"ட்ரை டண்ட் ஆர்ட்ஸ்" ஆர்.ரவீந்திரன் வழங்க, பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் - ரித்திகா சிங் ஜோடி நடிக்க, சந்திரமுகி, காஞ்சனா வரிசையில் இடம் பிடிக்கும் திட்டத்தோடு வந்திருக்கும் ஹாரர், காமெடி படம் தான் "சிவலிங்கா".
கதைப்படி, பிணம் ஏற்றிப் போகும் ஆம்புலன்ஸில் கோடி கோடியாய் பணம் கடத்துவதை எல்லாம் கண்டுபிடித்து, பாதி பங்கு தருவதாக சொன்னவனை, பந்தாடி "நான் பணத்துக்கு ஆசைப்படும் சாதா போலீஸ் அல்ல... பந்தா போலீஸ்... ஓ சாரி, நேர்மையான சிபிசிஐடி போலீஸ்...." என டெரராய் திரியும் சிவா எனும் சிவலிங்கா - ராகவா லாரன்ஸ் வசம், ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்படும் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் ரஹீம் பாய் எனும் சக்தி வாசுவின் கொலை கேஸ் ஒப்படைக்கப்படுகிறது.
அந்த கேஸுக்காக, ரஹீம் கொலை நடந்த வேலூர் பகுதியில் ஒதுக்குப்புறமாக சுடுகாட்டு அருகில் இருக்கும் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, தன் இளம் மனைவி சத்யா - ரித்திகா சிங்குடன் சென்று தங்கி விசாரணையில் இறங்குகிறார் லாரன்ஸ். அங்கு அலையும் இறந்து போன ரஹீமின் ஆத்மா, ரித்திகா சிங்கின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு, தன்னை கொன்றது யார்? என உன் கணவர் கண்டுபிடிக்கும் வரை, உன் உடம்பை விட்டு விலக மாட்டேன்... என அடம் பிடிக்கிறது, அட்டூழியம் செய்கிறது. லாரன்ஸ், ரஹீமை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்றது யார்? என கண்டுபிடித்தாரா..? மனைவியை, ரஹீமின் ஆவியிடமிருந்து ஒரு வழியாக மீட்டாரா..? என்பதை நீட்டி முழக்கி மிரட்டி, உருட்டி சொல்லியிருக்கிறது "சிவலிங்கா" படத்தின் மொத்தக்கதையும் களமும்.
சிவா எனும் சிவலிங்கேஸ்வராவாக ராகவா லாரன்ஸ், வழக்கம் போலவே எக்கச்சக்கமாய் நடித்திருக்கிறார், எக்குத்தப்பாய் ஆடியிருக்கிறார். எதிரில் படுபவர்களை எல்லாம் திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மாதிரி இழுத்துப் போட்டு அடிக்கிறார். "பெத்த அம்மாவ விட்டுட்டு எவன்லாம் தனியா போறேனோ, அவன்லாம் என் பார்வையில் பிணம்...", "தப்பு பண்ற ஒவ்வொருத்தனுக்கும் ஆண்டவன் ஏதோ ஒரு இடத்துல ஆப்பு வைப்பான்..." என்று அடிக்கடி பன்ச் எல்லாம் அடிக்கிறார். ஆனால், பேய் என்றாலே பம்மி பதுங்கியபடி, "என் தலைவனுக்கு பாம்புன்னா பயம், எனக்கு பேய்னா பயம்..." என பயமுறுத்துவதோடு அவ்வப்போது லிங்கா - சிவலிங்கா, சின்ன கபாலி... என மக்கள் சூப்பர் ஸ்டார் ஆக காட்டிக் கொள்ள கடுமையாக முயன்று கடுப்பும் ஏற்றுகிறார். ஆனாலும் என்ன ஆச்சர்யம்..? க்ளைமாக்ஸில் தன் மனைவியின் உடம்பில் இருக்கும் ஆவியை பயமின்றி தன் உடம்பில் இறக்கிக் கொண்டு குற்றவாளிகளை கூண்டோடு சட்டத்தின் முன் நிறுத்துவார் எனப் பார்த்தால், அப்படியே ஒவ்வொருத்தரையும் தீப்பிழம்பாக்கி, சாம்பலாக்குகிறார். அடி ஆத்தி .
அட, "இறுதிச் சுற்று" ரித்திகா சிங்கா இது? இந்த நிஜ குத்துசண்டை வீராங்கனை., கிட்டத்தட்ட குத்தாட்ட நடிகையாட்டம் அரையும், குறையுமாக உடுத்திக் கொண்டு பாடல் காட்சிகளில் லாரன்ஸுக்கு ஈடு கொடுத்து ஆடி அசத்தி, கவர்ச்சி விருந்தும் வைத்திருக்கிறார். ஆனாலும், படக்காட்சிகளில், சத்யாவாக ரித்திகாசிங், "என்னை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்...." என பெண் பார்க்க குடும்ப சகிதமாக வந்த லாரன்ஸை பார்த்து கேட்டு நெருக்கமாவதில் தொடங்கி "உங்க பேரு சபலேஸ்வரா? இல்ல... சிவலிங்கேஸ்வரா..? என கிண்டலடிப்பது வரை கல கல என கலக்கியிருக்கிறார் என்றால், ரஹீம் - சக்தியின் ஆவி, அடிக்கடி உடம்புக்குள் புகுந்ததும் கிராபிக்ஸ் உபயத்தில் முகம் அகம் எல்லாவற்றையும் அஷ்ட கோணலாக்கி, நடிப்பில் மிரட்டியும் இருக்கிறார்.
பட்டு குஞ்சம் - வடிவேலு சில இடங்களில் ரசிகனுக்கு சிரித்தலையும், பல இடங்களில் பழைய பார்மில் இல்லாது படுத்தலையும் தருகிறார்.
பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் கம் புறா பந்தயக்காரர் ரஹீமாக சக்திவேல் வாசு, அறுசுவை அன்னலட்சுமியாக ஊர்வசி, ரித்திகாவின் தாய் பானுப்பிரியா, தந்தை ஜெயப்பிரகாஷ், சமையல் கிருஷ்ணமூர்த்தியாக ராதாரவி, ரஹீமின் அப்பா அப்துல்லாவாக சந்தானபாரதி, சிபிசிஐடி ஆபிஸராக ஒய்.ஜி.எம்.மதுவந்தி மற்றும் விடிவி கணேஷ், மேலும் டேவிட்டின் வீட்டு ஒனர் சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டோர் கச்சிதம். அதிலும், "பொண்ணு முகத்தை பார்க்காம கல்யாணம் பண்றவங்க அவங்க, நெருப்புக்கு முன்னாடி கல்யாணம் பண்றவங்க நாம..." எனும் ராதாரவியும், "ஒரு பேம்கும் பேன்கும் இடையில மாட்டிக்கிட்டு முழிக்கிறே...."-ன்னு சொல்லு எனும் ஊர்வசியும் ஹாசம்.
ஜி-துரை ராஜின் கலை இயக்கத்தில், அந்த பேய் பங்களா, உள்ளிட்ட விஷயங்கள் அசத்தல். சுரேஸ் அர்ஸின் படத்தொகுப்பில் பின் பாதியில் இன்னும் பேர்பாதி கத்திரி வேலை செய்திருக்கலாம்.
சர்வேஷ் முராரி ஒளிப்பதிவில் சிஜி, கிராபிக்ஸ் உதவியுடன் ஒளி மிரட்டல்கள் ஜாஸ்தி என்பது படத்திற்கு பலம். பாவம் நம் கண்களுக்கு பெரும் பலவீனம்.
பி.வாசுவின் எழுத்து, இயக்கத்தில், டெய்லி ஆடு வெட்டி பிரியாணி பண்ணிய ரஹீமின் ஆவி, "தான் உயிரோடு இருந்த போது ஒரு ஈ எறும்புக்குக் கூட தீங்கு இழைத்ததில்லை..." என பேசும் லாஜிக் மிஸ்டேக் டயலாக், அதேமாதிரி, ஆரம்ப காட்சியில் நீதிபதி, தனது தீர்ப்பில், ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு செத்துப்போன ரஹீம், கொலை செய்திருக்கக் கூடும் என தவறாக சொல்கிறார் - கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் - என அந்த டயலாக் இருந்திருக்க வேண்டும். மேலும், படத்தின் மத்திய காட்சி ஒன்றில், லாரன்ஸிடம், மாமியார் பானுப்ரியா போன் பேசும் போது, லாரன்ஸ், எனக்கு கொஞ்சம் லீவு கிடைச்சது... அதனால நானும் உங்க பொண்ணும் வெளியூர் போயிருந்தோம்..." என்பார். லாரன்ஸ் சிபிசிஐடி போலீஸ் என்பது ரகசியம் என்பதால், மாமியார் பானுவுக்கு அவரை ஒரு கம்பெனி உரிமையாளராகத் தான் தெரியும்... அப்படி இருக்கும் போது எனக்கு லீவு கிடைச்சுது.... என லாரன்ஸ் பேசுவது எப்புடி? என்பது உள்ளிட்ட இன்னும் பல குறைகளை மறப்போம்.... மன்னிப்போம்... என்றால் "சிவலிங்கா - சிறப்புங்கோ!"
பி.வாசு தனது, "சந்திரமுகி"யையும், ராகவா லாரன்ஸ் தனது, "காஞ்சனா"வையும் நினைத்துக் கொண்டு "சிவலிங்கா"வை தந்திருக்கிறார்கள். ஆனால், லாரன்ஸ் பாணியிலேயே சொல்வதென்றால், "எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், ரஜினிக்கு ஒரு லிங்கா - லாரன்ஸுக்கு ஒரு சிவலிங்கா எனும் ரீதியிலேயே இருக்கிறது... இப்படம், அவ்வளவே!"