2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி
தயாரிப்பு - எஸ் போகஸ்
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
இயக்கம் - பாபா பாஸ்கர்
வெளியான தேதி - 4 ஏப்ரல் 2019
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 2/5

நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் இயக்குநர்கள் ஆக மாறி படம் இயக்குவதைப் போல நடன இயக்குநர்கள் இயக்குநர் ஆக மாறுவது குறைவுதான். ராகவா லாரன்ஸ், பிரபுதேவா வரிசையில் நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இந்த குப்பத்து ராஜா படம் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமாகியிருக்கிறார்.

அவர் பார்த்து வளர்ந்த வட சென்னை பகுதியை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், அதில் தேர்வு செய்யப்பட்டு நடிக்க வைக்கப்பட்ட நட்சத்திரங்கள் எல்லாருமே பொருத்தமாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால், கதையின் மையம், அதைச் சுற்றிய திரைக்கதை சரியாக அமைக்கப்படாததால் எந்தக் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் படம் இங்கும், அங்குமாக அல்லாடுகிறது. முழு படமுமே ஒரு செட்டுக்குள்யே நகர்ந்து முடிவதும் ஒரு நாடகத்தன்மையைத் தருகிறது. நடித்தவர்களை வேலை வாங்கி, அவர்களை யதார்த்தமாக நடிக்க வைத்ததில் மட்டுமே இயக்குநர் பாபா பாஸ்கர் பாஸ் ஆகியிருக்கிறார்.

அப்பா எம்.எஸ்.பாஸ்கருடன் வசிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், சேட்டிடம் மாதத் தவணை கட்டாத வண்டிகளை தூக்கும் வேலையைச் செய்து வருகிறார். அந்த ஏரியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பார்த்திபன் உடன் நெருங்கிய நண்பராக இருப்பவர் எம்.எஸ்.பாஸ்கர். ஒரு நாள் பாஸ்கரை யாரோ கொலை செய்துவிடுகிறார்கள். அப்பாவைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடித்து பழி வாங்கத் துடிக்கிறார் பிரகாஷ். அவருக்கு எதிரிகளே யாரும் இல்லாத நிலையில் அவரைக் கொன்றது யார் என்பதை ஜிவி பிரகாஷ் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

தர லோக்கல் இளைஞன் ராக்கெட் ஆக ஜி.வி.பிரகாஷ்குமார். அவருடைய டிரஸ்ஸும் பேச்சும் அவரை முதன் முதலில் பார்க்கும் போதே அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராகக் காட்டிவிடுகிறது. முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் ஜி.வி.யின் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. சென்னையில் அவர் பார்த்துத் தெரிந்து கொண்ட கதாபாத்திரம் என்பதால் எளிதில் நடித்திருப்பார் போலிருக்கிறது.

புதுமுகம் பாலக் லால்வானி-க்கு முதல் படத்திலேயே தெரியாத, பார்த்திருக்காத ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. பாவாடை தாவணியில் பொருத்தமாக லோக்கல் தமிழ்ப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். பார்ப்பதற்குக் கொஞ்சம் நண்பன் இலியானா மாதிரி இருக்கிறார். அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வரலாம்.

ஏரியாவின் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு தலைவர் பார்த்திபன். ரவுடியிசம் செய்யாத அல்லது படத்தில் காட்டாத ஒரு நல்லவர். யாருக்கு எந்தக் கஷ்டம் என்றாலும் உடனே ஓடிப் போய் உதவுகிறார்.

ஜி.வி.பிரகாஷின் நெருங்கிய நண்பனாக யோகி பாபு. படம் முழுவதும் வந்தாலும், எப்போதோ ஒரு முறைதான் சிரிக்க வைக்கிறார். குடிகார அப்பாவாக, ஆனால் பாசமான அப்பாவாக எம்.எஸ். பாஸ்கர். ஒரு லோக்கல் ஏரியாவில் பூனம் பஜ்வா போன்ற ஒருவர் எப்படி வந்து வசிப்பார் என்பது ஆச்சரியம்தான். கிளாமருக்காக அவர் கதாபாத்திரத்தை வலுக்கட்டாயமாகச் சேர்த்திருக்கிறார்கள்.

தான் நாயகனாக நடிக்கும் படத்திற்கே ஜி.வி.பிரகாஷ் சிறப்பான பாடல்களைக் கொடுக்க முடியாமல் இருப்பது ஆச்சரியம்தான். படத்தில் பாராட்ட வேண்டிய தொழில்நுட்பக் கலைஞர்களில் கலை இயக்குனர் கிரண் முதலிடத்தைப் பிடிக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்த குப்பங்களைவிட இந்தப் படத்தில் பார்ப்பது நிஜமான ஒரு குப்பத்தைப் பார்ப்பது போன்று இருக்கிறது. அதற்கு மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் கூடுதலாக யதார்த்தத்தைக் காட்டுகிறது.

எடுத்துக் கொண்ட முயற்சியெல்லாம் ஓ.கே. ஆனால், கதையும், திரைக்கதையும் அழுத்தமாக இல்லாததால் இந்த ராஜா கொஞ்சம் ராங்காகப் போய்விட்டார்.

குப்பத்து ராஜா - காவலாளி

 

பட குழுவினர்

குப்பத்து ராஜா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓