திமிரு புடிச்சவன்
விமர்சனம்
நடிப்பு - விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், தீனா மற்றும் பலர்
தயாரிப்பு - விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் - கணேஷா
இசை - விஜய் ஆண்டனி
வெளியான தேதி - 16 நவம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 36 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துவிட்டது. இருந்தாலும் நமது இயக்குனர்கள் சளைக்காமல் போலீஸ் கதைகளை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தப் படமும் வழக்கமான போலீஸ் கதைதான். ஆனால், திமிரு புடிச்ச போலீஸ்காரரின் கதை. தப்பு செய்தது தன் தம்பியாகவே இருந்தாலும் அவனை என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ்காரரைப் பற்றிய கதை.
இயக்குனர் கணேசா முழு கமர்ஷியல் படத்தைக் கொடுத்திருக்கிறார். சில காட்சிகளில் ஒரு தெலுங்குப் படத்தைப் பார்ப்பது போன்று கமர்ஷியல் நெடி தூக்கலாகவே இருக்கிறது.
பள்ளியில் படிக்கும் தன் தம்பியை அதட்டி, உருட்டி, கட்டுப்பாடுடன் வளர்க்கிறார் கான்ஸ்டபிளாக இருக்கும் அண்ணன் விஜய் ஆண்டனி. அண்ணனின் கட்டுப்பாடு பிடிக்காத தம்பி, ஊரை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்து அந்த வயதிலேயே அடியாளாக மாறுகிறான். சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் விஜய் ஆண்டனி. அவர் வந்த சமயத்தில் தம்பி, ஒருவரைக் கொலை செய்துவிட, தம்பியை என்கவுன்ட்டர் செய்து இன்ஸ்பெக்டர் ஆகிறார். தம்பி அப்படி இளம் குற்றவாளியாக மாறக் காரணம் தாதா தீனா என்பது தெரிய வருகிறது. தீனாவிடம் அப்படி பல இளம் குற்றவாளிகள் இருப்பதால், அவர்களை மீட்கத் துடிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் விறைப்பாக இல்லாமல் எப்போதும் முறைப்பாகவே இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்துக்குப் படம் இப்படி சோக மயமாகவே நடிப்பதை மாற்றிக் கொள்வது விஜய் ஆண்டனிக்கு நல்லது. இந்தப் படத்தில் அநியாயத்திற்கு நல்ல போலீசாக நடித்திருக்கிறார். அதுவும் தவறு செய்யும் தம்பியை ஈவு இரக்கம் இன்றி தண்டிக்கும் போலீசாக, இதுவரை பார்த்திருக்கிறோமா என்பதும் சந்தேகம்தான். ஆக்சன் ஹீரோ ஆசை விஜய் ஆண்டனியையும் விட்டு வைக்கவில்லை.
'வேலவா...' பாடலில் அடியாட்களை அடித்தால் ஐம்பது அடி உயரம் பறந்து விழுகிறார்கள். முந்தைய படங்களின் தோல்வியிலிருந்து இந்தப் படத்தில் கொஞ்சம் மீண்டு விடுவார் என்றே தோன்றுகிறது.
20 ரூபாய் லஞ்சம் வாங்கும் சப்-இன்ஸ்பெக்டராக நிவேதா பெத்துராஜ். இப்படி 20 ரூபாய் லஞ்சம் வாங்கும் ஒரு பெண் போலீசை தமிழ் சினிமா பார்த்திருக்க வாய்ப்பில்லை. தெனாவெட்டான ஒரு கதாபாத்திரத்தில் யதார்த்தமாகவே நடித்திருக்கிறார். ஆனாலும், இவருக்கும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனிக்கும் காதல் உருவாவதை நம்பத்தான் முடியவில்லை.
இதுவரை பல மெயின் வில்லன்களுக்கு அடியாளாக நடித்து வந்த தீனா, இந்தப் படத்தில் பிரமோஷன் ஆகி தனி வில்லனாக நடித்திருக்கிறார். அடியாளாக வந்தாலே தன் தோற்றத்திலும், பேச்சிலும் மிரட்டுபவர், தனி வில்லன் வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடுவாரா என்ன, மிரட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தை எந்த கொச்சைப்படுத்தலும் இல்லாமல் காட்டிய முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். சப்இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் திருநங்கை சிந்துஜா நடித்திருக்கிறார்.
இளம் அடியாட்களாக ஜாக் ராபின், நிக்சன், சாய் ராகுல், கிச்சா நடித்திருக்கிறார்கள். நால்வரும் நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் கதாபாத்திரங்களுக்குள் மிரட்டுகிறார்கள்.
விஜய் ஆண்டனி இசையில் 'வேலவா...' பாடல் உணர்ச்சி பூர்வமாக அமைந்துள்ளது. பின்னணி இசையில் படத்திற்கான வேகத்தைக் கூட்டியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி, அவருடைய தம்பி இடையிலான படத்தின் ஆரம்பக் காட்சிகளை இன்னும் சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம். இடைவேளைக்குப் பின் பெரிய ஆக்ஷன் மோதல்கள் இல்லை. தீனாவை சிறு சிறு குற்றங்களைச் செய்ய வைத்து, சிக்க வைத்து, சிறைக்கு அனுப்புவது சுவாரசியமாக உள்ளது.
பி அன்ட் சி ரசிகர்களை மனதில் வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கெட்டவனை அழிக்க என்ன நல்லது செய்ய வேண்டும் என்ற பார்முலா படத்தைக் காப்பாற்றுகிறது.
திமிரு புடிச்சவன் - பிடிக்கலாம்!
பட குழுவினர்
திமிரு புடிச்சவன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்