தனுசு ராசி நேயர்களே
விமர்சனம்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், டிகங்கனா சூர்யவன்ஷி
தயாரிப்பு - ஸ்ரீ கோகுலம் மூவீஸ்
இயக்கம் - சஞ்சய் பாரதி
இசை - ஜிப்ரான்
வெளியான தேதி - 6 டிசம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2/5
ஒரு படத்தின் டிரைலரைப் பார்த்து படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து, படத்துக்குப் போனால் டிரைலரை மட்டுமே பார்த்துவிட்டு வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருக்கலாம் என சில படங்கள் நினைக்கத் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் தனுசு ராசி நேயர்களே.
படத்தின் ஆரம்பத்திலேயே இது எந்த மாதிரியான படம் என்பதை யோகிபாபு படத்தைப் பற்றி ஆரம்பிக்கும் காட்சியிலும், அதற்கடுத்து வரும் ஹீரோவின் அறிமுகப் பாடலும் நமக்கு இன்று ராசி சரியில்லை என உணர்த்திவிடுகின்றன.
அதற்குப் பிறகாவது குரு வந்து படத்தைக் காப்பாற்றுவார் என்று பார்த்தால் ராகு, கேது, சனி என நம்மை சுற்றி சுற்றி அடித்ததைப் போன்ற நிலைமை வந்துவிடுகிறது. கடைசியில் இரண்டரையிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வர வேண்டியிருக்கிறது.
அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி, ஜோதிடத்தை மையமாக வைத்து ஒரு கலகலப்பான காதல் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். படத்தை நல்ல நாள் பார்த்து ஆரம்பித்து, தன்னுடன் சேர்ந்து பணி புரிபவர்களை ராசி பார்த்து தேர்ந்தெடுத்திருப்பாரா என்பதுதான் தெரியவில்லை.
சிறு வயதிலிருந்தே ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் தனுசு ராசிக்காரரான ஹரிஷ் கல்யாண். அவர் கன்னி ராசிப் பெண், அதுவும் வேறு மொழி பேசும், வேறு மாநிலத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவர் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என ஜோதிடர் சொல்கிறார். ஏற்கெனவே காதல் தோல்வியில் இருப்பவருக்கு, தன் முன்னாள் காதலி ரெபா மோனிக்காவின் தோழியான டிகங்கனா சூர்யவன்ஷியைப் பார்த்ததும் காதல் வருகிறது. அவர் கன்னி ராசி என்று தெரிந்ததும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், மார்ஸ் கிரகத்துக்கு ஒரு வழிப் பயணம் செய்யும் லட்சியத்தியில் இருக்கும் டிகங்கனா, ஹரிஷைக் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் கிடைத்த ஓரளவு வரவேற்பைக் கூட இந்தப் படத்தில் இழந்துவிட்டார் ஹரிஷ். கலகலப்பாக காமெடியாக நடிப்பதா, காதலுடன் காதலனாக நடிப்பதா என அவர் நன்றாக குழம்பியிருப்பது தெரிகிறது. சோகமாக இருப்பதெல்லாம் ஹரிஷுக்கு செட்டாகவேயில்லை. காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் தெம்பாக நடிக்கிறார்.
அறிமுக கதாநாயகியாக டிகங்கனா சூர்யவன்ஷி. இந்தப் படத்தின் ராசி அவருக்கு எப்படி இருக்கிறதோ இல்லையோ, அவருடைய எதிர்கால ராசி, அவர் ஜாதகத்தைப் பார்க்காமலேயே தெரிகிறது. கிளாமராக நடிக்கத் தயங்க மாட்டார் போலிருக்கிறது. அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களுடன் அழகாக இருக்கிறார். அதனால், பல இயக்குனர்களின் பார்வை இவர் மீது விழலாம்.
டிவியில் பாடல்களைப் போடுவதற்கு தொகுப்பாளர் வருவது போல, இந்தப் படத்தைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக யோகி பாபு. அடிக்கடி வந்து படத்தில் இது நடந்தது, அது நடக்கப் போகிறது என ஜோசியம் சொல்வது போல சொல்லிவிட்டுச் செல்கிறார். ஆனால், ஒரு இடத்தில் கூட சிரிப்புதான் வரவில்லை.
பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிக்கா ஜான், ஹரிஷின் முன்னாள் காதலியாக நடித்திருக்கிறார். இவரும் படத்தில் கதாநாயகியா எனப் பார்த்தால் இரண்டாவது கதாநாயகியாக மாற்றிவிட்டார்கள். ஹரிஷின் அம்மாவாக ரேணுகா, தாய்மாமாவாக முனிஷ்காந்த், பாசத்தைப் பொழிகிறார்கள். பாண்டியராஜன், மயில்சாமி, சார்லி சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.
ஜிப்ரான் இசையமைப்பில் ஒரு பாடல் கூட கேட்கும்படி இல்லை. பின்னணி இசையை சிறப்பாகக் கொடுப்பதற்கு அப்படி ஏதாவது காட்சிகள் இருந்தால் அவரும் கொடுத்திருப்பாரோ ?.
ஒரு காட்சியில் ஹரிஷ் கல்யாண் குடித்துவிட்டு செல்லும் போது, அவரது காதலி ரெபாவின் தோழியைப் பார்த்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவரை நடுரோட்டிலேயே கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். இப்படிப்பட்ட காட்சிகளோடு மேலும் சில ஆபாசமான காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருக்கின்றன.
சமூக அக்கறையுடன் சில இயக்குனர்கள் தரமான படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவை முன்னேற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட படங்கள் எதற்காக எடுக்கப்படுகின்றன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.
தனுசு ராசி நேர்களே - கட்டம் சரியில்லை...
பட குழுவினர்
தனுசு ராசி நேயர்களே
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்