தினமலர் விமர்சனம் » பீட்சா
தினமலர் விமர்சனம்
பீட்சா டெலிவரி வாலிபர் ஒருவரின் காதலும், நம்பிக்கை துரோகமும் தான் "பீட்சா" படம் மொத்தமும்!
"ஆடுகளம்" நரேனின் பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்க்கும் ஹீரோ விஜய் சேதுபதி, நாயகி ரம்யா நம்பீசனுடன் கல்யாணம் பண்ணாமலே ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிறார். அம்மணி கர்ப்பம் ஆனதும் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிற்குள்ளேயே மோதிரம் மாற்றி கொள்கின்றனர் இருவரும். கடவுள் சாட்சியாக வந்த காதல் மனைவி என்பதால், அவரை வசதியாக வாழ வைக்க விரும்பும் விஜய் சேதுபதிக்கு எதிர்பாராமல் எக்கச்சக்க பயங்களும், பதட்டங்களும் ஏற்படுகின்றது. அவை விஜய்யை படுகுழியில் தள்ளினவா? இல்லை அவற்றையே விஜய் "ப்ளஸ்" ஆக்கி வாழ்வில் வசதியானரா..? அந்த வசதி நிலைத்ததா...? நிர்மூலமானதா...? என்பது "பீட்சா" படத்தின் முற்றிலும் வித்தியாசமும், விறுவிறுப்பான கதை!
சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என படிப்படியாக நடிப்பு திறமையால் உயர்ந்து வரும் "தென்மேற்கு பருவக்காற்று" அறிமுக நாயகர் விஜய் சேதுபதி, "பீட்சா" படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நன்றாக நடிக்க தெரிந்த நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் ஆகியிருக்கிறார் என்றால் மிகையல்ல!
முதல் இரண்டொரு காட்சிகளில் ரம்யா நம்பீசனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் கிறக்கமாகவும், அடுத்தடுத்த காட்சிகளில் பேய், பிசாசுகளுக்கு பயப்படும் பயந்தாங்கொள்ளி கேரக்டரில், படு பயந்தாங்கொள்ளியாகவும் நடித்திருக்கும் விஜய் சேதுபதி அடுத்தடுத்த காட்சிகளில் திகிலை ஏற்படுத்தும் விதமாகவும், திடுக்கிட செய்யும் தில்லாலங்கடி தனமாகவும் நடிப்பில் நவரசங்களையும் காட்டி நம்மை தியேட்டர் சீட்டோடு கட்டி போடுகிறார். பலே! பலே!!
அதிலும் ரம்யாவுடனான ஆரம்ப ரொமான்ஸ் காட்சிகளில், "நீ இப்படி கேர்லசா இருக்கியே., நான் எதுலயாவது அப்படி கேர்லசா இருந்திருக்கேனா..." என்று கேட்க, "நான் இப்போ கன்சிவா இருக்கேன்..." என ரம்யா அதற்கு பதிலளிக்க, சில விஷயங்களில் நாம ரெண்டு பேருமே கேர்லசா இருக்கோம்... என்று வழிகின்ற இடத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் தியேட்டரே சிரிப்பால் அதிர்வது குறிப்பிடத்தக்கது! இதுமாதிரி படம் முழுக்க சுவாரஸ்யங்கள் நட்சத்திரங்களாய் கண் சிமிட்ட விஜய் சேதுபதியும் முக்கிய காரணமாக இருப்பது படத்தின் பெரும் பலம்!
நாயகி ரம்யா நம்பீசன் முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பிலும், கிளாமர் துடிப்பிலும், பீட்ஸாவில் சற்றே கூடுதலாக இருப்பது படத்தின் மற்றுமொரு பெரும்பலம்!
விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மாதிரியே பீட்சா கடை முதலாளி "ஆடுகளம்" நரேன், ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட படத்தின் ஒன்றிரண்டு பாத்திரங்களும் படத்தின் "ப்ளஸ்" பாயிண்ட்டுகள்!
கோபி அமர்நாத்தின் "பளீச்" ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் "நச்" இசை உள்ளிட்ட மற்றும் பல "ப்ளஸ்" பாயிண்ட்டுகளுடன், புதியவர் கார்த்திக் சுப்புராஜ், புதிய களத்தில் இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத படத்தை பீட்சாவாக படைத்திருப்பதற்காக பாராட்ட வேண்டும்!
ஆரம்ப காட்சிகளிலும், க்ளைமாக்ஸ் காட்சிகளிலும் இருக்கும் சூடும் சுவாரஸ்யமும், திகிலான நடுபகுதியிலும் இருந்திருந்தால், பீட்சாவின் பாட்சா இன்னும் பெரிதாக பலித்திருக்கும்!
மொத்தத்தில் "பீட்சா", தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத திகில் "பாட்சா!"