மகான்,Mahaan

மகான் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை- சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - விக்ரம், த்ருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன்
வெளியான தேதி - 10 பிப்ரவரி 2022 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 42 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு வட சென்னை ரவுடியிசப் படம். நமது இயக்குனர்கள் இன்னும் எத்தனை வட சென்னை ரவுடி கதைகளை ஒளித்து வைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனாலும், ஒரு ஸ்டைலிஷான மேக்கிங், நடிகர்களின் ஈடுபாட்டான நடிப்பு ஆகியவற்றால் இந்தப் படத்தைப் பார்க்க வைக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

'ஜிகர்தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம்' பட வரிசையில் மீண்டும் ஒரு 'ரா'வான படம் காட்டியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அந்தப் படங்களில் உள்ள சில கதாபாத்திரங்களின் சாயல், காட்சிகள் ஆகியவை சற்றே வந்து போகும் உணர்வும் இந்த 'மகான்' படத்தைப் பார்க்கையில் ஏற்படுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பின் மது ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பாரம்பரியம் மிக்க காந்திய வழி குடும்பம் விக்ரம் உடையது. காந்தி மீதுள்ள பற்றால் விக்ரமுக்கு காந்தி மகான் எனப் பெயர் வைக்கிறார் அவரது அப்பா. காமர்ஸ் வாத்தியாரான விக்ரம் தனது 40வது பிறந்தநாளில் தன் விருப்பப்படி ஒரு நாள் வாழ நினைக்க, அதனால் ஏற்படும் சண்டையில் மனைவி சிம்ரன் மகனை அழைத்துக் கொண்டு கணவரை விட்டே செல்கிறார். தனது பால்ய கால நண்பனான சாராயக் கடை ஓனர் பாபி சிம்ஹாவை யதேச்சையாக சந்திக்கும் விக்ரம் அவருடன் சேர்ந்து பார்ட்னர் ஆகிறார். இருவரது கூட்டணியும் சாராய சாம்ராஜ்யமாக உருவாகிறது. அந்தக் கூட்டணியை உடைக்க பல வருடங்களுக்குப் பிறகு விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் சிறப்பு போலீஸ் அதிகாரியாக வருகிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.

இந்தக் கதையில் இன்னும் பல பழைய ஹிட் தமிழ்ப் படங்களின் கதை உங்களுக்கு ஞாபகம் வந்தால் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பிற்காலத்தில் யு டியூப் பேட்டிகளில் அதற்கு பதில் தருவார்.

மொத்த படத்தையும் விக்ரம் தான் தாங்கி நிற்கிறார். அதே சமயம் மற்றவர்களுக்கும் சரியான முக்கியத்துவம் தருவதிலும் தனித்து நிற்கிறார். துணை முதல்வரை சந்திக்கும் ஒரு காட்சியில் அவர் அமைதியாக இருந்து நண்பன் பாபி சிம்ஹா ஆவேசமாகப் பேசவும் வாய்ப்பு தருகிறார். படத்தில் பல வித கெட்டப்புகளில் வருகிறார் விக்ரம். சில தோற்றங்கள் ஹாலிவுட் நடிகர்களையும் ஞாபகப்படுத்துகிறது. மகனுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில், சண்டை போடும் காட்சிகளில் நிஜ அப்பா, மகன் சண்டை போடுகிறார்கள் என்றே தெரியவில்லை, அந்தக் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள். விக்ரமின் நடிப்புக்கு அவ்வளவு தீனி போட்டிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா என்பது போல் உள்ளது த்ருவ் விக்ரம் நடிப்பு. அப்பா, மகன் இருவரும் வரும் காட்சிகளில் கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் யார் பேசுகிறார்கள் என்று வித்தியாசப்படுத்த முடியாத அளவிற்கு இருவரது குரலும் ஒலிக்கிறது. சில காட்சிகளில் த்ருவ் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்கிறாரோ என்றும் கூட நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், அவர் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி என்று சொல்லிவிடுவதால் அதையும் அட்ஜஸ்ட் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். இடைவேளை சமயத்தில் வந்தாலும் சரியாக 'டப்' கொடுக்கிறார் த்ருவ்.

இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிப்பதற்கே பாபி சிம்ஹாவிற்குப் பாராட்ட வேண்டும். வழுக்கை விழுந்த அந்த ஹேர்ஸ்டைல் அவருக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு காட்சியிலும் அவரது அழுத்தமான நடிப்பு அனைத்தையும் பொருத்தமாக்கி விடுகிறது. விக்ரம், த்ருவ் விக்ரம் தவிர இவரும் ஒரு ஹீரோ தான். இவர் மட்டுமா பாபி சிம்ஹாவின் மகனாக நடிக்கும் சனந்த், தன் பங்கிற்கு சில காட்சிகளில் தெறிக்க விடுகிறார்.

சிம்ரனுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை, ஆரம்பத்திலும், கடைசியிலும் மட்டுமே வந்து போகிறார். கதாநாயகிகள் என படத்தில் யாருமே இல்லாதது 'டிரை' ஆக இருக்கிறது.

'ரா' வான படம் என்றால் இப்படித்தான் பாடல் இருக்க வேண்டும் என சந்தோஷ் நாராயணன் முடிவு செய்துவிட்டாரோ. படத்தோடு பார்க்க ஓரளவிற்குப் பொருத்தமாக இருந்தாலும் தனியாகக் கேட்டால் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும், பின்னணி இசையில் குறை வைக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா , கலை இயக்குனர் மோகன் படத்தின் முக்கிய தூண்கள்.

படம் முழுவதும் புகை பிடிக்கும், மது குடிக்கும் எச்சரிக்கை வாசகங்களை நிரந்தரமாகவே வைத்திருக்கலாம். படம் முழுவதும் அவ்வளவு சிகரெட் பிடிக்கிறார் விக்ரம். ரஜினிகாந்த் கூட படங்களில் சிகரெட் பிடிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். விக்ரம் போன்ற சீனியர் நடிகர்களும் இதைக் கடைபிடித்தால் நல்லது.

படத்தின் நீளம் கொஞ்சம் சோதனையைத் தருகிறது. துப்பாக்கி, கத்தி, ரத்தம், சிகரெட், மது, அடிதடி, சண்டை என இருப்பதால் பெண்கள் ரசிக்க முடியாத ஒரு படமாகவும் இருக்கிறது.

படம் முடிந்ததைப் பார்க்கும் போது மகான் - 2 நிச்சயம் வரும் என்றே தெரிகிறது.

மகான் - மகானை எதிர்க்கும் மகன்

 

மகான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மகான்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

விக்ரம்

நடிகர் விக்ரமின் இயற்பெயர் ஜான் கென்னடி. 1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம்தேதி பரமக்குடியில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரமின் ரசிகர்கள் அவரை சீயான் என்ற பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள். பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். ராவணன் படத்தின் மூலம் இந்தியிலும் நடிக்கத் தொட்ங்கிய விக்ரம், தனது தனிப்பட்ட வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவர்.

மேலும் விமர்சனம் ↓