தினமலர் விமர்சனம்
யாரோ புதியவர் பா. ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம், யாரோ புதியவர் “திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ சி.வி.குமார் தயாரித்துள்ள படம், யாரோ புதிய இசையமைப்பாளர் சந்தோஜ் நாராயணன் இசையமைத்துள்ள படம், யாரோ ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ள திரைப்படம், யார், யாரோ புதுமுகங்கள் தினேஷ் (நாயகர்- தினகரன்), நந்திதா (நாயகி - பூர்ணிமா), வேலு, மீனாட்சி, ஐஸ்வர்யா, ஷாலு, ஷோபி உள்ளிட்டோர் நடித்துள்ள நட்சத்திர மதிப்பில்லாத சாதாரண படமான “அட்டகத்தி’ படத்தை “சிங்கம்’-சூர்யாவையும், “சிறுத்தை’-கார்த்தியையும் வைத்து தொடர்ந்து படங்கள் தயாரித்து வெளியிடும் ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா வாங்கி வெளியிட்டு இருப்பதுடன் அட்டகாசமாக பப்ளிசிட்டியும் பண்ணிவருகிறார் என்றால் “அட்டகத்தி’ எத்தனை “வெட்டும் கத்தி’ “வெற்றி கத்தி’ என்பது தெரிந்திருக்கும்!
அட்டகத்தியில் கதை என்று பெரிதாக எதுவும் கிடையாது. பள்ளிபருவத்தில் இருந்து கல்லூரி செல்லும் நகரத்தை ஒட்டிய கிராமத்து இளைஞனின் காதல் விளையாட்டுகள், கண்ணாமூச்சிகள்தான் “அட்டகத்தி’ மொத்தமும்! அதை, ஆறு முதல் தொண்ணூற்று ஆறு வயது வரை உள்ள எல்லோரும் ரசிக்கும்படி கானா பாடல்கள், காதல் பாடல்கள், கல்லூரி நிகழ்வுகள் மூலம் கலக்கலாக சொல்லியிருக்கின்றனர் “அட்டகத்தி’ டீமில் உள்ள மேற்கண்ட யார்யாரோ புதியவர்கள், அதிலும் இயக்குநர் பா. ரஞ்சித்தும், அவர் சொன்னதை அப்படியே அழகாக செய்திருக்கும் அறிமுக நாயகர் தினகரன், “அலைஸ்’ தினேஷும் அட்டகத்திகள் அல்ல. வெட்டும் கத்திகள்! ஆக மொத்தத்தில் “அட்டகத்தி’- “வெட்டும்கத்தி’- அனைவரையும் கவர்ந்திடும் “வெற்றிகத்தி’!
--------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
காதலுக்காக படித்து, காதலால் பெயிலாகி, காதலுக்காக பேருந்தில் தொங்கி, காதலுக்காக அடிவாங்கி, காதலுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட இன்றைய இளைஞர்களில் ஒருவன் தான் அட்ட கத்தி.
ரொமான்ஸ், ஆக்ஷன் இரண்டிலும் அடிக்கடி ட்ரவுசர் கழற்றப்படுகிற அட்டக்கத்தி தீனாவாக வரும் தினேஷ் படம் முழுக்க அசடு வழிந்தே அப்ளாஸ் வாங்குகிறார். காதலைப்ரபோஸ் பண்ணப்போகும் தினேஷ் அண்ணா ஆகி திரும்புவதும், அவர் கஷ்டப்பட்டு வரவழைக்கும் சோகத்தை நண்பன் போண்டா கொடுத்து கலைக்கப் பார்ப்பதும் காமெடியில் புது வெரைட்டி. பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டே தினேஷுக்கு அட்வைஸ் பண்ணும் காட்சியில் ஹீரோயின் நந்திதாவும் டி.வி. சீரியலில் வில்லனை பார்த்து எகிறது தினேஷின் அம்மாவை சமாதானப்படுத்துகிற காட்சியில் ஐஸ்வர்யாவும் கவனம் ஈர்க்கிறார்கள்.
தினேஷின் ஊர்க்கார நண்பர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் யதார்த்தமான காமெடி யாருப்பா இவங்க என்று கேட்க வைக்கிறது. வெகுளியாக வரும் தினேஷின் அம்மா ராத்திரி வந்து விட்டால் சரக்கின் உபயத்தால் சாகசக்காரராக உருமாறும் அப்பா போன்றவர்களும் இயல்பான நடிப்பால் அட்டகத்தியை தாங்கி பிடிக்கிறார்கள். இதுவரை படங்களில் பதிவாகாத சென்னையின் கிராமத்து முகத்தை காட்டியிருப்பது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு படுநேர்த்தி. ரொம்ப நாட்களாக அடைத்து வைத்த ஜன்னல் கதவை திறந்து விட்டது போல இசையமைப்பாள் சந்தோஷ் நாராயணின் பாடல்களில் ஒரு ப்ரெஷ்னெஸ். அட்ட கத்தி காதல் டிபார்ட்மெண்ட்டில் மட்டம் தான் பலவீனமா அல்லது எல்லா துறையிலுமா என்பதை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
காதலாகி கசிந்துருகும் நம் இளைஞர்களின் மனநிலையை மணக்க மணக்க கொத்து பரோட்டா போட்டுள்ள அறிமுக இயக்குநர் பா.ரஞ்சித் இதே ரூட்டில் போனால் என்றேனும் ஒரு நாள் தமிழ் சினிமாவின் ரூட் தல ஆகலாம்.
அட்டகத்தி - வெள்ளிப்பதக்கம்
----------------------------------------------
கல்கி விமர்சனம்
மூணு பேரைப் பார்க்கணும்; ரெண்டு பேரே ஃபாலோ பண்ணணும்; ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கணும்.... இது விடலைப் பருவத்தில் இளசுகள் சொல்லித் திரியும் தத்துபித்துவம். இன்னும் ஒரு ஸ்டெப் அதிகமாகப் போய் ஐந்து பெண்களை காதலித்து அதில் நான்கு காதல் புட்டுக்கொள்ள கடைசிக் காதல் மட்டும் வந்து ஒட்டிக் கொள்ளும் ஓர் இளைஞனின் கதைதான் அட்டகத்தி.
தொடை தெரிய கைலியை ஏத்திக் கட்டிக் கொண்டு தென்னகத்து இளசுகள் தமிழ் சினிமாவில் பண்ணிய அலப்பரையை அட்டகத்தியில் சென்னையின் புறநகர் இளைஞனாக ஹீரோ தினேஷ் செய்கிறார். ப்ளஸ் டூ கூட பாஸ் ஆக முடியாத அவர், ஒவ்வொரு காதலாகப் புட்டுக்கொள்ளும்போது சோகம் காட்டுவது அப்புறம் அடுத்த காதலுக்குத் தயாராகும்போது கண்களில் குறும்பு காட்டுவதும் சுவாரஸ்யம்; மாநகரப் பேருந்தில் ஃபுட்போர்டு அடிப்பது முதல் முடிந்தால் ஆளை அடிப்பது இல்லையேல் அடி வாங்காமல் ஓடுவதுவரை நடிப்பில் அசால்ட். நாயகி நந்திதாவுக்கு நன்கு நெளிவு சுளிவாக நடிக்க வருகிறது. தினேஷைக் காதலிப்பது போல நல்லாத்தான் நடிக்கிறார். கடைசியில் இல்லையென்று கவுக்கும்போது இந்தக் காதலும் அம்புட்டுத்தானா? என சலிப்பு வந்தாலும் அடுத்த காதலை நோக்கி ஓடும் ரசிகனின் மனசும் சேர்ந்து ஓடுவதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஓன்றிரண்டு காட்சிகளில் தென்பட்டாலும் ஷாலு, ஷோபி.. இருவரும் க்யூட்.
காதல்தான் களம். அதையே பார்ட் பார்ட்டாகப் பிரித்துப் பிரித்துச் சொன்னாலும் சம்பவங்களில் வித்தியாசம் காட்டி அசத்தி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித். சென்னைப் புறநகர் வாழ்வை ஓப்பனிங் காட்சியாக வைத்திருப்பதில் அவரது வித்தியாச உழைப்பு தெரிகிறது. மாட்டுக்கறி என்கிற வார்த்தை வானத்தில் வருவதும், ஹீரோ புழங்கும் ஏரியாக்களில் அவ்வப்போது அம்பேத்கர் படம் சுவர் ஓவியமாக வருவதும் தற்செயல் நிகழ்வல்ல என்பதும் புரிகிறது. சந்தோஷ்நாராயணனின் பின்னணி இசை உயிர்பபு. கானா பாடல்கள் துள்ளல் ரகம். கே. வர்மாவின் கேமரா இளசுகளோடு சேர்ந்து ஆட்டம் போடுகிறது.
கதை சொல்லிய முறையில் நெஞ்சைத் தொட்ட இயக்குனர், க்ளைமாக்ஸை அழுத்தமில்லாமல் முடித்ததால் படம் குறித்து மனசுக்குள் எந்தப் பாதிப்பையும் உருவாக்கவில்லை.