Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா,Jigarthanda
13 ஆக, 2014 - 15:44 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜிகர்தண்டா

தினமலர் விமர்சனம்குறும்படம் இயக்கி விட்டு சினிமா இயக்க வந்தவர்களை குறும்பட இயக்குனர்கள் என்று அழைத்ததாலோ என்னமோ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அவர் பட வசனத்தின் படியே சொல்வதென்றால் ஒரு பெரும்.....படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை சினிமாவில் குடும்பக் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காதல் கதைகளைப் பார்த்திருக்கிறோம், ஆக்ஷன் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காமெடி கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல் முறையாக ஒரு ஆக்ஷன் பிளஸ் காமெடி கதையை இப்போதுதான் பார்க்கிறோம். அது என்ன ஆக்ஷன் பிளஸ் காமெடி கதை என்கிறீர்களா. முதல் பாதி பக்கா ஆக்ஷன் கதை, இரண்டாவது பாதி காமெடி கதை.


தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சென்டிமென்ட் உண்டு. சினிமாவுக்குள் சினிமா என்பது இதுவரை எடுபடாமல் போன ஒன்று. பாரதிராஜா முதல் பலரும் தொட்டுவிட்ட கதைக்களம், ஆனால் யாருக்கும் ராசியாக அமையவில்லை. ஒருவேளை அந்த ராசியை உடைத்தெறியலாம் என இந்தப் படத்தின் இயக்குனர் முயன்றிருக்கிறாரோ என்னமோ? வித்தியாசமாக படம் பண்ண வேண்டியதுதான், அதற்காக முதல் பாதியை ஆக்ஷனின் உச்சத்திற்கு கொண்டு போய்விட்டு, அப்படியே அதற்கு எதிராக இரண்டாவது பாதி கதையை அமைப்பதா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை முதல் பாதி கதை எழுதி முடித்ததும் பவர் ஸ்டார் படம் எதையாவது பார்த்திருப்பாரோ? அதன் பாதிப்புதான் டெரர் ஆக இருந்த முதல்பாதியை பின்னர் டெரர் ஸ்டார் காமெடி ஆன மாற்றியிருக்கிறார். எங்கே நமது படத்தையும் கொரிய படத்தின் காப்பி படம் மற்றவர்கள் சொல்வதற்கு முன் நாமே சொல்லிவிடுவோம் என அதற்கும் படத்தில் ஒரு காட்சியை வைத்துவிட்டார்.


ஒரு தொலைக்காட்சியின் குறும்படப் போட்டியில் நடுவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையில், அந்த போட்டியில் கலந்து கொண்ட சித்தார்த்துக்கு நடுவர்களில் ஒருவரான ஒரு தயாரிப்பாளர் படம் இயக்க வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி விடுகிறார். அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கிற மாதிரி ஒரு ஆக்ஷன் படத்துக்கு கதை எழுதிட்டு வாங்க படம் இயக்கலாம் என்கிறார். ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கைக் கதையை எழுத முடிவெடுத்து மதுரைக்குப் புறப்படுகிறார் சித்தார்த். அங்கு நண்பன் கருணாகரன் உதவியுடன், மதுரையை ஆட்டிப் படைக்கும் ரவுடி சிம்ஹாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து கதையை உருவாக்க ஆரம்பிக்கிறார்.


சிம்ஹாவை என்கெளன்ட்ர் செய்ய காவல்துறையும் முடிவெடுத்திருக்க, சிம்ஹாவின் போட்டியாளர்களும் அவரைக் கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்க, அந்த சூழ்நிலையில் சித்தார்த்தும், கருணாகரனும் சிம்ஹாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை உளவு பார்க்க வந்தவர்கள் என சிம்ஹா நினைத்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார் இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கலகலப்பான (?) மீதி கதை.


என்ன இது ஒரு பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படத்துக்குரிய கதையை சொல்லிட்டு, இதன் பின் நடப்பது கலகலப்பான கதை என்று சொல்லியிருக்கிறோமே என ஆச்சரியப்பட வேண்டாம். இடைவேளைக்குப் பின் ஆக்ஷன் டிராக்கை விட கதை வேறு தடத்தில் பயணிக்கிறது. நான் வெஜிடேரியன் ஹோட்டலுக்குப் போய் விட்டு தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது நிலைமை...


படத்துல ஹீரோ சித்தார்த்தா அல்லது சிம்ஹாவான்னு படம் பார்க்கிற நமக்கு மட்டுமில்லாம, எல்லாருக்குமே ஒரு குழப்பம் வரும். சித்தார்த்தை விட சிம்ஹாக்குதான் படத்துல காட்சிகள் அதிகமா இருக்கும் போல. சும்மா சொல்லக் கூடாது சிம்ஹா புகுந்து விளையாடியிருக்கிறார். அசால்ட் சேது வாக அட்டகாசமாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். பொதுவா, நம்மைக் கவர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் வேறு நடிகர்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம். ஆனால், இந்த சேது கதாபாத்திரத்தைப் பொறுத்தவரையில் வேறு யாரையும் கற்பனையில் கூட கொண்டு வரமுடியவில்லை. நின்று, நிதானமாக நெத்தி அடி அடித்திருக்கிறார். இந்தப் படம் சிம்ஹாவை வேறு ஒரு உயரத்தில் கொண்டு போய் உட்கார வைத்துவிடும்.


திரைப்படம் இயக்கும் ஆசையில் கதை எழுதுவதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் இயக்குனர் கதாபாத்திரத்தில் சித்தார்த். கொஞ்சம் அப்பாவித்தனமான கதாபாத்திரம், எதையுமே யோசித்து யோசித்து செய்கிறார். லட்சுமி மேனனிடம் காதலிலாவது ஜொலிப்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை, சிம்ஹாவிடம் கொஞ்சம் முறைத்துக் கொண்டாவது நிற்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை. இயக்குனர் கார்த்திக், சித்தார்த்திடம் கதாபாத்திரத்தை சரியாக சொல்லவில்லையா, அல்லது சித்தார்த், நமக்கு இருக்கும் முக்கியத்துவத்திற்கு இது போதும் என்று முடிவெடுத்துவிட்டாரா என்பது தெரியவில்லை. திறமையைக் கொட்டி நடிப்பதற்கு காட்சிகள் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சிம்ஹா கதாபாத்திரம் ஸ்டிராங்காக உருவாக்கப்பட்டு விட்டதால், சித்தார்த்தின் கதாபாத்திரம் எடுபடாமல் போய்விட்டது.


லட்சுமி மேனன் மொத்தமாக எத்தனை காட்சிகள் வந்தார் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வரும் ஒரு முன்னணி நாயகிக்கு இந்த அளவிற்கா குறைவான காட்சிகளை வைப்பது ?. படத்துக்குத் தேவையில்லை என்று நினைத்திருந்தால் மொத்தமாக அவரது கதாபாத்திரத்தைக் கூட வைக்காமல் போயிருக்கலாம். ஆனாலும், ஒரே ஒரு ட்விஸ்ட்டுக்கு மட்டும் அவரது கதாபாத்திரம் பயன்பட்டிருக்கிறது.


சித்தார்த்தின் நண்பனாக கருணாகரன், காமெடிக்கு இவர்தான் பொறுப்பு என்றாலும் ஒரு சில வசனங்களால் மட்டும் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் வரிசையில் அம்பிகா, ஆடுகளம் நரேன் என பலர் இருக்கிறார்கள்.


சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தேவையான இடங்களில் மட்டும் வாசித்திருக்கிறார். சிம்ஹா வரும் காட்சிகளில் ஸ்பெஷலாக கவனம் செலுத்தியிருக்கிறார். கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு கோணங்களிலும், லைட்டிங்குகளிலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறது.


இடைவேளைக்குப் பின் படத்தில் சிம்ஹா நடிகராகி விடுகிறார். அவரை எந்த அளவிற்கு டெரர் ஸ்டார் ஆக நகைச்சுவையாக காட்டியிருக்கிறார்கள் என்பதை அ.குமார் என்ற படத்துக்குள் படம் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமே புரிந்து கொண்டு பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அது எப்பேர்ப்பட்ட நகைச்சுவை என்பதை ஜிகர்தண்டா படத்தைப் பார்க்கும் நாம் உணர முடியாததால் நமக்கு எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. ஒரு சப்-இன்ஸ்பெக்டரே சிம்ஹாவிடம் வந்து உங்க ஃபைல்களை மேலிடத்துல கேட்டிருக்காங்க, என்கௌண்டர் பண்ண வாய்ப்பிருக்கு என்று சொன்னாலும், கடைசியில் கிளைமாக்ஸ வரை கூட காவல் துறையினர் ஒருவரும் எட்டிப் பார்க்கவில்லை. வழக்கமான தமிழ் சினிமா போல கடைசியில் வில்லன் திருந்திவிடுவதெல்லாம் இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களிடம் நாம் எதிர்பார்க்காதது.


ஜிகர்தண்டா - மற்றுமொரு மதுரை ஸ்பெஷல், நிறைய காரம், கொஞ்சம் இனிப்பு...


-------------------------------------------------------------------குமுதம் சினி விமர்சனம்ஒரு டெரர் ஸ்டாரை பவர் ஸ்டார் ஆக்கிப் படம் எடுத்து ஜெயிக்கும் இளம் இயக்குநரின் கதை!


வழக்கமான ஹீரோயிஸம், கதாநாயகி, டூயட், காமெடி என்று எல்லா தமிழ் சினிமாவின் வழக்கங்களையும் அரிவாளால் வெட்டி வீசிவிட்டு புதுப் பாதை போட்டிருப்பதாகவே "பிட்ஸா கார்த்திக் சுப்புராஜை கைதட்டிப் பாராட்டலாம்!


ரௌடிப் படம் எடுக்க ஆசைப்படும் சித்தார்த், மதுரையில் 48 கொலைகள் செய்து ராஜாங்கம் நடத்தும் பாபி சிம்ஹாவை ரகசியமாய்ப் பின் தொடர்ந்து கதை சேகரிக்கிறார்.கடைசியில் எதிரி என நினைத்த சித்தார்த்தைப் பிடிக்கும் பாபி, தானே ஹீரோவாய் நடிக்க மிரட்ட, அப்புறம் என்ன ஆச்சு என்பதுதான் ஜிகர்தண்டா!


படத்தின் ஹீரோ சித்தார்த்தா, பாபியா என்றெல்லாம் விவாதம் நடத்துகிறார்கள். ஆனால் உண்மையான ஹீரோ திரைக்கதைதான். இல்லாவிட்டால் ரத்தம் பீய்ச்ச கழுத்து அறுபடும் காட்சியில் கைதட்டி ரசிப்பார்களா என்ன? திரைக்கதையின் தோளில் கைபோட்டு வசனமும் கேமராவும் ராஜநடை புரிகிறது.


பயம், தயக்கம், டென்ஷன் என்று தனக்குக் கிடைத்த வாய்ப்பை க்யூட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார் சித்தார்த். ரௌடிக் கும்பலிடம் மாட்டிக் கொண்டு அவர் படும் பாடு. சாப்பாடு!


புடவை திருடியாக லட்சுமி மேனன், லேசான காதல், அதுவும் டுபாக்கூர் எனத் தெரிந்த பிறகு, வஞ்சகப் புன்னகையுடன் சித்தார்த்தை மாட்டிவிடும் அழகு நைஸ்! அந்த நடிப்புப் பயிற்சியாளரும், ஒரு நிமிடம் வரும் விஜய்சேதுபதியும் நச்.


எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் வில்லன்... ஸாரி... ஹீரோ... ஸாரி... காமெடியன் பாபி சிம்ஹா! கொலை வெறியோடு எதிர்களைப் போட்டுத் தள்ளுவதாகட்டும், தானே ஹீரோ என்று முடிவெடுத்த பிறகு கெத்து காட்டுவதாகட்டும், தான் வெறும் காமெடி பீஸ்தான் என்று தெரிந்த பிறகு பவ்யம் காட்டித் திருந்துவதாகட்டும் கண்ணை மூடிக் கொண்டு அவர் கையில் அரிவாளை... ஸாரி விருதைக் கொடுத்து விடலாம்.


"கண்ணம்மா கண்ணம்மா மட்டும் நல்லாயிருக்கும்மா!


எல்லாம் சரிதான். வில்லனை வைத்து காமெடி படம் எடுத்து வெற்றி என்பதுடனேயே படம் முடிந்து விடுகிறதே. அதற்கு அப்புறம் எதற்கு ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்கிறார்கள்?


ஜி.த - செமை கூல்!


குமுதம் ரேட்டிங்: நன்றுவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

ஜிகர்தண்டா தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in