
அவள் பெயர் ரஜ்னி
விமர்சனம்
தயாரிப்பு - நவரசா பிலிம்ஸ்
இயக்கம் - வினில் ஸ்காரியா வர்கீஸ்
இசை - 4 மியூசிக்ஸ்
நடிப்பு - காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், கருணாகரன்
வெளியான தேதி - 8 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
மலையாள நடிகர்கள் நடித்திருப்பதால் இது ஒரு மலையாளப் படமோ என்று யோசிக்க வைக்கும். ஆனால், சென்னையில் மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு நேரடி தமிழ்ப் படம். மலையாளப் படங்களில் அதிகமாகக் கையாளப்படும் க்ரைம் திரில்லர் வகைப் படமாகத்தான் இந்தப் படத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வினில் ஸ்காரியா வர்கீஸ்.
கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து ஐ.டி.வேலை பார்ப்பவர் சைஜு குரூப். அவரது மனைவி நமீதா பிரமோத். இருவரும் ஒரு நாள் நண்பன் ஒருவர் வீட்டிற்கு வந்து திரும்பிச் செல்கின்றனர். அப்போது சைஜு யாரோ ஒரு பெண்ணால் கொல்லப்படுகிறார். அது பெண்ணல்ல, ஒரு பேய் என அதைப் பார்த்த சிலர் கூறுகிறார்கள். இந்நிலையில் தனது அக்காவின் கணவர் கொலையில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார் காளிதாஸ். அந்தக் கொலையாளி யார் என்பதை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே கதை விறுவிறுவென நகர ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் முன்பாக எதிர்பாராத திருப்பம் ஒன்றைக் கொடுத்து அங்கு ஒரு பிளாஷ்பேக் வைத்து வேகத்தையும் குறைத்து சுவாரசியத்தையும் குறைத்துவிடுகிறார்.
கொலையாளியை எப்படியும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எந்த ஒரு துணையும் இல்லாமல் களத்தில் இறங்குகிறார் காளிதாஸ் ஜெயராம். சரியான பாதையில் விசாரித்து கொலையாளியையும் நெருங்கி விடுகிறார். படம் முழுவதும் சோகமாகவே இருக்கும் ஒரு கதாபாத்திரம். படம் முழுவதுமே சீரியசாகவே நடித்திருக்கிறார். அவருடைய காதலியாக ரெபா மோனிகா ஜான், தேவையில்லாத ஒரு கதாபாத்திரம். சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.
காளிதாஸ் அக்காவாக நமீதா பிரமோத். உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நிமிர்' படத்தில் நடித்தவர். கணவனைப் பறிகொடுத்து தவிக்கும் ஒரு கதாபாத்திரம். கணவராக பைஜு குரூப், சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். இவரது கொலை வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக அஷ்வின்குமார்.
மலையாள நடிகர்கள் அதிகம் இருப்பதால் தமிழ் நடிகர்களும் வேண்டுமென கருணாகரன், ரமேஷ் கண்ணா ஆகியோரை சேர்த்திருக்கிறார்கள். கருணாகரன் சில காட்சிகளில் தொடர்ந்து வந்து திடீரென காணாமல் போகிறார். ரமேஷ் கண்ணா அவ்வப்போது வந்து போகிறார்.
சென்னையில் இரவு நேரக் காட்சிகளாக அதிகம் படமாக்கியிருக்கிறார்கள். அதில் ஒளிப்பதிவாளர் விஷ்ணு நன்றாகவே உழைத்திருக்கிறார். 4 மியூசிக்ஸ் பின்னணி இசை கொஞ்சம் கை கொடுத்திருக்கிறது.
பிரம்மாண்டம் இல்லாத எளிமையான ஒரு திரில்லர் படம். கொஞ்சம் மலையாள வாடை அடிப்பது மட்டுமே குறை.
அவள் பெயர் ரஜ்னி - வில்லன் ரஜ்னி
பட குழுவினர்
அவள் பெயர் ரஜ்னி
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்