2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பாலா
இசை - ஜிவி பிரகாஷ்குமார், சாம் சிஎஸ்
நடிப்பு - அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், ரிதா
வெளியான தேதி - 10 ஜனவரி 2025
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

இயக்குனர்கள் ஷங்கர், பாலா போன்றவர்கள் அவர்களது பாணி படங்களைத் தவிர வேறு பாணியிலான படங்களைப் பற்றி யோசிப்பதில்லையோ என்ற எண்ணத் தோன்றுகிறது. இந்தப் படத்தையும் முழுக்க முழுக்க தன்னுடைய பாணியிலான படமாகத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா.

நேற்று வெளியான மற்றொரு படமான 'கேம் சேஞ்சர்' படத்தை தன்னுடைய முந்தைய படங்களின் சாயலில்தான் எடுத்திருந்தார் இயக்குனர் ஷங்கர். அது போல பாலாவும் இந்த 'வணங்கான்' படத்தை தன்னுடைய முந்தைய படங்களின் சாயலில்தான் எடுத்திருக்கிறார்.

கன்னியாகுமரியில் தனது பெற்றோரை இழந்த சிறு வயது அருண் விஜய், அது போலவே பெற்றோரை இழந்த பெண் குழந்தை ஒன்றை எடுத்து வளர்க்கிறார். இருவரும் பாசமான அண்ணன், தங்கைகளாக இருக்கிறார்கள். அருண் விஜயால் பேச முடியாது, காதும் கேட்காது. கடும் கோபக்காரர். தனது எதிரில் தவறு நடந்தால் அடித்துவிடுவார். அவரை ஆதரவற்றோர் இல்லத்தில் வேலைக்குச் சேர்க்கிறார் குடும்ப நண்பரான பாதிரியார். அந்த இல்லத்தில் பார்வையற்ற பெண்கள் சிலர் குளித்ததை, மூன்று பேர் திருட்டுத்தனமாகப் பார்த்து ரசிக்கிறார்கள். அவர்களில் இருவரை கொடூரமாகக் கொன்றுவிடுகிறார் அருண் விஜய். அவரே போலீசில் சரணடைகிறார், ஆனாலும் எதற்காகக் கொன்றேன் என்பதை சொல்ல மறுக்கிறார். ஜாமீனில் வந்த அருண் விஜய் இன்னொருவனையும் கொல்வேன் எனச் சொல்கிறார். எதற்காக அருண் விஜய் கொலை செய்தார் என்ற காரணத்தைத் தேடுகிறது போலீஸ். அதைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து வெளிவந்த 'பிதாமகன்' படத்தில் விக்ரம் ஏற்று நடித்த சித்தன் கதாபாத்திரத்தை அருண் விஜய்யின் கோட்டி கதாபாத்திரமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார் பாலா. 20 வருடங்களாகிவிட்டது, இன்றைய தலைமுறைக்கு புதிதாக இருக்கட்டும் என அப்படியே வைத்துவிட்டாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் அந்த கோட்டி கதாபாத்திரத்தில் பாலா போட்ட கோட்டைத் தாண்டாமல் அப்படியே கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் அருண் விஜய். இந்தப் படம் வியாபார ரீதியாக அவருக்கு வெற்றிப் படமாக அமைகிறதோ இல்லையோ அருண் விஜய்யின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்களில் முதலாவதாக இருக்கும்.

நடிக்கத் தெரிந்த நடிகையரைக் கண்டுபிடிக்கிறாரா அல்லது தனது படங்களில் அப்படி நடிக்க வைத்துவிடுகிறாரா பாலா என பட்டிமன்றம் வைக்கலாம். அருண் விஜய்யைக் காதலிக்கும் ரோஷினி பிரகாஷ் துறுதுறுப்பான நடிப்பில் யார் இவர் எனக் கேட்க வைக்கிறார். 'பிதாமகன்' லைலா கதாபாத்திரமான மஞ்சுவை மீண்டும் பார்த்தது போல இருக்கிறது. அருண் விஜய்யின் தங்கையான ரிதா கதாபாத்திரம் மிக அழுத்தமான கதாபாத்திரம். தான் ஒரு வளர்ப்பு தங்கை தான் என்று தெரிந்த பின் அவர் கதறி அழும் நடிப்பு உருக வைத்துவிடும். அவருடைய கதாபாத்திரத்திற்கான முடிவு மட்டும் செயற்கையாக சினிமாத்தனமாக உள்ளது.

நீதிபதியாக மிஷ்கின், சிறப்பு காவல் அதிகாரியாக சமுத்திரக்கனி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் அவர்கள் கதாபாத்திரமும் நடிப்பும் சிறப்பாக உள்ளது.

பாலா படம் என்றாலே ஓரிரு பாடல்களாவது சிறப்பாக அமைந்துவிடும். இந்தப் படத்தில் அப்படியான பாடல்கள் மிஸ்ஸிங். உருக்கமான பாடல்கள் இடம் பெற காட்சிகள் இருந்தும் அதற்குப் பொருத்தமான பாடல்களைத் தரவில்லை ஜிவி பிரகாஷ்குமார். பின்னணி இசையில் தனது சத்தத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார் சாம் சிஎஸ். கன்னியாகுமரின் களத்தை இயல்பாய் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்பி குருதேவ்.

ஒரு சிறிய கதை, சில நீளமான காட்சிகள், வழக்கமான பாத்திரப் படைப்புகள் என லேசான அழுத்தத்துடன் நகர்ந்து முடிகிறது படம். பாலா படங்களில் இருக்கும் அந்தக் குரூரம் இந்தப் படத்திலும் இருக்கிறது. அதிலும் அந்த இரண்டு பேரை கொன்றது, மூன்றாவது கொலை ஆகியவை படம் பார்க்கும் போது அதிர வைக்கிறது. பாலா படம் என்று எதிர்பார்த்துச் சென்ற நமக்கு அவருடைய முந்தைய படங்களின் தரத்திற்கு நெருக்கமாக இந்தப் படம் இல்லாதது வருத்தமே.

வணங்கான் - காப்பான்

 

வணங்கான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வணங்கான்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓