ஜகமே தந்திரம்,Jagame Thandhiram

ஜகமே தந்திரம் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ
தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலயன்ஸ் என்டெர்டெயின்மென்ட்
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
வெளியான தேதி - 18 ஜுன் 2021
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

கேங்ஸ்டர் கதை, அதாவது நம்முடைய தமிழ் சினிமா மொழியில் சொல்வதென்றால் தாதா கதை, ரவுடி கதை. சென்னை, மதுரை, திருநெல்வேலி என சுற்றி சுற்றி தாதா கதைகளைப் பார்த்த நமக்கு கபாலி போல கொஞ்சம் வெளிநாட்டு கேங்ஸ்டர் கதையை எந்த ஒரு தந்திரமும் இல்லாமல் கார்த்திக் சுப்பராஜ் காட்டியிருக்கும் படம் தான் இந்த ஜகமே தந்திரம்.

டிரைலர்லாம் நல்லாருக்கு, ஆனா, மெயின் பிக்சர் சரியில்லயேப்பா என சொல்ல வேண்டிய படத்தை, ரஜினி பாணியில் தனுஷ் எவ்வளவு தான் நடித்து படத்தைக் காப்பாற்றுவார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஊறுகாய் போல தொட்டுக் கொள்வார்களோ தெரியவில்லை. கேங்ஸ்டர் படத்தில் எல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்சினை எப்படி ஒட்டும் என்று யோசிக்க மாட்டார்களா?. ஒரு வேளை படம் ஓடிடியில்தான் வெளியாகும், உலகத் தமிழர்களுக்கு எல்லாம் போய் சேர வேண்டும் என சேர்த்திருப்பார்களோ ?.

இலங்கைத் தமிழர்களின் மீது உண்மையான அக்கறை இருந்தால் அவர்களது நிலையைப் பற்றிய ஒரு முழு படத்தை எந்த ஒரு அரசியல் நிலைப்பாடு இல்லாமல் எடுக்க முடியுமா எனப் பாருங்கள். அதுவரை அவர்களை விட்டுவிடுங்கள் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களே....

பரோட்டா கடை நடத்திக் கொண்டு, பணத்துக்காக அடிக்கடி கொலைகளையும் செய்யும் தனுஷ், மதுரையில் ஒரு கொலையை செய்துவிட்டு கொஞ்ச நாள் தலை மறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை. அப்போது லண்டனிலிருந்து அதே அடிதடி வேலை தேடி வருகிறது. லண்டனில் அகதிகளாக வந்து தங்கும் வெளிநாட்டினரை எதிர்க்கும் இனவெறி குணம் தாதாவான ஜேம்ஸ் காஸ்மோவிடம் வேலைக்குச் சேர்கிறார் தனுஷ். ஜேம்ஸின் எதிரியான ஜோஜு ஜார்ஜை சமாளிக்கவே தனுஷ் லண்டனுக்கு அழைத்து வரப்படுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தனுஷ் உதவியுடன் ஜோஜுவைக் கொன்று விடுகிறார் ஜேம்ஸ். பின்னர்தான் ஜோஜு எப்படிப்பட்டவர் என்ற விவரம் தனுஷுக்குத் தெரிய வருகிறது. பல நாட்டிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு உதவி செய்பவரே ஜோஜுதான். அப்படிப்பட்டவரைக் கொலை செய்ய உதவி செய்த பாவத்திற்காக ஜேம்ஸையே எதிர்க்கத் துணிகிறார் தனுஷ். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தனுஷின் சுருளி கதாபாத்திரத்தின் வடிவமைப்பை யோசிக்க கார்த்திக் சுப்பராஜ் ரொம்பவெல்லாம் யோசிக்கவில்லை. பேட்டை படத்தின் பிளாஷ்பேக்கில் வரும் ரஜினிகாந்த் கதாபாத்திரமான பேட்டை வேலன் கதாபாத்திரத்தை அப்படியே சுருளி ஆக மாற்றிவிட்டார். அதே, கிடா மீசை, உடல்மொழி, பேச்சு, பாவனை என ரஜினிகாந்த் படத்தில் கொஞ்ச நேரமே செய்ததை இந்தப் படத்தில் தனுஷ் முழுவதுமாகச் செய்கிறார். தனக்கென ஒரு தனி பாணியை திரையுலகத்தில் அமைத்துக கொண்ட தனுஷ், இப்படி ரஜினி பாணியை கையிலெடுப்பது சரியா ?. இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற ஒரு நடிகர் இப்படி ஒரு இமிடேட் கதாபாத்திரத்தில் நடிக்கலாமா ?. இருந்தாலும் தன்னுடைய மதுரை நக்கலான நடிப்பின் மூலம் படத்தை முடிந்த அளவிற்குத் தாங்கிப் பிடிக்க முயற்சிக்கிறார்.

இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக ஐஸ்வர்ய லெட்சுமி. மொத்தமே ஆறேழு காட்சிகளில் தான் வருவார் போலிருக்கிறது. அகதிகளாக தாங்கள் படும் வலியைச் சொல்லும் போது கண் கலங்க வைக்கிறார்.

படத்தின் வில்லனாக ஜேம்ஸ் காஸ்மோ. அந்தக் கால தமிழ் சினிமா வில்லன் போல எப்போதும் சுருட்டு பிடித்துக் கொண்டு, தனது கோபத்தை முடிந்த அளவிற்குக் காட்டுகிறார். படம் பார்க்கும் நமக்கு சில காட்சிகளில் பழைய வில்லன் நடிகர் அசோகன் வந்து போகிறார்.

லண்டனில் உள்ள மற்றொரு தாதாவாக ஜோஜு ஜார்ஜ். இந்தப் பெயரைப் பார்த்ததும் ஆங்கில நடிகர் என நினைத்துவிட வேண்டாம். இவர் மலையாள நடிகர். படம் முழுவதும் இருந்து ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் இடைவேளையில் அவரைக் கொன்று விடுகிறார்கள். அவரது தாதாயிசத்தில் கம்பீரமும் கருணையும் இரண்டறக் கலந்திருக்கிறது.

கலையசரன், சவுந்தரராஜா, ஷரத் ரவி, வடிவுக்கரசி சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை வழக்கம் போலவே. இவரும் எத்தனை கேங்ஸ்டர் படங்களுக்குத்தான் மாற்றி மாற்றி இசையமைப்பார். ரகிட ரகிட.. பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. இதே தியேட்டரில் படத்தைப் பார்த்திருந்தால் ரசிகர்கள் நடனமாடி இருப்பார்கள்.

லண்டனில் தான் படம் எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், லண்டன் மாநகரே படத்தில் அதிகம் காட்டப்படவில்லை. பெயருக்கு ஒரு சில தெருக்களை மட்டும் காட்டியிருக்கிறார்கள். மீதியெல்லாம் எங்கோ செட் போட்டு எடுத்தது போலவே உள்ளது.

2 மணி நேரம் 38 நிமிடங்கள் படம் ஓடுகிறது, ஓடுகிறது, ஓடுகிறது. ஏதாவது ஒரு காட்சியாவது நச் என இருக்கும், அதைப் பற்றிச் சொல்லலாமே என யோசித்தால் அப்படி ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. கார்த்திக் சுப்பராஜ் என்ன நினைத்து இந்தக் கதையை எழுதியிருப்பார் எனத் தெரியவில்லை. பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, காலா,, ஏன் அவர் இயக்கிய பேட்டை என முன்னர் வெளிவந்த சில பல படங்களின் சாயல் அப்படியே இருப்பதை கவனித்திருக்க மாட்டாரா ?. பீட்சா, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய அந்த கார்த்திக் சுப்பராஜை இந்தப் படத்தில் காணவில்லை என்பது தான் நிஜம்.

ஜகமே தந்திரம் - மந்திரம் இல்லை...

 

ஜகமே தந்திரம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஜகமே தந்திரம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

தனுஷ்

டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் விமர்சனம் ↓