சினம் (2022)
விமர்சனம்
தயாரிப்பு - மூவி ஸ்லைட்ஸ்
இயக்கம் - ஜிஎன்ஆர் குமரவேலன்
இசை - ஷபீர்
நடிப்பு - அருண் விஜய், பாலக் லால்வானி
வெளியான தேதி - 16 செப்டம்பர் 2022
நேரம் - 1 மணி நேரம் 55 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
பெண்களின் மீதான வன் கொடுமை, பாலியல் பலாத்காரம், சிறுமியர் கடத்தல், குழந்தைகள் கடத்தல் என சமீப காலமாக தமிழ் சினிமாவில் குற்றச் செயல்களைப் பற்றிய படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
கொரோனா தாக்கத்தால் இந்தப் படமும் சற்று தாமதமாக வெளிவந்துள்ளது. கதைக்கேற்ற பொருத்தமான தலைப்பை வைத்துள்ள இயக்குனர், சமூகத்தில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு சாமானிய மக்களும் சினம் கொண்டு போராட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன்.
சென்னையின் புறநகர்ப் பகுதியான ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார் அருண் விஜய். கடமை தவறாதவராக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அவருடைய இந்த குணத்தை அவ்வப்போது கிண்டலடிக்கிறார் அதே காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர். அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் சென்னை திரும்பும் அருண் விஜய்யின் மனைவி பாலக் லால்வானி கொலை செய்யப்படுகிறார். அவருடைய உடலுக்கு அருகே மற்றொரு ஆணின் உடல் இருப்பதால் அந்த வழக்கை 'கள்ளக் காதல்' வழக்கு என பதிவு செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆத்திரமடையும் அருண் விஜய், இன்ஸ்பெக்டர் கையை உடைக்க வேலையிலிருந்து சஸ்பெண்ட் ஆகிறார். உண்மை தெரிந்து அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்து, மனைவியின் கொலை வழக்கை விசாரிக்கச் சொல்கிறார்கள். கொலைக்கான காரணத்தை அருண் விஜய் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
போலீஸ் கதாபாத்திரத்தில் எப்போதுமே பொருத்தமாக நடிப்பவர் அருண் விஜய். இந்தப் படத்தில் கடமை தவறாத, நேர்மையான சப் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். காதல் மனைவி பாலக் லால்வானி கொலை செய்யப்பட்ட சோகம் ஒரு பக்கம், மனைவி மீதான அவப் பெயரைத் துடைக்க வேண்டும் என துடிக்கும் கோபம் ஒரு பக்கம் என அன்பான கணவனாக, அப்பாவாக துடிப்புடன் நடித்திருக்கிறார். வழக்கமான சினிமாத்தனமான போலீசாகக் காட்டாமல் இயல்பான ஒரு போலீசாக அவரது கதாபாத்திரத்தை சித்தரித்திருக்கிறார் இயக்குனர். கிளைமாக்சில் அருண் விஜய் எடுக்கும் முடிவு சரியா, தவறா என்பதை மீறி அப்படித்தான் இருக்க வேண்டும் என நமக்குள்ளும் ஒரு கோபத்தை வரவழைக்கிறது.
அருண் விஜய்யின் மனைவியாக பாலக் லால்வானி. ஆரம்பத்தில் சில காட்சிகளில் காதல் கணவரைக் கொஞ்சுவதுடன் அவரது வேலை முடிந்து போகிறது. ஏட்டையாவாக காளி வெங்கட் இந்தப் படத்திலும் தனி முத்திரை பதித்திருக்கிறார். படத்தில் யார் வில்லன்(கள்) என்பது சஸ்பென்ஸ். அதைக் கண்டுபிடித்ததுமே படத்தின் முடிவு வந்துவிடுகிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இல்லை, குறைவான கதாபாத்திரங்களை வைத்தே படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் அதிகம். ஒரு த்ரில்லர் படத்திற்குரிய ஒளிப்பதிவு படத்தில் உள்ளது. ஷபீர் பின்னணி இசை தேவையான இடங்களில் பரபரப்பைக் கூட்டுகிறது.
போலீஸ் படம் என்றாலே ஒரு கமர்ஷியல் சினிமாவாக அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் கொடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் அதற்கான வாய்ப்புகள் இருந்தும் சென்டிமென்ட்டான ஒரு படமாகக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் முயன்றிருக்கிறார். படத்தின் பல காட்சிகள் நிஜமான இடங்களில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் ஒரு அனாதை, அவரது காதலுக்கு காதலி வீட்டில் எதிர்ப்பு, மனைவி இறந்ததும் இறுதி ஊர்வலப் பாடல் என சில 'க்ளிஷே'வான காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். இரண்டாம் பாதியில் மனைவியைக் கொன்றவர்கள் யார் என்பதை விசாரிப்பதில் எந்த சினிமாத்தனமும் வைக்காமல் ஒரு வழக்கின் விசாரணை இப்படித்தான் போகும் என இயல்பாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
சினம் - சீற்றம்
பட குழுவினர்
சினம் (2022)
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்