ருத்ரன்
விமர்சனம்
தயாரிப்பு - பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்
இயக்கம் - கதிரேசன்
பின்னணி இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார்
வெளியான தேதி - 14 ஏப்ரல் 2023
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
தன் குடும்பத்தில் உள்ளவர்களை வில்லன் கொல்ல, அதற்காகப் பழி வாங்கும் நாயகன் என அரதப் பழசான 80களின் கதையைக் கொண்டு வந்து இந்த 2023ல் படமாகக் கொடுத்திருக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்கள் வேறு எங்கோ ஒரு திசையில் பயணித்துக் கொண்டிருக்க, இது போன்ற படங்களால் தமிழ் சினிமா மேலும் பின்னோக்கிதான் செல்லுமே தவிர முன்னோக்கி செல்ல வாய்ப்பேயில்லை.
ஐ.டி. கம்பெனியில் வேலை செய்பவர் ராகவா லாரன்ஸ். அவருடைய அப்பா நாசர் டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். 6 கோடி ரூபாய் கடன் வாங்கி கம்பெனியை மேலும் வளர்க்க நினைக்க நாசரின் நண்பர் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிறார். கடன் கொடுத்தவர் கடனைக் கேட்க, வட்டி கூட கட்ட முடியாத நிலையில் நாசர் திடீரென இறந்து போகிறார். கடனை அடைக்க ராகவா லாரன்ஸ் லண்டன் சென்று வேலை செய்கிறார். அவரது காதல் மனைவி பிரியா பவானி சங்கர் லண்டனிலிருந்து தனியாக சென்னை வருகிறார். வந்தவர் காணவில்லை, அதே சமயம் ராகவா லாரன்ஸ் அம்மாவும் திடீரென இறந்து போகிறார். லண்டனிலிருந்து வரும் ராகவாவுக்கு அவரது மனைவி, அம்மா ஆகியோர் கொலை செய்யப்பட்டே இறந்து போனார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ராகவா லாரன்ஸ் சில பல ரவுடிகளை கொடூரமாகக் கொலை செய்வதிலிருந்து படம் ஆரம்பமாகிறது. அவர் ஒரு அடி அடித்தால் அது பேயடியாக விழுகிறது. ஸ்டன்ட் காட்சிகளுக்கு மட்டுமே படத்தின் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ரத்தம் தெறிக்கத் தெறிக்க, அடியாட்கள் கதறித் துடிக்கத் துடிக்க கொல்கிறார் ராகவா. ரத்தம் தெறிப்பதையும், கத்தியால் குத்துவதையும் எப்படி சென்சார் விட்டார்கள் என்பது தெரியவில்லை. அது மட்டுமல்ல 'முடி'யின் மற்றொரு பெயரைப் பயன்படுத்தித் திட்டும் வசனங்களும் 'கட்' ஆகாமல் தப்பித்துள்ளன.
கோபக்கார இளைஞன் கதாபாத்திரம் போது ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு. ஏற்கெனவே பல படங்களில் செய்ததைத்தான் ராகவா இதிலும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி செய்கிறேன் என அவர் நடிப்பதெல்லாம் ஓவர். படம் முழுவதும் 'டெம்ப்ளேட்' நடிப்பு மட்டுமே.
பிரியா பவானி சங்கர் அதிகப் படங்களில் நடித்தால் போதும் என நினைக்க ஆரம்பிவித்துவிட்டார் போலிருக்கிறது. கடந்த மாதம் 'அகிலன்', இந்த மாதம் 'ருத்ரன்'. அடுத்த மாதம் என்ன 'ன்' வரப் போகிறதோ ?. கர்ப்பிணியாக இருக்கும் கதாநாயகியின் வயிறு, மேஜையில் மோதி அவர் கதறித் துடிக்கும் 'க்ளிஷே' காட்சிகளை தயவு செய்து நிறுத்துங்கள் இயக்குனர்களே.
70, 80களின் கோட், சூட் போட்ட வில்லன் சரத்குமார். பொள்ளாச்சி அருகில் சாதாரண திருட்டு செய்பவர் வளர்ந்து பெரிய வில்லனாக சென்னையை ஆட்டிப் படைக்கிறாராம். கிளைமாக்சில் திடீரென எதற்காக 'ஹேர் கட்' பண்ணிவிட்டு வந்து சண்டை போடுகிறார் எனத் தெரியவில்லை.
ராகவா லாரன்ஸ் பெற்றோராக நாசர், பூர்ணிமா பாக்யராஜ், நண்பனாக காளி வெங்கட் பாவமாக இறந்து போகிறார்கள். ராகவாவுக்கு உதவி செய்யும் போலீசாக இளவரசு. போலீஸ் அதிகாரியாக துணை நடிகர் போல வந்து போகிறார் ஜெயப்பிரகாஷ்.
'அகிலன்' படத்திற்கும், இந்த 'ருத்ரன்' படத்திற்கும் ஒரே நேரத்தில் பின்னணி இசை வேலைகளை சாம் சிஎஸ் செய்திருக்க வாய்ப்புண்டு. 'அகிலன்' படத்தில் வந்த அதே ''டரரரரர்ரர்ர்ர்ரரரரரர' இந்தப் படத்திலும் உண்டு. அப்புறம் 'பாட்ஷா' ஸ்டைலில் 'ருத்ரன் ருத்ரன்' என காட்டுக் கத்தல் கத்துவதெல்லாம் பின்னணி இசையாம்.
அழகான 'பாடாத பாட்டெல்லாம்' பாடலை 'ராப்' உடன் இணைத்து கெடுத்திருக்கிறார்கள். பழைய பாடல்களை ரசிப்பவர்கள் சாபம் விட்டுவிடப் போகிறார்கள்.
படத்தில் ஒரு 100 பேரையாவது கொன்றிருப்பார் ராகவா லாரன்ஸ். படம் பார்க்க வருபவர்கள் எங்களையும் 'கொல்லாமல்' விடுங்கள் என்று ஓடாமல் இருந்தால் சரி.
ருத்ரன் - ரன்….ரன்…ஓடுங்க..ஓடுங்க…
ருத்ரன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ருத்ரன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்