தினமலர் விமர்சனம் » யுவன் யுவதி
தினமலர் விமர்சனம்
இண்டர்நெட் சாட்டிங்கில் சிக்கிய காதலனை கரம்பிடிக்க அமெரிக்க கிளம்பும் யுவதி - ரீமா கல்லிங்கல் (இப்பட அறிமுக நாயகியின் ஒரிஜனல் பெயர்தாங்க...)லுக்கும், உசிலம்பட்டி தாதா அப்பாவின் உடான்ஸ் பொறுக்க முடியாமல், அமெரிக்காவுக்கு எஸ் ஆக விசாவிற்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டு காத்திருக்கும் யுவன் - பரத்துக்குமிடையே ஏற்படும் நட்பு - காதல் - ஊடல் - இத்யாதி, இத்யாதி தான், "யுவன் யுவதி" படத்தின் மொத்தமும்!
உசிலம்பட்டியில் பிறந்தாலும், சென்னை டைட்டல் பார்க்கில் செட்டிலான யுவனாக பரத், பாத்திரத்திற்கேற்ற பளிச்(தேர்வு)! அப்பா சம்பத்தின் அன்பு தொல்லைகளுக்கு பயந்து அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆக அவர் பண்ணும் முயற்சிகளை, ஊரில் இருந்தபடியே தன் செல்வாக்கால் தடுக்கும் அப்பா சம்பத்தும் நச்! இந்த இருவரிடமும் மாட்டிக்கொண்டு காமெடி சந்தானம், படும்பாடு தான் "யுவன் யுவதி" படத்தின் ஹைலைட் டச்! பரத் வழக்கம் போலவே டான்ஸ, ஃபைட் என்று அல்ட்ராமார்டன் யுவனாக பட்டையை கிளப்பி இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக சந்தானமும் காமெடி, காமநெடி என்று வழக்கம் போலவே கலக்கி இருக்கிறார். புதுமுகம் ரீமா கல்லிங்கலின் நடிப்பில், அலட்டல், காதல், மிரட்டல் எல்லாம் ஒரு சேர புதைந்து கிடக்கிறது. தமிழுக்கு ஏற்ற சரியான முகம்தான் அம்மணி ரீமாவுக்கு! உசிலம்பட்டி மிராசாக மிரட்டியிருக்கிறார் சம்பத்! சபாஷ்!!
அதெப்படி அமெரிக்காவுக்கு விசா கிடைக்காதவர்களுக்கெல்லாம், சீஷெல்ஸ் தீவிற்கு விசா கொடுத்து விடுவார்களா என்ன...?, சென்னை சிட்டிக்குள் ஏ.சி., டி.சி., ஆஃபிஸ் தான் உண்டு என்பதை மறந்து, எஸ்.பி., ஆஃபிஸ் வரை போய் வருகிறேன் மாப்பிளை என்று பரத்திடம் இன்ஸ் மாமா சொல்வது எப்படி....? என்பது உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்களுக்கும், இன்னும் பல வினாக்களுக்கும் கதாசிரியரும், வசனகர்த்தாவுமான எஸ்.ராமகிருஷ்ணன் தான் பதில் சொல்ல வேண்டும்!
கோபி ஜெகதீஸ்வரனின் நெஞ்சை அள்ளும் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் பிரமாண்டமான பின்னணி இசையும் (பாடல்கள் இசை அல்ல...), இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலின் இயக்கத்தில், "யுவன் யுவதி"யை இளமையாகவும், இனிமையாகவும் காட்டியுள்ளனர். ஆனாலும் "யுவன் யுவதி" டைட்டிலில் இருக்கும் இளமையும், இனிமையும் படத்தில் இன்னும் சற்றே கூடுதலாக இருந்திருக்கலாம்!!.
மொத்தத்தில் "யுவன் யுவதி", ரசிகர்கள் கொடுக்கும் காசுக்கு "பலன் பாதி!"
-------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
யுவன், யுவதி இருவருக்குமே கனவு யு.எஸ்.க்கு செல்வது. யுவனின் நோக்கம் கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிக்க வேண்டும். யுவதிக்கு அமெரிக்காவில் காத்திருக்கும் காதலனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இவர்களின் திட்டத்தில் ஏற்படும் திடீர் குழப்பம். இருவருக்குமிடையே எழும் மோதல், ஊடல், கூடல். இதுதான் யுவன் யுவதி.
உசிலம்பட்டி பின்னணியை மறைத்து. டைடல் பார்க்கிலேயே பிறந்து வளர்ந்துபோல காட்டிக்கொள்கிற இந்த கால யூத் கேரக்டருக்கு பரத்தின் தோற்றம் கை கொடுக்கிறது. "விருமாண்டி டைப் அப்பாவிடம் பம்முவது, காதல் குஷியில் துள்ளுவது உள்ளிட்ட முக்கியமான காட்சிகளில், தன்னிடம் தெரிகிற எந்திரத்தன்மையை பரத் தவிர்ப்பது நல்லது.
அகன்ற விழிகள், சற்று பெரிய உதடுகள், முகத்தில் சில நேரங்களில் தெரிகிற முதிர்ச்சி என வலம்வரும் ரீமா கலிங்கல், கேரளா ஸ்பெஷல். பரத்தின் அப்பாவால் கடத்தப்பட்டு, அமெரிக்கப் பயணம் ரத்தாகி. பரத்திடம் ஆவேசப்படும்போது நடிப்பிலும் ஸ்கோர் பண்ண முயல்கிறார்.
அடிதடி அப்பாவாக வரும் சம்பத்தின் மிரட்டல் சோடை போகவில்லை. காதல் பித்தம் தலைக்கேறிய ஹீரோவால் அல்லல்படும் மாமுலான நண்பன் கேரக்டரில் சந்தானம். எண்ட் கார்டு போடுற வரைக்கு நம்மள விட மாட்டாங்க போலிருக்கே என சந்தானமே அலுத்துக்கொள்ளும் அளவுக்கு அவரின் காமெடியை ரொம்பவே நம்பியிருக்கிறார்கள்.
பாட்டுவேணாம் என ரசிகர்கள் யூகித்துக் கதறும் சிச்சு வேஷன்களை எல்லாம் கட்டாயம் ஒரு டூயட் தொடர்கிறது.
விஜய் ஆண்டனியின் இசை ஈர்க்க வில்லை. வழக்கமான ஊடல் கலாட்டாக்களை செஷல்ஸ் தீவில் பார்ப்பது மட்டும் சின்ன ஆறுதல். விலகிப்போகும் ரீமாவிடம் பரத் ரொமான்ஸ் தூண்டில் போடும் காட்சிகளில் எமோஷனும் இல்லை, குதூகலமும் இல்லை. முக்கியப் பிரச்னை காதல் தகராறு மட்டுமே என்ற நிலையில், பரத்தை யுஎஸ். வெறியராகக் காட்டி இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் குழம்பியிருக்க வேண்டாம். இப்படிச் சில அவதிகளைத் தவிர்த்திருந்தால், யுவன் யுவதி தேறியிருப்பார்கள்.
யுவன் யுவதி - முழுமதி இல்லை.