சந்திரமுகி 2
விமர்சனம்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பி.வாசு
இசை - கீரவாணி
நடிப்பு - ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், மகிமா நம்பியார், வடிவேலு
வெளியான தேதி - 28 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்து 2005ல் வெளிவந்த 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவந்துள்ளது. அந்தப் படத்தில் நடித்த வடிவேலு மட்டுமே இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கும் ஒரே நடிகர்.
முதல் பாகத்தைப் போல இருக்கக் கூடாது என இரண்டாம் பாகத்தில் சில பல புதுக் கதைகளைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பி.வாசு. முதல் பாகத்தில் இருந்த அதே போன்றதொரு பங்களா இந்தப் படத்திலும் வருகிறது. ஆனால், எந்த பயத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே சமயம், பிளாஷ்பேக்கில் வரும் சந்திரமுகி பற்றிய கதையும் அதில் கங்கனாவின் அழகான நடிப்பும் இந்தப் படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.
கோடீஸ்வரியான ராதிகா அவரது அண்ணன் குடும்பத்தினருடனும், தனது மகள் லட்சுமி மேனனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கிறார்கள். குடும்ப குருஜி சொன்னதற்காக அவர்களது குல தெய்வம் இருக்கும் ஊருக்குச் செல்கிறார்கள். ராதிகாவின் மூத்த மகள் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனவர். அவருக்கு இரண்டு குழந்தைகள். விபத்தில் ராதிகாவின் மகளும், மருமகனும் இறந்து போக அந்தக் குழந்தைகளுக்கு கார்டியனாக இருக்கும் ராகவா லாரன்ஸ் அந்தக் குழந்தைகளையும் ஊருக்குக் கூட்டிப் போகிறார். அவர்கள் தங்கும் பங்களா வடிவேலுவுக்குச் சொந்தமானது. அங்கு சந்திரமுகி ஆவி லட்சுமி மேனன் உடம்பில் புகுந்து கொள்கிறது. யாரையோ கொல்லத் துடிக்கிறது. சந்திரமுகி யார் ?, யாரைக் கொல்ல நினைக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
முதல் பாகம் போல இந்த இரண்டாம் பாகத்திலும் நகைச்சுவைத் தோரணங்கள் இருக்கும் என எதிர்பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமே. அதே சமயம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சரித்திரக் கதையை சுவாரசியமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பி.வாசு. பிளாஷ்பேக்காக வரும் அந்தக் கதைதான் இந்தப் படத்தை முழுவதுமாக தாங்கிப் பிடிக்கிறது. அதில் செங்கோட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ், சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணவத் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அக்காட்சிகளில் கங்கனா தமிழில் பேசாமல், தெலுங்கில் பேசுவது வருத்தம். இருந்தாலும் அவரது அழகும் நடிப்பும் அதைக் கடந்து போக வைக்கிறது.
இடைவேளை வரை படம் முழுவதும் சந்திரமுகி பேய் இருக்கும் அந்த பங்களாவில் தான் நடக்கிறது. ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ் என பலருக்கும் அந்த பங்களா காட்சிகளில் முடிந்தவரையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இடைவேளையின் போது வரும் திருப்பம் மட்டும்தான் அதில் சுவாரசியமாக இருக்கிறது.
கீரவாணி இசையில் கங்கனா பாடி, ஆடும் தெலுங்குப் பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் படத்திற்கு வேகத் தடை. பின்னணி இசையில் அதிரடி காட்டியிருக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு, தோட்டா தரணி அரங்க அமைப்பு இந்தப் படத்தின் இரண்டு கண்கள். அந்த சந்திரமுகி பங்களாவை முதல் பாகத்தில் இருந்ததைப் போன்றே வடிவமைத்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் மிகச் சுமார் ரகம்.
இடைவேளை வரை இன்னும் அதிகமான காமெடி காட்சிகளை சேர்த்து படத்தைக் கொடுத்திருந்தால் முதல் பாகத்திற்குக் கொஞ்சம் பக்கமாகப் படம் சென்றிருக்கும்.
சந்திரமுகி 2 - சரித்திரமுகி
சந்திரமுகி 2 தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
சந்திரமுகி 2
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்