மதிமாறன்,Mathimaran
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல்
இயக்கம் - மந்திர வீரபாண்டியன்
இசை - கார்த்திக் ராஜா
நடிப்பு - வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா
வெளியான தேதி - 29 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

'உருவ கேலி' கூடாது என்ற சிறந்த கருத்தை வலியுறுத்தியுள்ள படம். உயரம் குறைவாக இருப்பதற்காக ஒரு மனிதனை கிண்டலும், கேலியும் செய்யும் உலகம் அவர்களிடமிருக்கும் திறமைகளைப் பார்ப்பதில்லை என்பதை அழுத்தமாய் வலியுறுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.

உயரம் குறைந்தவராக இருந்தாலும் நன்றாக படிப்பவராகவும், திறமைசாலியாகவும் இருக்கும் ஒருவரைப் பற்றிய கதைதான் இந்தப் படம். இரட்டையர்களாகப் பிறந்தவர்கள் வெங்கட் செங்குட்டுவன், இவானா. சில வினாடி இடைவெளியில் பிறந்தாலும் இவானாவை அக்கா என்றே அழைத்து அவர் மீது அதிக பாசம் வைத்துள்ளார் வெங்கட். இந்நிலையில் கல்லூரி பேராசிரியர் ஒருவரைக் காதலித்து அவருடன் ஊரை விட்டு ஓடிப் போகிறார் இவானா. அந்த அவமானம் தாங்காமல் அவர்களின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தங்கை இவானாவைத் தேடி சென்னை செல்கிறார் வெங்கட். அங்கு அவரது முன்னாள் காதலி ஆராத்யா சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். தீர்க்க முடியாத தொடர் கொலைகள் பற்றிய வழக்கைத் தீர்க்க வெங்கட் முயற்சிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளை வரை கிராமத்து சென்டிமென்ட் கதையாகவும், இடைவேளைக்குப் பின் நகரத்து த்ரில்லர் கதையாகவும் படத்தைக் கொடுததிருக்கிறார் இயக்குனர். படத்தில் நடித்துள்ளவர்கள் குறை வைக்காமல், நிறைவாக நடித்துள்ளதால் அது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

உயரம் குறைந்தவராக இருந்தாலும் மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளானாலும் தன்னுடைய படிப்பிலும், தான் செய்ய நினைப்பதிலும் தனது திறமையை வெளிப்படுத்தி மற்றவர்களை ஆச்சரியப்படுத்துபவராக நடித்திருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன். அழுத்தமான கதாபாத்திரம், எமோஷனலாக நடித்து கதாநாயகான இது முதல் படமாக என படம் பார்ப்பவர்களை வியப்படைய வைக்கிறார் வெங்கட் செங்குட்டுவன்.

படத்தில் இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்கள். வெங்கட்டின் தங்கையாக இவானா, காதலியாக ஆராத்யா. 'லவ் டுடே' படத்தில் நடித்த இவானா, இந்தப் படத்திலும் அவருடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தம்பி மீதான பாசம், தான் தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வில் அவரது கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார். இடைவேளை வரை கல்லூரி மாணவியாக நடித்த ஆராத்யா, இடைவேளைக்குப் பின் சப் இன்ஸ்பெக்டராக நடித்து அவரா, இவர் என கேட்க வைக்கிறார். போலீஸ் கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது.

இந்த ஆண்டின் சிறந்த குணச்சித்திர நடிகர் என்று சொல்லுமளவிற்கு இந்தப் படத்திலும் அன்பான அப்பாவாக கண்கலங்க வைக்கிறார் எம்எஸ் பாஸ்கர். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த், எப்போதும் பரபரப்புடனும், டென்ஷனுடனும் இருக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். புதிய வாய்ப்புகள் தேடி வரலாம்.

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை படத்தின் எமோஷனல் காட்சிகளுக்கு இன்னும் ஏற்றமாய் அமைந்திருக்கிறது. சென்டிமென்ட் பாடல்களில் மனதை நிறைக்கிறார். பர்வேஸ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத் தொகுப்பும் கச்சிதமாய் அமைந்துள்ளது.

புதுமுக நடிகர்கள், வளரும் நடிகர்களை வைத்து ஒரு அழுத்தமான கதையைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். இந்தவாரம் வெளியான பல படங்களில் இந்தப் படம் புதியவர்களுக்கான நம்பிக்கையைக் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இயக்குனர் எடுத்துக் கொண்ட கதையும், கதாபாத்திரங்களும்தான் அதற்கு காரணமாய் இருக்கிறது. சில சினிமாத்தனமான காட்சிகளை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

மதிமாறன் - மாற்றம்…

 

மதிமாறன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மதிமாறன்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓