொடுஞ்செயல்கள் செய்யும் சாத்தானாக மாறிப்போகிறார். அந்த சாபத்தை மறந்து படித்து முடித்து பாதிரியராக ஓர் கடற்கரையோர கிறிஸ்தவ கிராமத்து பாழடைந்த சர்ச்க்கு வரும் அரவிந்த்சாமி, அந்த சர்ச்சையும், அந்த ஊர் மக்களையும் புதுப்பிக்கிறார். குறிப்பாக அந்த ஊர் மக்களால் அவனது இழி பிறப்பை காரணம் காட்டி அடியோடு வெறுத்து ஒதுக்கப்படும் ஒரு சிறுவனை ஓர் தூய கிறிஸ்துவனாக வளர்த்து ஆளாக்குகிறார்.
இச்சமயத்தில் அந்த ஊருக்கு வரும் சாத்தான் அர்ஜூன், அரவிந்த்சாமியை எப்படி பழி தீர்க்கிறார், என்பதோடு அவர் வளர்த்து ஆளாக்கிய கார்த்தி கவுதமையும் எப்படி தீய வழிக்கு இட்டு செல்கின்றார் என்பதும், அதிலிருந்து அரவிந்த்சாமி உதவியுடன் கெளதம் எப்படி மீள்கிறார்? என்பதும் தான் கடல் படத்தின் கதை! இதனூடே அந்தப்பகுதியில் மருத்துவ சேவை செய்ய வரும் நர்ஸ் துளசி - கார்த்திக் கெளதமின் காதல் கதையையும், அவர் அர்ஜூனின் மகள் எனும் ப்ளாஷ்பேக்கையும் கலந்துகட்டி கடல் படத்தின் கதையை இழு இழுவென இழுத்து, ஏதோ கிறிஸ்தவ பிரச்சார படம்மாதிரி கடல் படத்தை பாவமன்னிப்பு, சாத்தான், தேவன், தேவதூதன் போன்ற வார்த்தைகளால் நிரப்பி போரடிக்க செய்து விடுகிறார்கள் இயக்குனர் மணிரத்னமும், கதை, வசனகர்த்தா ஜெயமோகனும். பாவம் ரசிகர்கள்!
கவுதம் கார்த்திக், துளசி, அரவிந்தசாமி, அர்ஜூன், லக்ஷ்மி மஞ்சு, பொன்வண்ணன், சிங்கம்புலி, கலைராணி உள்ளிட்ட ஓர் பெரும் நட்சத்திர பட்டாளத்தில் அரவிந்த்சாமியும், அர்ஜூனும், பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்துவிட கவுதம் கார்த்திக்கும், துளசி ராதாவும் ஜஸ்ட் பாஸ் பண்ணி விடுகிறார்கள்!
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் புரிந்தும் புரியாத ர(ரா)கம்! பின்னணி இசை படத்தின் பெரும்பலம். ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு உலகத்தரம். குறிப்பாக அந்தக்ளைமாக்ஸ் கப்பல், கடல் சண்டைக்காட்சிகள், கடல்சீற்றங்கள் பிரமாதம், பிரமாண்டம்! சசிதர அடப்பாவின் ஆர்ட் டைரக்ஷனும் சேகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் அப்படியே! ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ஜெயமோகனின் எழுத்தும், மணிரத்னத்தின் இயக்கமும் எடுபடாதது வருத்தம்!
மொத்தத்தில் "கடல்" டெக்னிக்கலாக "மிரட்டல்!" காட்சியமைப்புகளில் "குமட்டல்!!"--------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ஒரு டீ கோப்பைக்குள் சுறா மீனை அடைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
பாதிரியார் பணிக்குப் பயிற்சி எடுக்கும் அர்ஜுன், அஜால் குஜால் சமாசாரம் செய்வதை அரவிந்தசாமி பார்த்துவிட, வெறியேற்றப்படுகிறார் அர்ஜுன். போகும்போத “உன்னை சும்மா விட மாட்டேன்’ என்று சாத்தான் வசனம் பேசிவிட்டுச் செல்பவர் கொடூர கிரிமினல் ஆகிறார். அரவிந்தசாமி, பாதிரியாராக ஒரு சர்ச்சுக்கு வர, தன் காதலிக்கும் அரவிந்தசாமிக்கும் தகாத உறவு என்று கெட்ட பெயர் உருவாக்கி, கொலைப் பழியுடன் ஜெயிலுக்கு அனுப்புகிறார் அர்ஜுன். அந்தக் காதலியையும் க்ளோஸ் செய்துவிடுகிறார். இடையில் ஒரு கெட்ட பையனை(கௌதம்), அரவிந்தசாமி திருத்தி, நல்லவனாக ஆக்க, அவனையும் கொடூரமானவனாக ஆக்குகிறார் அர்ஜுன்.
அர்ஜுனின் மகளை அதாவது ஒரு பணக்காரரின் மனைவியை அர்ஜுன் கர்ப்பமாக்கி, குழந்தை பிறந்தவுடன் கணவன் மனைவி இருவரையும் கொன்று விடுகிறார். மகள் (துளசி) மட்டும் ஆசிரமத்தில் வளர்கிறாள். துளசியை கௌதம் காதலிக்க, அவளையும் கொலை பண்ண அர்ஜுன் முயற்சிக்க... என்னங்க தலை சுற்றுகிறதா? உங்களுக்கே அப்படி என்றால் 120 ரூபாய் டிக்கெட் எடுத்துப் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்? (கதை, வசனம் ஜெயமோகன்)
குறும்பு, காதல், மோதல், ஆக்ரோஷம், ஆட்டம், தவிப்பு, அழுகை என்று அத்தனை உணர்ச்சிகளையும் அற்புதமாகக் காட்டியிருக்கிறார் கார்த்திக்கின் புத்திரன் கௌதம். அப்பன் ஆறடி பாய்ந்தால் பையன் பதினாறு அடி பாய்ந்திருக்கிறது. கார்த்திக் போல் ஷூட்டிங் சொதப்பல் எல்லாம் பண்ணாமல் நல்ல பிள்ளையாக இருந்தால் ஒரு ரவுண்ட் வரலாம்.
“அலைகள் ஓய்வதில்லை’யில் அம்மாவைப் பார்த்தது போல் இருக்கிறார் துளசி. அவரின் சின்னச் சின்ன பார்வைகள் ரசிக்க வைக்கின்றன. மனநிலை வளராத பெண் என்ற பெரிய பாத்திரத்தைத் தூக்க சிரமப்படுவது தெரிகிறது.
பல வருடங்கள் கழித்து அரவிந்தசாமி. தியேட்டரில் அவர் தோன்றும் முதல் காட்சியில் கைதட்டுகிறார்கள் ரசிகர்கள். மனிதர் அப்படியே இருக்கிறார். அதுவும் அந்தப் பாதிரியார் பாத்திரம் கச்சிதம்.
இத்தனை நாள் காப்பாற்றி வந்த தேசிய நல்ல பெயரையெல்லாம் காற்றில் பறக்க விட்டிருக்கிறார் அர்ஜுன். என்னதான் அவர் நன்றாகச் செய்திருந்தாலும் இவ்வளவு கொடூரமான வில்லனாக அவரை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் என்றாலே தனி கவனம் செலுத்துவார் என்பது ஊரறிந்த ரகசியம். “நெஞ்சுக்குள்ளே’வும், “அடியே’வும் ஆளை அப்படியே சொக்க வைக்கின்றன.
தாயின் மரணத்தைக் கண்டு தவிக்கும் அந்தச் சிறுவனின் தாபமும், பிணத்தின் கால்களை ஒடித்து மூடும் ஊரரின் உணர்வும் கண்கலங்க வைக்கிறது.
ராஜீவ் மேனனின் கேமராவும், சசிதர அடப்பாவின் கலை வண்ணமும் கிராஃபிக்ஸும் உலகத் தரத்துக்கு இருக்கின்றன. அதுவும் க்ளைமாக்ஸில் நடுக்கடலில் படகில் நடக்கும் அந்தச் சண்டைக்காட்சி பிரமிக்க வைக்கிறது.
“மனிதனுக்கு பாவம் செய்யச் சொல்லித் தர வேண்டாம். நடக்கறா மாதிரி அது தானா வந்துடும்’ போன்று சில இடங்களில் ஜெயமோகன் எட்டிப் பார்க்கிறார்.
மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவுக்கு இப்படி ஒரு பாத்திரமா? ஐயோ பாவம்!
கடலோர கிராமம், சர்ச் என்று மூன்று மணி நேரம் அந்த உலகத்திலேயே இருந்த மாதிரி ஒரு உணர்வைத் தந்திருப்பதற்காக மட்டும் மணிரத்னத்தை பாராட்டலாம்!
க................டல்!ஆஹா: கௌதம் கார்த்திக், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜீவ் மேனன்
ஹிஹி: திகட்டத் திகட்ட கதைகுமுதம் ரேட்டிங் - ஓகே