2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - தோனி என்டர்டெயின்மென்ட்
இயக்கம், இசை - ரமேஷ் தமிழ்மணி
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு
வெளியான தேதி - 28 ஜுலை 2023
நேரம் - 2 மணி நேரம் 32 நிமிடம்
ரேட்டிங் - 2/5

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்எஸ் தோனி, திரைப்படத் தயாரிப்புத் துறையில் இறங்கி தனது முதல் தயாரிப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழில்தான் தனது முதல் தயாரிப்பு இருக்க வேண்டும் என்று நினைத்த தோனிக்கு ஒரு தரமான படத்தைக் கொடுத்து முத்திரை பதித்திருக்கலாம் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. இந்தக் கதை போல எல்லாம் படமாகத் தயாரிக்கலாம் என தோனி அண்ட் கோ நினைத்தால் அவர்கள் உடனடியாக தங்களது எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பவர் ஹரிஷ் கல்யாண். அவருடன் வேலை பார்க்கும் இவானாவைக் காதலிக்கிறார். இரண்டு வருடங்கள் காதலித்த பிறகு திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள். ஆனால், தனது வருங்கால மாமியாரான நதியாவுடன் பழகிப் பார்த்த பின்புதான் திருமணம் என ஒரு 'ஐடியா' கொடுக்கிறார் இவானா. அதனால் ஒரு 'ட்ரிப்' போக ஆசைப்படுகிறார்கள். அம்மா நதியாவிடம் பொய் சொல்லி ட்ரிப்புக்கு அழைத்துப் போகிறார் ஹரிஷ். இவானா குடும்பத்தினர், தோழி, ஹரிஷ் குடும்பத்து தோழி வினோதினி குடும்பத்தினர், ஹரிஷ் நண்பர் ஆர்ஜே விஜய் ஆகியோரும் ட்ரிப்பில் கலந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் நதியாவுக்கு உண்மை தெரிய வர கூர்க் வரை சென்ற பின் ட்ரிப்பை கேன்சல் செய்கிறார்கள். ஆனாலும், நதியா, இவானா திடீரென தனியாகச் செல்கிறோம் என பிரிந்து போகிறார்கள். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

இம்மாதிரியான கதைகளை உளவியல் ரீதியான, கலகலப்பான, சென்டிமென்ட் படமாகக் கொடுத்திருந்தால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும். ஆனால், எதிலுமே ஒரு முழுமை இல்லாமல் திரைக்கதை அதன் போக்கில் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. ட்ரிப் போகும் சாலைகளிலாவது திருப்பங்கள் அடிக்கடி வரும். இந்தப் படத்தில் இடைவேளையின் போது வரும் ஒரே ஒரு திருப்பம் தவிர மேடு, பள்ளங்களில் மட்டுமே திரைக்கதை பயணிக்கிறது.

ஹரிஷ் கல்யாண் படம் முழுவதும் எதையோ பறிகொடுத்தவர் போல உம்மென்றே இருக்கிறார். அம்மா நதியா ஒரு பக்கம், காதலி இவானா ஒரு பக்கம் என இரண்டு பக்கமும் மாட்டிக் கொள்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஹரிஷ் கல்யாண் இப்படி ஒரு பக்கம் 'உம்'மென்று இருக்க, இன்னொரு பக்கம் இவானா 'அய்யே' என அடிக்கடி அலுத்துக் கொள்கிறார். உங்களுக்கு என்னதான்பா பிரச்சனை என சத்தம் போட்டு கேட்கத் தோன்றுகிறது.

நதியா முகத்தில் அவ்வளவு களைப்பு ஏன் என்று தெரியவில்லை. கண்களுக்குக் கீழே தூக்கமில்லாததால் வரும் சுருக்கம் அவரது தோற்றத்தையே கெடுத்துவிடுகிறது. இடைவேளை வரை அம்மா நதியாவாக இருப்பவர், இடைவேளைக்குப் பின் 80களின் நதியாவாக மாறிவிடுகிறார், ஆடைகளில் மட்டுமே அந்த மாற்றம்.

படத்தில் நடித்தேயாக வேண்டும் என யோகிபாபுவிடம் கேட்டதால் வந்து நடித்துக் கொடுத்திருப்பாரோ ?. திடீரென வந்து திடீரென காணாமல் போய் மீண்டும் திடீரென வந்து போகிறார், சிரிக்க வைக்காமல்… . ஹரிஷ் கல்யாணின் நண்பனாக ஆர்ஜே விஜய். ஒரு சில வசனங்களில் மட்டும் கலகலப்பூட்டுகிறார்.

படத்தின் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியே படத்திற்கு இசையமைத்திருக்கிறார். காட்சிகளில் ஒரு அழுத்தம் இருந்தால்தானே இசையிலும் எதிரொலிக்கும். விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் முழுவதுமே 'ப்ளீச்' ஆகி வெளிறிப் போயிருக்கிறது. அவரது ஒளிப்பதிவில் குற்றமா, அல்லது அதை கிரேடிங் செய்தவரது குற்றமா ?.

இடைவேளை வரை ஓரளவிற்குத் தாக்குப் பிடித்து ரசிக்க முடிகிறது. அதற்குப் பின்னால் ”என்னென்ன கதை சொல்றாங்க பாருங்க,” என களைப்படைய வைத்துவிடுகிறது.

எல்ஜிஎம் - எல்கேஜி

 

எல்ஜிஎம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

எல்ஜிஎம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓