பார்க்கிங்,Parking

பார்க்கிங் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ், சோல்ஜர்ஸ் பேக்டரி
இயக்கம் - ராம்குமார் பாலகிருஷ்ணன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா
வெளியான தேதி - 1 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 3/5

நமது வாழ்க்கையில் தினமும் நடக்கும் சில சம்பவங்களை வைத்து கூட கதை எழுதி அதையும் படமாக உருவாக்கலாம் என்பதை இந்தப் படம் மீண்டும் புரிய வைத்திருக்கிறது. பொது வெளியில், வீடுகளில் காரை நிறுத்துவதற்கும், பைக்குகளை நிறுத்துவதற்கும் அடிக்கடி சண்டைகள் நடப்பதை நம் கண் முன் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு வீட்டில் காரை நிறுத்த 'ஈகோ' பிடித்த இருவருக்கு இடையே நடக்கும் சண்டைதான் இந்த 'பார்க்கிங்'.

அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொல்ல நினைத்த கதையை எந்தவித சிக்கலும் இல்லாமல் நேரடியாகவும், அழுத்தம், திருத்தமாகவும் சொல்லியிருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள சில பல காட்சிகள் நமது வாழ்க்கையில் நாம் சந்தித்தவையாகக் கூட இருக்கலாம். இப்படி நம் வாழ்விலிருந்து யதார்த்தமான பிரச்சனைகளை படமாகப் பார்க்கும் போது அப்படத்துடன் நம்மால் ஒன்றி ரசிக்கவும் முடிகிறது.

ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் புதிதாக ஒரு வீட்டிற்கு குடி போகிறார். அந்த வீட்டில் ஏற்கெனவே வாடகைக்கு இருக்கிறார் அரசு அதிகாரியாக வேலை பார்க்கும் எம்எஸ் பாஸ்கர். ஹரிஷ், அவரது கர்ப்பிணி மனைவி இந்துஜா ஆகியோர் ஆரம்பத்தில் பாஸ்கரின் குடும்பத்தாருடன் நன்றாகவே பழகுகிறார்கள். ஆனால், ஹரிஷ் புதிதாக ஒரு காரை வாங்கியதும்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. ஒரே ஒரு கார் நிறுத்த மட்டுமே வசதி கொண்ட அந்த வீட்டில் தன் பைக்கை நிறுத்தவும், எடுக்கவும் ஹரிஷ் வாங்கிய காரால் பாஸ்கருக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக பாஸ்கரும் புதிதாக ஒரு காரை வாங்குகிறார். இருவருக்கும் இடையே காரை நிறுத்துவதில் கடும் போட்டியும், சண்டையும் வருகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பார்க்கிங்கில் காரை கொஞ்சம் தள்ளி நிறுத்தினாலும் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் வராது. ஆனால், தான் அதிக வாடகை தருகிறேன் என ஹரிஷ் சொல்லி அவருடைய 'ஈகோ'வைக் காட்டுகிறார். பதிலுக்கு வேண்டுமென்றே ஹரிஷ் காரில் கீறல் போடுகிறார் பாஸ்கர். இப்படி ஒரு 'கீறலில்' ஆரம்பிக்கும் சண்டை கடைசியில் ஒருவரை மற்றவர் 'கொல்ல' முயற்சிப்பது வரை போகிறது. ஹரிஷும், பாஸ்கரும் எலியும், பூனையுமாக, டாம் அன்ட் ஜெர்ரியாக அவரவர் காரை பார்க் செய்வதில் அப்படி மோதிக் கொள்கிறார்கள். இருவரது யதார்த்த நடிப்பும் தான் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது.

கணவன் ஹரிஷை கட்டுப்படுத்த நினைத்து தோற்றுப் போகும் மனைவியாக இந்துஜா. இன்னொரு பக்கம் அதிகாரம் செய்யும் கணவர் பாஸ்கரிடம் சிக்கித் தவிக்கும் மனைவியாக ரமா.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சீரியஸ் ஆக நகர ஆரம்பித்துவிடுகிறது. காமெடிக்கும், வேறு எந்த காட்சிகளுக்கும், ஏன் பாடல்களுக்கும் கூட படத்தில் இடமில்லை.

சாம் சிஎஸ் பின்னணி இசை காட்சிகளை அதன் பரபரப்புடன் இன்னும் அதிகமான பரபரப்பைக் கூட்டுகிறது. ஒரே வீட்டிற்குள் படம் அதிகம் நகர்ந்தாலும் அது தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜிஜு சன்னி.

வீட்டின் ஓனர் சொன்ன பிறகும் ஹரிஷ் கல்யாண் அடங்க மாட்டேன் என்கிறார். எந்த வாடகை வீடாக இருந்தாலும் 11 மாதங்கள்தான் அக்ரிமென்ட் போடுவார்கள். அதிலேயே கண்டிஷன்கள் இருக்கும். இப்படி இரண்டு வாடகைக்காரர்களை வைத்துவிட்டு அவர்களை கண்டிப்புடன் வெளியேற்றாமல் இருக்கிறார் வீட்டின் ஓனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சினிமாத்தனமாக அமைத்துவிட்டது ஏமாற்றம். அதையும் யதார்த்தமாய் முடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

பார்க்கிங் - க்ரீன் சிக்னல்

 

பார்க்கிங் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பார்க்கிங்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓