ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன்
வெளியான தேதி - 10 நவம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 3/5
2014ல் வெளிவந்த 'ஜிகர்தண்டா' படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு வேறு ஒரு கதையுடன் இந்த 'டபுள் எக்ஸ்' படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
சினிமாவில் நடிக்க ஆசை இருக்கும் ஒரு ரவுடியை சினிமாவில் நடிக்க வைத்து அவரை சமூக அக்கறை உள்ள ஒரு மனிதனாக மாற்ற ஒரு இயக்குனர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. படத்தின் ஆரம்பம் முதல் ஒரு 'பேன்டஸி' படமாக நகரும் படம் கிளைமக்ஸ் முன்பாக அப்படியே தடம் மாறி ஒரு கனத்த கிளைமாக்ஸுடன் முடிகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவருக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கியதில் இந்தப் படத்தில் அதை 'டபுள் ஸ்ட்ராங்' ஆகப் பதிய வைத்திருக்கிறார்.
1975களில் மதுரையில் நடக்கும் கதை. அங்கு பிரபல ரவுடியாக இருப்பவர் ராகவா லாரன்ஸ். அவருக்கு பின்னால் மந்திரி உட்பட தனி அரசியல் பலம் இருக்கிறது. அவரை ஒரு பிரபல நடிகர் 'கருப்பு' எனச் சொல்லி வெறுப்பேற்ற சினிமாவில் நடிக்க நினைக்கிறார். ராகவா லாரன்ஸைக் கொல்ல காவல்துறை தனி பிளான் போடுகிறது. செய்யாத கொலை குற்றத்திற்காக சிறையில் இருக்கும் எஸ்ஜே சூர்யா அதற்காக அனுப்பப்படுகிறார். அவரும் ராகவா லாரன்ஸின் சுய சரிதையை படமாக்கலாம் என ஐடியா கொடுத்து படத்தை எடுக்க ஆரம்பிக்கிறார்கள். சூர்யா திட்டமிட்டபடி ராகவா லாரன்ஸைக் கொலை செய்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் டபுள் ஹீரோ படங்கள் கடந்த சில வருடங்களில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மலைவாழ் குடும்பத்தைச் சேர்ந்த ராகவா லாரன்ஸ் எப்படி மதுரைக்கு வந்து ரவுடியானார், அதன்பின் அவர் சார்ந்த மலைவாழ் மக்களுக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பது ஒரு புறம். இயக்குனர் என பொய் சொல்லி, ராகவாவைக் கொல்ல வந்து பின் அவரை ரவுடியிசத்திலிருந்து எப்படி போராட்டத்தை முன்னெடுப்பவராக மாற்றுகிறார் என்பது மற்றொரு புறம். இருவரது கதாபாத்திரங்களும், தோற்றங்களும், அதில் அவர்களது நடிப்பும்தான் இந்தப் படத்திற்குப் பலம்.
ராகவா லாரன்ஸ் மனைவியாக நிமிஷா சஜயன். அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவர் வரும் காட்சிகளில் அந்த நிமிடங்களை அவருடையதாக மாற்றிக் கொள்கிறார்.
ராகவா லாரன்ஸைக் கொல்ல திட்டம் தீட்டும் டெபுடி கமிஷனராக நவீன் சந்திரா. அந்தக் காலத்தில் உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் கூட நீளமான தலை முடி வைத்திருக்கிறார்களா?, அல்லது அந்தக் காலத்திய படங்களில் அவர்களை அப்படிக் காட்டியதால் இப்படத்திலும் அப்படியே காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
மற்ற கதாபாத்திரங்களில் கிடைத்த 'கேப்'களில் சத்யன், இளவரசு ஸ்கோர் செய்கிறார்கள். ஷைன் டாம் சாக்கே கதாபாத்திரம் 70களின் மத்தியில் அரசியலுக்கு வந்த அந்த மாபெரும் நடிகரை ஞாபகப்படுத்துகிறது.
சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தனி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். பல காட்சிகளின் தாக்கத்தை அது அதிகப்படுத்தியிருக்கிறது. திருநாவுக்கரசு ஒளிப்பதிவு, சந்தானம் கலை இயக்கம் குறிப்பிட வேண்டியவை.
படத்தின் நீளம் மிகவும் அதிகம் என்பது ஒரு குறை. 8 எம்எம் கேமராவை கையில் பிடித்துக் கொண்டே ஒரு படத்தை எடுக்க நினைப்பதெல்லாம் லாஜிக் மீறல்கள். இன்னும் சில பல குறைகள் ஆங்காங்கே வந்து போனாலும் ஒரு 'ரெட்ரோ' படமாக மாறுபட்டு ரசிக்க வைக்கிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - ட்ரீட்…
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்