3.5

விமர்சனம்

Advertisement

நாச்சியார் - விமர்சனம்

தயாரிப்பு - பி ஸ்டுடியோஸ், இயான் ஸ்டுடியோஸ்

இயக்கம் - பாலா

இசை - இளையராஜா

நடிப்பு - ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர்


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதையும் மீறி தொடர்ந்து தன் படங்களில் ஏதாவது ஒரு அழுத்தமான கருத்துக்களைப் பதிய வைக்கும் படைப்பாளிகள் ஒரு சிலரே. அவர்களில் பாலாவும் ஒருவர். அவருடைய படங்களில் கதாபாத்திரங்களின் ஆளுமை அதிகமாகவே இருக்கும். அவரது படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் தனி அடையாளத்தை, அந்தஸ்தைக் கொடுத்துவிடுவார். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது.


நமது நாட்டில் அடிக்கடி எழும் சமூகப் பிரச்சனையான பலாத்காரம் விவகாரத்திற்கு எப்படிப்பட்ட தண்டனையைக் கொடுக்கலாம் என்பதை இயக்குனர் பாலா அவரது பாணியிலேயே கொடூரமான ஒரு தண்டனையாகக் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட தண்டனைகள் வந்தால் இனி, நம் நாட்டில் பலாத்காரம் என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடும். அந்த ஒரு துணிச்சலான முடிவுக்காகவே இந்த நாச்சியார்-ஐ நச்சியார் என பாராட்டலாம்.


கல்யாண வீடுகளில் சமையல் எடுபிடியாக வேலை பார்க்கும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், வீட்டு வேலை செய்யும் இவானாவுக்கும் காதல். ஒரு சந்தர்ப்பத்தில் இவானாவை யாரோ பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்ற புகார் காவல்துறைக்கு வருகிறது. உதவி கமிஷனரான ஜோதிகா அந்த வழக்கை விசாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்தான் இவானாவை பலாத்காரம் செய்திருக்கிறார் என கைது செய்து தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார்கள். இவானாவிற்கு குழந்தையும் பிறக்கிறது. ஆனால், டிஎன்ஏ ரிப்போர்ட்டில் ஜி.வி.பிரகாஷ், இவானாவைக் பலாத்காரம் செய்யவில்லை என வருகிறது. அப்படியென்றால் இவானாவை யார் பலாத்காரம் செய்தார்கள் என ஜோதிகா அடுத்த கட்ட விசாரணையில் இறங்குகிறார். உண்மைக் குற்றவாளியை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


நாச்சியார் ஆக ஜோதிகா. இதுவரை பார்த்த ஜோதிகா வேறு, இந்தப் படத்தில் நாம் பார்க்கும் ஜோதிகா வேறு. ஜோதிகாவிடம் இருந்த அந்த குழந்தைத்தனமான சிரிப்பையும், நடிப்பையும் பறக்க வைத்துவிட்டார் பாலா. உடல் மொழியாகட்டும், தன்னிடம் இருக்கும் அதிகாரத் திமிரைக் காட்டுவதாகட்டும், இவானாவிடம் கருணையாக நடந்து கொள்வதாகட்டும் நாச்சியார் ஆக நடித்திருக்கும், இல்லை, இல்லை வாழ்ந்தே காட்டியிருக்கும் ஜோதிகாவை நன்றாகவே பாராட்டலாம். தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கான படங்களுக்கும் தனி இடமுண்டு என பாலாவும் நிரூபித்துவிட்டார்.


காத்தவராயன் ஆக ஜி.வி.பிரகாஷ் குமார். தகரமோ, தங்கமோ செல்ல வேண்டியவர்களிடம் சென்றால்தான் உருப்படி ஆக மாறும் என்பதற்கு ஜி.வி.பிரகாஷ் ஒரு உதாரணம். அவர் தகரமில்லை, தங்கம்தான் என பாலா அவரை அப்படியே மாற்றிவிட்டார்.


காத்தவராயன் மாதிரியான கதாபாத்திரத்திற்குத்தான் ஜி.வி.பிரகாஷ் இத்தனை நாட்கள் காத்திருந்தார் போலிருக்கிறது. அப்படியே பத்து வயது குறைத்து காத்தவராயனை கண்முன் காட்டியிருக்கிறார்.


அரசியாக புதுமுகம் இவானா. இயல்பான அழகுடன் இளவரசியாகவே தெரிகிறார். அந்த கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும், நடிப்பும் ரசிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவில் ஷோபா, ரேவதி ஆகியோர் உருவாக்கி வைத்த இடத்தை இவானா பிடித்துக் கொள்ளலாம்.

இன்ஸ்பெக்டராக ராக்லைன் வெங்கடேஷ், நடிப்பில் ஆச்சரியப்பட வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் கொஞ்சமாக வந்தாலும் ஜிஎன்ஆர் குமரவேலன் கவனிக்க வைக்கிறார்.


இளையராஜாவைத் தவிர இப்படிப்பட்ட படங்களுக்கு இசையமைக்க யார் இருக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் போதும் என ஏன் நிறுத்திவிட்டார்கள் எனத் தெரியவில்லை.


இது வழக்கமான பாலா படம் இல்லை. அவர் படங்களில் இருக்கும் வழக்கமான க்ளிஷேக்களை இந்தப் படத்தில் அதிகம் தவிர்த்திருக்கிறார். படம் முடிவடையும் போது கண்களில் நிச்சயம் கண்ணீர் எட்டிப் பார்க்கும்.


படத்தில் பல இடங்களில் பல வசனங்கள் பல விஷயங்களை நேரடியாகவே சாடியிருக்கின்றன. போலீஸ் என்றால் எதையும் செய்யலாம் என்ற ஒரு அதிகாரத் தன்மை இங்கு அதிகமாகவே உள்ளது. அது படத்திலும் அப்படியே இருக்கிறது. பணம் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் தப்பித்துவிடுகிறார்கள் என்பது இன்னமும் நம் நாட்டின் சாபக்கேடுதான். அதை வெறும் படங்களில் காட்டி விடுவதுடன் நில்லாமல், எந்த மாதிரியான தண்டனை கொடுத்தால் அது சரியாகும் என தன் கருத்தை அழுத்தமாகவே பதிய வைத்திருக்கிறார் பாலா. அதற்காகவே இந்த நாச்சியாரைப் பார்க்கலாம்.


1984ல் தமிழ் சினிமாவில் ஒரு விதி வந்து பரபரப்பை பேச வைத்தது. அதன் பிறகு 2018ல் ஒரு நாச்சியார். விதி ஏற்படுத்திய பரபரப்பை நாச்சியார் ஏற்படுத்தத் தவறிவிட்டது. வெளியீட்டிற்கு முன்பு பாலா இந்தப் படத்தை இன்னும் பரபரப்பாக பேச வைத்திருக்கலாம். அதை செய்யத் தவறிவிட்டார், அது படத்தின் ஓபனிங்கில் நன்றாகவே எதிரொலிக்கிறது. படம் எடுப்பது மக்களுக்காகத்தான், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கவனம் வையுங்கள் பாலா...


நாட்டுக்கு ஒரு தீர்ப்பு சொல்லும், நாச்சியார்.

 

நாச்சியார் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நாச்சியார்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓