விமர்சனம்
நடிப்பு - துருவ் விக்ரம், மேகா சௌத்ரி, ஈஸ்வரி ராவ்
தயாரிப்பு - இ4 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பாலா
இசை - ரதன்
வெளியான தேதி - 6 அக்டோபர் 2020
நேரம் - 1 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் பாலாவின் ரீமேக் வெர்ஷன் தான் இந்த வர்மா. படத்தையே வெளியிடக் கூடாது என்று முடிவெடுக்கும் அளவிற்கு, இந்தப் படத்தில் அப்படி என்ன குறையைக் கண்டார்கள் என்று தெரியவில்லை. சொல்லப் போனால் அதன் பிறகு அவர்கள் எடுத்து வெளியிட்ட ஆதித்ய வர்மா அளவிற்கு இந்தப் படத்தில் வன்முறையோ, அதிகபட்ச ஆபாசமோ இல்லை.
ஒரு வேளை அதையெல்லாம் பாலா அதிகமாகச் சேர்க்கவில்லை என்ற காரணத்தால் படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஓரிரு காட்சிகளைத் தவிர ஆதித்ய வர்மா போல முகம் சுளிக்கும் காட்சிகள் இந்த வர்மா படத்தில் இல்லாதது பெரிய ஆறுதல்.
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் துருவ் விக்ரம். பாண்டிச்சேரியில் டாக்டருக்குப் படித்து முடித்து ஹவுஸ் சர்ஜன் ஆக இருக்கிறார். மிகவும் கோபக்காரர். அவரது கல்லூரிக்கு முதலாமாண்டு படிக்க வரும் மேகா சௌத்ரியை பார்த்ததுமே காதலிக்க ஆரம்பிக்கிறார். பின் இருவருமே காதலில் விழ, அந்தக் காதல் பற்றி தெரிய வந்ததும் மேகாவின் அப்பா தங்களது சாதியில்தான் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பேன் என அவர்கள் காதலை ஏற்க மறுக்கிறார். மேலும், மேகாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்கிறார். இதனால், வாழ்க்கையே வெறுத்துப் போகும் துருவ் போதைக்கு அடிமையாகிறார். இருந்தாலும் சிறந்த அறுவை சிகிச்சை டாக்டராகவும் இருக்கிறார். போதைப் பிரச்சினையால், ஒரு கட்டத்தில் அவருடைய டாக்டர் தொழிலுக்கே பிரச்சினை வருகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
துருவ் விக்ரமின் முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் பாலா கொடுத்த ஆக்டிங் டிரைனிங்கில் நன்றாகப் பயிற்சி எடுத்துவிட்டு ஆதித்ய வர்மா படத்தில் நடித்திருக்க வேண்டும். வர்மா கதாபாத்திரத்திற்குள் தன்னை அப்படியே புகுத்திக் கொண்டுள்ளார். முதல் படத்திலேயே முத்தக்காட்சி, ஓரிரு ஆபாசக்காட்சிகளில் நடித்ததை தவிர்த்திருக்கலாம்.
அப்பாவிப் பெண்ணாக மேகா சௌத்ரி. ஆனால், துருவ் தன்னைக் காதலிக்கிறார் என்று தெரிந்தும் பெரிய எதிர்ப்பு எல்லாம் தெரிவிக்காமல் இவரும் சீக்கிரத்திலேயே காதலில் விழுந்துவிடுகிறார். பாந்தமான குடும்பப்பாங்கான முகம். இனி, தமிழில் யாராவது வாய்ப்பு கொடுத்தால் ஒரு ரவுண்டு வரலாம்.
கதாநாயகன், கதாநாயகியைத் தவிர முக்கியமான கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ். இவர் துருவ் வீட்டில் வேலை செய்பவர். சிறு வயதிலிருந்தே இவர் தான் துருவ்வை வளர்த்து வருபவர். ஒரிஜனல் அர்ஜுன் ரெட்டி படத்தில் இந்த அளவிற்கு முக்கியத்துவமில்லை. இயக்குனர் பாலா இந்தக் கதாபாத்திரத்திற்கு எதற்கு இவ்வளவு முக்கியத்தும் என விக்ரம் தரப்பில் யோசித்திருக்கலாம்.
மற்ற கதாபாத்திரங்களில் துருவ்வின் நண்பர்களாகச் சிலர் வருகிறார்கள். ஆனால், அவர்களது முகம் மனதில் கூட பதியவில்லை.
ரதன் இசையமைப்பில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. சுகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது டைட்டிலில் பார்த்த பிறகுதான் தெரிகிறது.
ஒரிஜனல் அர்ஜுன் ரெட்டி படத்தில் இருந்த காட்சிகள் ஆதித்ய வர்மா படத்தில் அச்சு அசலாக அப்படியே இருந்தன. இந்தப் படத்தில் பல காட்சிகளை பாலா நீக்கிவிட்டிருக்கிறார். ஆதித்ய வர்மா படம் 2 மணி நேரம் 38 நிமிடம். இந்த வர்மா 1 மணி நேரம் 50 நிமிடம் மட்டுமே. சுமார் 50 நிமிடக் காட்சிகளை தேவையில்லை என தமிழில் ரீமேக் செய்யும் போது பாலா தூக்கியிருப்பாரோ ?.
சமூக வலைத்தளங்களில் வர்மா படத்திற்கு நேற்றிலிருந்தே நெகட்டிவ்வான கமெண்ட்டுகள் அதிகம் வருகின்றன. அந்த அளவிற்கு மிக மோசமான படமாக இல்லை.
வர்மா - காதல் வலி