2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்வேத், ஷ்ரதா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பிச்சுமணி
இசை - போபோ சசி
நடிப்பு - ஜெய், ரெபா மோனிகா ஜான், ரோபோ சங்கர், டேனி மற்றும் பலர்
வெளியான தேதி - 26 அக்டோபர் 2018
நேரம் - 2 மணி நேரம் 17 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் இருக்கும் நடிகர்களின் படங்கள் வருவது நிறையவே குறைந்துவிட்டது.

ஒரு காலத்தில் முன்னணி நாயகர்களை மட்டும் நம்பி இல்லாமல் அடுத்த நிலை ஹீரோக்களின் படங்களும் தமிழ் சினிமாவில் வெளிவரும். அதில் பல படங்கள் முன்னணி நாயகர்களின் படங்களை விடவும் அதிகமாக வசூலைத் தரும். ஆனால், அதெல்லாம் இப்போது நடப்பதேயில்லை.

இவற்றை யார் மாற்றப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. தற்போது ஒரு சில ஹீரோக்கள், குறிப்பாக 10 ஹீரோக்கள் நடிக்கும் படங்கள்தான் ஓரளவிற்கு வரவேற்பைப் பெறுகின்றன. அந்த நிலை மாறினால்தான் தமிழ் சினிமாவும் மாறும்.

ஜெய் போன்ற நடிகர்கள் அவர்கள் நடித்து வெளிவரும் படங்களின் பிரமோஷனுக்கே வருவதில்லை. தங்களை முன்னணி நடிகர்கள் அளவிற்கு அவர்கள் நினைத்துக் கொள்வதுதான் இதற்குக் காரணம். தங்களை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களைப் பெரிதாக நினைத்து அவர்கள் என்று மாறுகிறார்களோ, அன்றுதான் அவர்கள் நடிக்கும் படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும்.

ஜெய் மாதிரியான நடிகரை நம்பி இந்தப் படத்தை முதலீடு செய்து எடுத்த தயாரிப்பாளர்களின் மனதைரியத்தை அதிகம் பாராட்ட வேண்டும். அவர் எந்த பிரமோஷனுக்குமே வர மாட்டார் என்று தெரிந்தும் படமெடுக்கிறார்களே அதுவே பெரிய விஷயம்தான்.

அறிமுக இயக்குனர் பிச்சுமணி, ஜெய்க்குப் பொருத்தமான ஒரு கதையைத்தான் தேர்வு செய்துள்ளார். அதை சீரியசாக சொல்வதா, காமெடியாக சொல்வதா என்பதில் குழம்பிப் போயிருக்கிறார். இந்த மாதிரியான கதைகளை காமெடியாக சொல்லியிருந்தால் ரசிக்க முடிந்திருக்கும்.

பொய்யான வீட்டுப் பத்திரங்களைக் கொடுத்து லோன் வாங்கி டிராவல்ஸ் ஒன்றை ஆரம்பிக்கிறார் ஜெய். அவர் கொடுத்தது பொய் பத்திரங்கள் என்று தெரிந்து இன்ஸ்பெக்டரான போஸ் வெங்கட், ஜெய்யை மிரட்டி 10 லட்ச ரூபாய் கேட்கிறார். அந்தப் பணத்தைக் கொடுப்பதற்காக நாயகி ரெபா மோனிக்காவைக் கடத்துகிறார் ஜெய். ஆனால், அவரிடமிருந்து தப்பித்துவிடுகிறார் ரெபா. ரெபா மோனிக்காவை ஏற்கெனவே கடத்தி தங்க வைத்திருக்கும் வில்லன் கோஷ்டி, ஜெய்யின் நண்பன் டேனியைப் பிடித்து வைத்துக் கொண்டு, ரெபாவை திரும்ப கண்டுபிடித்து வந்து கொடுத்துவிட்டு, டேனியை மீட்கச் சொல்கிறது. ஜெய், ரெபாவைக் கண்டுபிடித்தாரா, நண்பனை மீட்டாரா என்பதுதான் ஜருகண்டி படத்தின் மீதிக் கதை.

நடிப்பதற்கு அதிக சிரமப்படவில்லை ஜெய். வசன உச்சரிப்பைக் கூட தட்டுத் தடுமாறித்தான் செய்கிறார். வசனத்தில் ஆங்கிலம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். நடிக்க வந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது, இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் எப்படி ஜெய் ?. விஜய்யாக வேண்டும், அஜித்தாக வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கேற்றபடி உழைக்க வேண்டும்.

ரெபா மோனிகா ஜான், நடிப்பதற்குப் பெரிய வேலையில்லை. ஜெய்யிடம் தான் யார் என்பதைச் சொல்லும் போது மட்டும் நடிக்கக் கொஞ்சம் வாய்ப்பு.

டேனிக்கு நகைச்சுவை என்றால் என்ன, ரசிகர்களை எப்படி சிரிக்க வைக்க வேண்டும் என்பதைப் போகப் போகப் புரிந்து கொண்டால் நல்லது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்குப் பஞ்சம். சிரிக்க வைக்க முயற்சித்தால் பிக் பாஸ் புகழை வைத்து பிக் காமெடி நடிகராகலாம். ரோபோ சங்கரும் படத்தில் இருக்கிறார், ஆனால் சிரிப்புதான் இல்லை.

அமித் குமார் திவாரி வழக்கமான தமிழ் சினிமா வில்லன். இளவரசு, போஸ் வெங்கட், ஜிஎம் குமார், ஜெயகுமார் என படத்தில் மேலும் சில குட்டி வில்லன்கள்.

போபோ சசி இசையில் இரைச்சல் அதிகம். பாடல்களையாவது ரசிக்கும்படி கொடுத்திருக்கலாம்.

கதையாக ஓ.கே. அதை திரைக்கதையில் சுவாரசியமான சம்பவங்களுடன், திருப்பங்களுடன் கொடுத்திருந்தால் ரசித்திருக்கலாம். திரைக்கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் மிஸ்ஸிங்.

ஜருகண்டி - ஜஸ்ட் ஓகே

 

பட குழுவினர்

ஜருகண்டி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜெய்

இசையமைப்பாளர் தேவாவின் உறவினர் ஜெய். 1985ம் ஆண்டு, ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் பிறந்த ஜெய், சின்ன வயது முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டவர். விஜய் நடிப்பில் வௌியான பகவதி படத்தின் மூலம் விஜய்யின் தம்பியாக அறிமுகமான ஜெய், அதனைத்தொடர்ந்து சென்னை-28 படம் மூலம் பேசப்படும் நடிகரானார். தொடர்ந்து அவர் நடித்த சுப்ரமணியபுரம் படம் ஜெய்யை ஒரு நடிகராக அடையாளம் காட்டியது. அதன்பின்னர் கோ, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும் படங்கள் ஜெய்யை முன்னணி நடிகராக உயர்த்தியது.

மேலும் விமர்சனம் ↓