Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கம்மார சம்பவம் (மலையாளம்)

கம்மார சம்பவம் (மலையாளம்),Kammara sambhavam
16 ஏப், 2018 - 15:48 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கம்மார சம்பவம் (மலையாளம்)

நடிகர்கள் : திலீப், சித்தார்த், பாபி சிம்ஹா, நமீதா பிரமோத், முரளிகோபி, சித்திக், விஜயராகவன், இந்திரன்ஸ், ஸ்வேதா மேனன் மற்றும் பலர்
இசை : கோபிசுந்தர்
ஒளிப்பதிவு : சுனில் கே.எஸ்
டைரக்சன் : ரதீஷ் அம்பாட்

நடிகர் திலீப்புடன் தமிழில் இருந்து சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் இணைந்து நடித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளான இந்தபடம் அந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்துள்ளதா..?

இன்று அரசியலில் மிகப்பெரிய தலைவர்களாக வலம்வரும் நிறைய பேரின் அரசியலுக்கு முந்தைய வாழ்க்கை, எவ்வளவு கேவலமாக இருந்துள்ளது என்பதையும் படைப்பாளி ஒருவன் நினைத்தால் அதை சரித்திரமாக மாற்றி அவர்களை தலைவர்களாக உருவாக்க முடியும் என்பதையும் பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறது இந்த கம்மார சம்பவம்.

அவ்வளவாக பிரபலமாகாத, மக்களே மறந்துபோன இயக்கம் ஒன்றை பெரிய அளவில் கட்சியாக மாற்ற துடிக்கின்றனர் உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர்.. ஆனால் அந்த இயக்கத்தை ஆரம்பித்த திலீப் (கம்மாரன்) தற்போது தொண்ணூறு வயது கிழவராக நடமாட்டமில்லாமல் வீட்டில் கிடப்பவர். அவரது வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்து அதை மக்களிடம் பரப்பி, கட்சியை வளர்க்க முடிவு செய்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து திரைப்பட இயக்குனரான பாபி சிம்ஹாவை அழைத்து வந்து திலீப்பிடம் அந்த இயக்கம் உருவான வரலாற்றை கேட்டு, அதை சினிமாவாக எடுக்கும்படி கூறுகின்றனர்..

ஆனால் கதை கேட்கும்போதுதான் திலீப்பின் இளமைக்கால வரலாறு எவ்வளவு கேவலமானது என்பது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வருகிறது.. சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் திலீப் ஆங்கிலேயரின் கைக்கூலியாக, ஜமீன்தாரை அண்டி பிழைப்பு நடத்துகிறார். ஜமீன்தாரின் வாரிசான சித்தார்த்தோ நேதாஜியின் இயக்கத்தில் சேர்ந்து விடுதலை போராட்ட வீரனாக, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். அவரது காதலி நமீதா பிரமோத்.

நரித்தந்திரம் கொண்ட திலீப், நமீதாவை அடைவதற்காகவும், ஜமீனிடம் இருந்து தனது சொத்தை மீட்பதற்காகவும் எட்டப்பன் வேலை பார்த்து சித்தார்த்தையும், ஜமீன்தார் முரளிகோபியையும் ஆங்கிலேயரிடம் சிக்கவைக்கிறார்.

இப்படிப்பட்ட திலீப்பின் மோசமான வாழ்க்கை வரலாற்றை தனது சினிமா யுக்தியால் தலைகீழாக திருப்பிபோட்டு, திலீப்பை யுகபுருஷனாக சித்தரித்து 'சம்பவம்' என்கிற திரைப்படமாக எடுக்கிறார் பாபி சிம்ஹா. படம் ஹிட்டாகி, அவரது அரசியல் இயக்கமும் பெரிய அளவில் மக்களிடம் ரீச்சாகிறது.. இயல்பிலேயே நரித்தனமும் குறுக்கு புத்தியும் கொண்ட கம்மாரன் (திலீப்) இந்த சூழலில் என்ன முடிவெடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

தொண்ணூறு சதவீத படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திலேயே நகர்கிறது. ஹீரோ என்கிற இமேஜை எல்லாம் அடித்து உடைத்து சராசரி குணங்களுக்கும் கீழான அந்த 'கம்மாரன்' நம்பியாராகவே மாறியிருக்கிறார் திலீப். அதிலும் தனது நிலப்பத்திரத்தை மீட்பதற்காக, தான் விரும்பிய பெண்ணை அடைவதற்காக எந்த அளவிற்கும் அவர் கீழிறங்கும் காட்சிகள் செம. இயலாமையுடன் கூடிய வில்லத்தனத்தை ஒவ்வொரு காட்சியிலும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் திலீப். அவரது கெட்டப்பும் பாடி லாங்குவேஜும் அற்புதமாக பொருந்தி இருக்கின்றன. இவைதவிர சுதந்திர போராட்ட வீரனாகவும், தொண்ணூறு வயது கிழவராகவும் என தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளார். இதில் நடிகர் திலீப்பாகவும் சில நிமிடங்கள் வந்து ஆச்சர்யபடுத்துகிறார் திலீப்.

திலீப்புக்கு இணையான இன்னொரு நாயகனாக சித்தார்த். மலையாளத்தில் இது அவருக்கு முதல் படம் என்றாலும் வெகு இயல்பாக கதையோட்டத்துடன் கலந்துவிடுகிறார் மனிதர். படத்தில் இவருக்கும் பாசிட்டிவ், நெகடிவ் என இரண்டு கேரக்டர்கள்.. இரண்டையும் அழகாக வித்தியாசப்படுத்தி இருக்கிறார் சித்தார்த்.

கொஞ்ச நேரமே வந்தாலும் சினிமா இயக்குனராக கெத்து காட்டியுள்ளார் பாபி சிம்ஹா. வெள்ளந்தி கிராமத்து பெண்ணாக நமீதா பிரமோத் குறைவில்லாத நடிப்பை வழங்கியுள்ளார். இவர்களை தவிர கிராமத்து ஜமீன்தாராக வரும் முரளிகோபி, உள்ளூர் அரசியல்வாதிகளாக வரும் சித்திக், விஜயராகவன், இந்திரன்ஸ், கொடூர ஜமீன்தாரினியாக வரும் ஸ்வேதா மேனன் உள்ளிட்டோரும் சிறப்பாக பங்காற்றியுள்ளனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் படத்தை சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் ரதீஷ் அம்பாட். குறிப்பாக சுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தை இவர் படமாக்கிய விதம் அருமை.. இவருக்கு பக்கபலமாக துணை நிற்கிறது ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ்ஸின் கேமரா. போர்க்கள காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் பிரமிக்க வைக்கிறது. கோபிசுந்தரின் பின்னணி இசையும் கதையுடன் நேர்த்தியாக பயணிக்கிறது.

காந்திஜி, நேதாஜி, நேரு ஆகிய தேசத்தலைவர்களை திரைக்கதையில் தேவையான இடங்களில் அழகாக பயணிக்க வைத்துள்ளார்கள். அதிலும் நேதாஜியையும் காந்திஜியையும் திலீப் காப்பாற்றும் காட்சிகள் நம்பகத்தன்மையுடன், அதேசமயம் சிரிப்பை வரவழைக்கும் விதமாக காட்சிப்படுத்தப்படுள்ளன.

படத்தின் நீளத்தை இன்னும் சற்றே குறைத்தால், அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் இந்த 'கம்மார சம்பவம்' நிச்சயம் கவரும்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in