2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - துருவா, இந்துஜா
தயாரிப்பு - பிளக்ஸ் பிலிம்ஸ்
இயக்கம் - எகே
இசை - திவாகரா தியாகராஜன்
வெளியான தேதி - 20 செப்டம்பர் 2019
நேரம் - 1 மணி நேரம் 58 நிமிடங்கள்
ரேட்டிங் - 2/5

2019ம் வருடத்தில் போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து வெளிவந்துள்ள மற்றுமொரு படம். இந்தப் படத்துடன் சேர்த்தால் இதுவரையிலும் ஐந்தாறு படங்கள் அந்தக் கடத்தலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும்.

இயக்குனர் எகே அடுத்தடுத்து டிவிஸ்ட்டுகளின் கூடிய திரைக்கதையை அமைத்த விதத்தில் படத்தில் சுவாரசியத்தைக் கூட்டியிருந்தாலும் அதிகப்படியான டிவிஸ்ட்டுகள் நம்மைக் கொஞ்சம் குழப்புகின்றன.

துருவ், ஷாரா இருவரும் சேர்ந்து தவறுதலாக இந்துஜாவைக் கடத்தி விடுகிறார்கள். அந்த சமயத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் இந்துஜாவின் அப்பா அவரது வீட்டில் கொல்லப்படுகிறார். அதோடு இந்துஜாவுக்கும் கொலை மிரட்டல் வருகிறது. இந்துஜாவின் காரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் இருக்கிறது. அது வில்லனான ஆதித்யா ஷிவ்பின்க் உடையது. அந்த போதைப் பொருள் பின்னணியில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன. துருவ்விடம் அதற்காக உதவி கேட்கிறார் இந்துஜா. அதன் பின் துருவ் இந்துஜாவுக்கு உதவினாரா, கொலை மிரட்டலிலிருந்து அவரைக் காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மாமா ஷாராவுடன் சேர்ந்து சின்னச் சின்னத் திருட்டுகளைச் செய்பவராக நாயகன் துருவ். நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள காட்சிகளில் கூட சாதாரணமாக நடிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அதிரடி காட்டுகிறார்.

இந்துஜா இந்தப் படத்தில் கொஞ்சம் கிளாமர் காட்டுகிறார். அப்பாவின் சாவில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்க அவரும் களம் இறங்குகிறார். இதற்கு முன் ஓரிரு படங்களில் கிராமத்துப் பெண் போல நடித்தவர், இந்தப் படத்தில் மாடர்ன் உடையில் வலம் வருகிறார். இவருடைய கதாபாத்திரத்திலும் இன்னும் கூடுதலாக ஆக்ஷன் சேர்த்திருக்கலாம்.

ஷாரா சில நேரங்களில் சிரிக்க வைக்கிறார், சில நேரங்களில் எரிச்சலூட்டுகிறார். வில்லன் ஆதித்யா ஷிவ்பின்க் முடிந்தவரையில் வில்லத்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார்.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களை இதற்கு முன் சினிமாவில் பார்த்தது போன்று இல்லை. நாயகி இந்துஜாவின் அப்பாவாக நடித்திருப்பவர் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

காமெடியாக படத்தை நகர்த்துவதா , சீரியசாக நகர்த்துவதா எனக் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு என டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு இன்னும் பக்கபலமாக அமைந்திருக்கலாம்.

கதை சொல்வதில், திரைக்கதையில் உள்ள புதிய முயற்சி அதைப் படமாக மொத்தமாக சுவாரசியமாகக் கொடுப்பதிலும் இருந்திருக்கலாம்.

சூப்பர் டூப்பர் - எங்காவது சொல்ல வைத்திருக்கலாம்...

 

பட குழுவினர்

சூப்பர் டூப்பர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓