விமர்சனம்
மணிகர்ணிகா : தி குயின் ஆப் ஜான்சி - விமர்சனம்
தயாரிப்பு - ஜீ ஸ்டுடியோஸ், கைரோஸ் கன்டென்ட்ஸ்
இயக்கம் - கங்கணா ரணவத், ராதாகிருஷ்ணா ஜகர்லமுடி
இசை - சங்கர் - இஷான் - லாய்
நடிப்பு - கங்கணா ரணவத், ஜிஷு சென்குப்தா மற்றும் பலர்
வெளியான தேதி - 26 ஜனவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
ஹிந்தித் திரையுலகத்தில் அவ்வப்போது சரித்திரப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது வந்துள்ள படம்தான் மணிகர்ணிகா.
ஹிந்திப் படங்களின் நாயகிகளை பொதுவாக அழகு மங்கைகளாக அவர்களது அழகை மையமாக வைத்த படங்களைத்தான் அதிகம் பார்க்க முடியும். சரித்திரப் படங்கள் வந்தாலும் அவற்றிலும் அவர்களின் அழகுதான் பிரதானமாக இருக்கும்.
ஆனால், இந்த மணிகர்ணிகாவில் அப்படியெல்லாம் இல்லாமல் ஆரம்பம் முதல் கடைசி வரை நாயகியின் அழகை விட வீரத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மணிகர்ணிகாவாக நடித்திருக்கும் கங்கணா ரணவத்தின் வீரமே அழகுதான்.
சத்ரிய வம்சத்தில் பிறக்காத மணிகர்ணிகா, ஒரு வீர மங்கையாக வளர்ந்தவர். வாள் வீச்சு, சண்டைப் பயிற்சி என திறமை வாய்ந்தவர். அவரது வீரத்தைப் பார்த்து ஜான்சி ராஜா கங்காதர் ராவுக்கு மணமுடித்து வைக்கிறார்கள். மணிகர்ணிகா ராஜாவை மணந்ததும் லட்சுமி பாய் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறார். ஜான்சி ராஜா அவரது நாட்டை தனி ராஜ்ஜியமாக வைத்திருந்தாலும் ஆங்கிலேயருக்கு அடிமையாகத்தான் இருக்கிறார். அந்த அவமானம் தங்களது அரசுக்கு இருக்கக் கூடாது என மனைவி லட்சுமி பாயிடம் தெரிவிக்கிறார். அரச தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. ஆங்கிலேயருக்கு நெருக்கமாக இருக்கும், அரச பதவியைக் கைப்பற்றத் துடிக்கும் மன்னரின் உறவுக்கார துரோகிகளால் விஷம் வைத்து ராஜாவும் அவரது குழந்தையும் கொல்லப்படுகிறார்கள்.
இறக்கும் தருவாயில் ராஜா, லட்சுமி பாயை மீண்டும் மணிகர்ணிகா போல வீர மங்கையாக மாறி, ஜான்சி நாட்டை ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீட்க வேண்டும் என்கிறார். அதற்காக தன்னை ஜான்சி ராணியாக அறிவித்துக் கொள்ளும் லட்சுமி பாய் ஆங்கிலேயர்களை எப்படி எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஹரஹர மகாதேவா என ஆவேசக் குரலில் மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக உணர்ச்சி கொள்ள வைக்கும் வீர மங்கை ஜான்சி ராணி லட்சுமி பாய் என்கிற மணிகர்ணிகா-வாக கங்கணா ரணவத். உருவத்தால் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் அவருடைய வீரச் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை வீறு கொள்ள வைக்கின்றன. வாள் வீச்சிலும், சண்டைக் காட்சிகளிலும் அவர் வாள் வீசும் வேகமும், லாவகமும் வியக்க வைக்கிறது. கண்களில் எழுச்சியையும், உடல் மொழியில் தனி கம்பீரத்தையும், பேச்சில் ஆவேசத்தையும் ஜான்சி ராணி இப்படித்தான் இருந்திருப்பாரோ என நம்மை கவர்ந்திழுக்கிறார் கங்கணா. சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பார்த்தால் நமக்கு எப்படி ஒரு உணர்வு வருமோ அப்படி ஒரு உணர்வு வருகிறது மணிகர்ணிகா படத்தைப் பார்ப்பதற்கு. படத்தை இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கணா ரணவத்திற்கு இந்த ஆண்டிற்கான சில விருதுகள் நிச்சயம் கிடைக்கும் என்று இப்போதே சொல்லத் தோன்றுகிறது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை மணிகர்ணிகா பற்றியே மணி மணியாக சொல்லியிருப்பதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மணிகர்ணிகாவின் கணவராக ஜான்சி ராஜா கங்காதர் ராவ் ஆக ஜிஷ்ஷு சென்குப்தா.
ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு அவமானத்தில் சிக்கித் தவிப்பதால் கைகளில் வளையல் அணிந்து கொண்டு தவிக்கிறார். வீர மங்கையான மணிகர்ணிகா கிடைத்ததும் அவரை நம்பி நாட்டை ஒப்படைத்து உயிர் துறக்கிறார்.
மணிகர்ணிகாவுக்கு உதவியாக படைகளை வழி நடத்திச் செல்லும் குலாம் கௌஸ் கான் ஆக எந்திரன் படத்தில் வில்லனாக நடித்த டானி டென்சோங்பா நடித்திருக்கிறார். மணிகர்ணிகாவை அடக்குவதற்காக ஆங்கிலேயே ஆளுனர் டல்ஹெசி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜெனரல் ஹுக் ரோஸ் வரவழைக்கப்படுகிறார். மணிகர்ணிகாவின் போர் திறமைகளைக் கண்டு ஒரு பக்கம் அஞ்சி நடுங்கினாலும், எப்படியாவது மணிகர்ணிகாவை தலை வேறு, உடல் வேறு, கைகள் வேறாக வெட்டி எடுத்து கொல்ல வேண்டும் என துடிக்கிறார். இவர்களைத் தவிர மற்ற சிறிய கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளார்கள்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜான்சி கோட்டையில் நடப்பது கொஞ்சம் தொய்வைத் தருகிறது. போர்க்களக் காட்சிகளும் ஒரு சில சண்டைகளுடன் முடிந்து விடுகிறது. பாகுபலி போன்ற பிரம்மாண்டமான போர்க்களக் காட்சிகளைப் பார்த்துவிட்டதால் இந்தப் படத்தில் வரும் போர்க்களக் காட்சிகள் கொஞ்சம் சாதாரணமாகவே தெரிகிறது. இருப்பினும் அவற்றை தன்னுடைய வீரமான நடிப்பால் மறக்க வைக்க முயல்கிறார் மணிகர்ணிகா.
அரங்க அமைப்பு, ஆடை வடிவமைப்பு ஆகியவை 1850 கால கட்டங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சங்கர் - எஷான் -லாய் இசையமைப்பில் இடைவேளை வரை அடிக்கடி பாடல்கள் வருகின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கலாம். பின்னணி இசை படத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.
ஹிந்தியிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள். படத்தில் வசனங்களும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாக இருக்கின்றன. ஆனால், சப்டைட்டிலில் ஆங்கிலத்தில் கதைக்குத் தேவையாக இடம் பெறும் சில முக்கிய வார்த்தைகளை தமிழில் வசனமாக பேசாமல் விட்டுவிட்டிருக்கிறார்கள்.
பேட்ட, விஸ்வாசம் போன்ற வழக்கமான மசாலாப் படங்களைப் பார்த்து கொஞ்சம் வெறுப்பாகிப் போயிருக்கும் சினிமா ரசிகர்களுக்கு மணிகர்ணிகா நிச்சயம் மாறுபட்ட படமாக இருக்கும்.
மணிகர்ணிகா - மிரட்டும் வீர மங்கை
பட குழுவினர்
மணிகர்ணிகா
- நடிகை
- இயக்குனர்