விமர்சனம்
ஏ.சி., சிவகிரியாக புதுமுகம் சிவகிரி. என்னோட பிரேக் பாஸ்ட் - இட்லி வடைகறி, லன்ச் - மட்டன் கறி, ஈவினிங் டிபன் - சிக்கன் கறி, டின்னர் பீப் கறி, என் பேரு சிவகிரி என பஞ்ச் டயலாக் பேசாமல் அதையெல்லாம் சாப்பிட்டால் எத்தனை பெரிய உருவம் கிடைக்குமோ, அத்தனை பெரிய உருவத்துடன் அடக்க ஒடுக்கமாக சற்றே ஆடியபடியே வந்து அக்யூஸ்ட்களை (குற்றவாளிகளை) அலற விடுகிறார் சிவகிரி. அக்யூஸ்ட்களுடன், ஆடியன்ஸ்களும் அலறுவது படத்தில் காமெடியன்கள் இல்லாத குறையை போக்கி விடுகிறது. முதல் படத்திலேயே காமிரா பயம் இல்லாமல் சிவகிரி, அடுத்தடுத்த படங்களில் உடம்பை குறைக்க வேண்டியது அவசியம்.
சிவகிரியின் ஜோடியாக குக்ஷனா, மலேசிய தமிழ்பெண் சாந்தினி, ரிஷா ஆகிய மூவரில் ரிஷாவிற்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு.. அவரும் கவர்ச்சியை மட்டுமே நம்பியிருப்பதால் பக்!
வெண்ணிற ஆடை மூர்த்தி, வாசுவிக்ரம், நெல்லை சிவா, பாலு ஆனந்த், வெள்ளை சுப்பையா, கோவை செந்தில் உள்ளிட்ட காமெடியன்கள் எல்லாம் சீரியஸ் கேரக்டர்கள் ஏற்று சிரிப்புக்கும் ஆப்பு வைப்பது கொடுமை. வில்லன் குகன் ஏற்கனவே சில படங்களில் தெரிந்த முகம்! ஓவர் ஆக்டிங்கால் மைனஸ் வாங்குகிறார்.
ஓப்பனிங் சீனில் நடிகர் முரளி மாதிரி நோட்புக்கும் கையுமாக காலேஜ் ஸ்டூடண்டாக வந்து அய்யோ... என நம்மை அலற விடும் சிவகிரி, காலேஜ் ஸ்டூடண்ட் அல்ல... காவல் அதிகாரி எனும் உண்மை தெரிய வந்ததும்தான் அப்பாடா... என ரிலாக்ஸ் ஆக முடிகிறது. இந்த ஒரு டுவிஸ்ட்டுக்காகவே புதிய இயக்குனர் சிவாஜியை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்!
ஆட்டுவிக்கும் அராபின் யூசப்பின் இசை, அடிக்கடி காமிராவை ஆட்டி வைக்கும் ராஜமணியின் ஒளிப்பதிவு, டிஷ்யூம் சக்திவர்மாவின் சண்டைபயிற்சி - இவையெல்லாம் பல இடங்களில் பலம். சில இடங்களில் பலவீனம்!
காஸ்ட்யூம், கெட்-அப், மேக்கப், செட்-அப் உள்ளிட்ட இன்னும் சில விஷயங்களில் இன்னும் சற்றே கவனம் செலுத்தியிருந்தால் காமெடி போலீஸ் ஆன சிவகிரி, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு சத்யராஜ் மாதிரி மிளிர்ந்திருக்கலாம்!. தன் மனைவியும், படத்தின் தயாரிப்பாளருமான மாயாவிற்கும் நல்ல மகசூலை தந்திருக்கலாம்!
முந்தாநேத்து அறிந்து மீந்த வெங்காயம், பச்சைமிளகாய், நேற்றைய பருப்பு வடை ஆகியவற்றை கலந்து சமைத்து இன்றைய இட்லிக்கு சுவையான வடைகறியாக தொட்டுக் கொள்வதைப் போல், சிவகிரி படத்திலும் சுவையான விஷயங்கள் இல்லாமல் இல்லை.
சிவகிரி : சிலருக்கு பிடித்த, சிலருக்கு பிடிக்காத வடைகறி!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!