மெர்க்குரி,Mercury

மெர்க்குரி - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பிரபுதேவா, இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன்
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு - பென் ஸ்டுடியோஸ், ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ்

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மவுனப் படங்கள் வந்தது. அதன்பின் பேசும் படங்கள் வந்து தமிழ் சினிமாவை வேறு கட்டத்திற்குக் கொண்டு சென்றன. 1987ல் கமல்ஹாசன் நடித்த பேசும் படம் என்ற மவுனப் படம் வந்தது. அதன் பின் 30 வருடங்கள் கழித்து தற்போது மெர்க்குரி படமும் மவுனப் படமாக வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் சுமார் ஒன்றரை மாத காலமாக சினிமா என்பதையே மறந்திருந்தார்கள். அவர்களை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வரும் வலிமை இந்த வாரம் வந்த மெர்க்குரி படத்திற்கு இருக்கிறதா என்பது சந்தேகமே.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், கதைக்குத் தேவை என்பதில் தான் படத்தை மவுனப் படமாக எடுத்திருக்கிறார். ஆனால், அந்த மவுனத்தின் அர்த்தம் ஒரே ஒரு இடத்தில் தான் அழுத்தமாக உறைக்கிறது. மற்றபடி சராசரிக்கும் கீழான ஒரு படமாகவே நகர்கிறது.

இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன் ஆகிய ஐவரும் காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள். அவர்கள் படித்த பள்ளியின் அலுமினி விழாவுக்காக வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில், குடித்து, கும்மாளம் அடித்துவிட்டு, காரில் ஜாலியாக வெளியில் கிளம்புகிறார்கள். அப்போது அவர்கள் காரில் தெரியாமல் சிக்கி பிரபுதேவா இறந்து விடுகிறார். அவருடைய பிணத்தை மெர்க்குரி கம்பெனி அருகில் புதைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். ஆனால், ஒருவரின் ஐபாட் காணாமல் போக அதைத் தேடி மீண்டும் பிணம் புதைத்த இடத்திற்கு வருகிறார்கள். ஆனால், அந்த இடத்தில் பிரபுதேவாவின் பிணம் இல்லை. காரில் உட்கார வைத்திருந்த இந்துஜாவையும் காணவில்லை. மெர்க்குரி கம்பெனிக்குள் பிரபுதேவாவும், இந்துஜாவும் இருப்பதைப் பார்க்கிறார்கள் நண்பர்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் ஆரம்பமாகி பிரபுதேவா விபத்தில் இறக்கும் வரை எந்த பரபரப்பும் இல்லாமல் படம் நகர்கிறது. அவரது மரணித்திற்குப் பின்தான் ஓரளவிற்கு திடுக்கிட வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அதிலும் வழக்கமான பேய்ப் படங்களுக்குரிய பயமுறுத்தல்கள் இல்லாதது குறை.

இந்தப் படத்திற்கு பிரபுதேவா ஏன் எனத் தெரியவில்லை. ஏதோ ஒரு விருப்பத்தில் நடித்திருப்பார் போலிருக்கிறது. சிதிலமான முகத்திற்கிடையில் அவருயை ஏக்கத்தை முடிந்தவரையில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.

நான்கு நண்பர்கள், ஒரு நண்பி இவர்களில் இந்துஜா மட்டும்தான் தெரிந்த முகமாக இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் பிரபுதேவாவின் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்த விஷயத்தை விவரிப்பது புதுமை. பேசாமலேயே கண்கலங்க வைக்கிறார். நண்பர்கள் நால்வரில் இந்துஜா ஜோடியாக நடித்திருப்பவருக்குத்தான் கடைசி வரை நடிக்க வாய்ப்பு.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பேச்சுக்கள் இல்லாத குறையை பின்னணி இசை மூலம் காட்சியின் தன்மையை உணர வைத்திருக்கின்றன. படத்தின் மிகப் பெரும் பலம் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு. இரவு நேரங்களில் கூட மலைப் பிரதேசத்தை தனி அழகுடனும், ஒளி அமைப்புடனும் படமாக்கியிருக்கிறார்.

வேதியியல் கம்பெனிகளால் மனித குலத்திற்கு நடந்த பேரழிவுகளைப் பற்றி ஆரம்பத்திலும், கடைசியிலும் மட்டும் காட்டுகிறார்கள். அந்த பேரழிவுகளைப் பற்றி படத்தில் சில காட்சிகளிலாவது வைத்திருக்கலாம். தவறான எதிரிகளுடன் தான் பலர் போராடுகிறோம் என முடித்திருப்பது சிறப்பு.

மெர்க்குரி - இருளில்...!

 

பட குழுவினர்

மெர்க்குரி

  • நடிகர்
  • இயக்குனர்

பிரபுதேவா

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படுவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, கர்நாடக மாநிலம், மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். தந்தையை போலவே பிரபுதேவாவும் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு சின்ன வயதில் இருந்தே முறைப்படி நடனம் கற்றார்.

பரதநாட்டியம், வெஸ்டர்ன் என அனைத்து வித நடனங்களையும் ஆடும் ஆற்றல் பெற்ற பிரபுதேவா, சினிமாவில் ஒரு டான்ஸராகத்தான் அறிமுகமானார். ஆரம்பத்தில் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் ஓரிரு பாடல்களில் நடனமாடினார். பின்னர் இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

ஒருகட்டத்தில் நடித்தபடியே இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ள பிரபுதேவா, சிறந்த நடன அமைப்புக்காக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தான் காதலித்த ரமலத் என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அப்பாவும் ஆனார். இதில் அவரது ஒரு மகன் கேன்சர் நோயால் இறந்து போனார். மகனின் மரணம் பிரபுதேவாவை பெரிதும் வாட்டியது.

இந்த சூழலில் நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கி, தான் காதலித்து மணந்த முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்தும் செய்தார். பின்னாளில் நயன்தாராவுடனான காதலும் முறிவுக்கு வந்தது.

மேலும் விமர்சனம் ↓