விமர்சனம்
அ நிறம் | அளவு
------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
இவர்தான் பாலா என்று மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறது தாரை தப்பட்டை. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறேன் என்ற போர்வையில் விரசமும் ஆபாசமும் தப்பட்டையில ஓங்கி ஒலிக்கிறது.
மாமனார் நிலையில் இருக்கும் பெரியவருடன் ஒன்றாக மது அருந்துவது, முத்தம் இடுவது போன்ற காட்சிகளை எவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. கதாநாயகி தற்போதைய தமிழ் திரைப்பட மரபுகளின்படி குடிகாரியாய் இருக்கிறாள். கதாநாயகன் சுத்தபத்தமாய் இருக்கிறானே என்று சந்தோஷப்படும் தருணத்தில் முழு சீசா மதுவையும் அப்படியே கவிழ்த்துக் கொள்கிறார் கதாநாயகன்!
ஆட்டக் கலைஞர்களின் அவலங்களை முன்பாதி சொல்கிறது. பின்பாதியோ பிணவறைத் தொழிலாளிகள் போன்றோரது விபரீத நிலையை விளக்குகிறது. ஆனால் எதற்கானத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
கதாநாயகியின் அம்மாவுக்குத் தன் பெண்ணின் இருப்பிடம் பற்றித் தெரியாத நிலையில், சசிகுமார் டானென்று அந்த இடத்துக்கு எப்படிப் போகிறார் என்பது விளக்கப்படவில்லை. கதாநாயகனின் தந்தையின் மரணத்தை முன்கூட்டியே யூகிக்க முடிகிறது.
உடன்பிறந்த தங்கையுடனேயே ஆட்டத்தின் போது பேசும் தரம் தாழ்ந்த இரட்டை அர்த்த வசனங்கள் நூறு பீப் பாடல்களுக்கு சமம். பிதாமகனில் பட்டையைக் கிளப்பியதால் அதே பாணிக் கலவைப் பாட்டை இதிலும் வைத்திருக்கிறார்கள். சூடான புலவுக்கும், ஊசிப்போன உப்புமாவுக்கும் உள்ள வேறுபாட்டைத்தான் உதாரணம் சொல்ல முடியும்!
இளையராஜாவின் ஆயிரமாவது படமாம்! சில பாடல்கள் ஜொலிக்கின்றன. சிங்காரம் கெட்டு என்ற சி.எஸ். ஜெயராமன் பாடிய அற்புதமான பாடலை கர்ணகடூரமாக ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். இளையராஜா கோபித்துக் கொள்ளக் கூடாது. உங்களது பாடலை இப்படிச் செய்தால் அனுமதிப்பீர்களா? நடன அசைவுகள் ஆபாசத்தின் உச்சம்!
சசிகுமாரின் சண்டைக் காட்சிகள் அவரது உள்ளக் கொந்தளிப்பை வெளிக்காட்டுவது போல உக்கிரமாக இருக்கின்றன. பின்னணி இசை மிகப் பொருத்தம்! ஒளிப்பதிவு துல்லியம். கதை மாந்தர் தேர்வு மிக பாந்தமாக இருக்கிறது.
இப்படி ஆடுறதைக் கத்துக்கிட்டதுக்குப் பதிலாக நீந்தக் கத்துக்கிட்டிருந்தாக் கூட கடலில் குதித்து தப்பிக்கலாம் என்பார் கதாநாயகி. கடல் கொந்தளிக்கிறதுக்கா? என்பார் தோழி. அரங்கில் பலர் புன்னகைக்கிறார்கள். (கதாநாயகியின் பெயர் சூறாவளி)
இப்படி நுணுக்கமான வசனங்கள் ஆங்காங்கே உண்டு! கதாநாயகியின் தலையில் பேன்கள் இருப்பது போன்ற யதார்த்தமான காட்சிகளும் அநேகம். நடனத்தின்போதே ஆடையைச் சரிசெய்து கொள்வதைப் போன்ற நுட்பமான காட்சியமைப்புக்களும் உண்டு.
தாரை தப்பட்டை! விரச ஒலி!
Advertisement
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!