2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - காளிதாஸ், மேகா ஆகாஷ்
தயாரிப்பு - வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ்
இயக்கம் - பாலாஜி தரணீதரன்
இசை - கோவிந்த் மேனன்
வெளியான தேதி - 25 டிசம்பர் 2020 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2/5

சினிமா என்பதே கற்பனைகளின் ஒரு வடிவம் தான். அதில் அவ்வப்போது சில யதார்த்தமான சம்பவங்களை இணைத்து உண்மைக்குப் பக்கமாக படங்களைக் கொடுக்க முயல்வர். ஆனால், உலக வரலாற்றிலேயே முதல் முறையாக கற்பனையிலும் நடக்காத ஒரு விஷயத்தை கதையின் கருவாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.

மனித வரலாற்றில் நடக்கவே நடக்காத ஒரு விஷயம்தான் கதையின் கரு என்பது ஒரு சுவாரசியம் தான் என்றாலும் அதை திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்துதலில் எந்த சுவாரசியமும் இல்லாமல் போனது ஏனோ தெரியவில்லை.

கல்லூரியில் படிக்கும் மேகா ஆகாஷ், படித்து முடித்தாலும் அரியர்ஸ் வைத்திருக்கும் காளிதாஸ் இருவரும் காதலர்கள். மேகா கர்ப்பமாக இருக்கிறார் என ஒரு அதிர்ச்சித் தகவலைத் தருகிறார் டாக்டர். மேகாவும் காளிதாஸும் உடலால் இணைந்ததில்லை என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். இருவரும் வேறு சில மருத்துவர்களிடம் காண்பித்தாலும் அவர்களும் மேகா கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என உறுதி அளிக்கிறார்கள். ஒரு பெரிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு வேறு சில உயிரினங்களைப் போல மேகா தானாகவே கர்ப்பமாகி உள்ளார் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அது தெய்வச் செயல் என பரவுகிறது. பெண் குழந்தை பிறந்து மூன்று வயதாகும் போது புதிதாக ஒரு பிரச்சினை வருகிறது. அது என்ன, அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

தேனி, கடல் குதிரை, சுறா போன்ற ஒரு சில உயிரினங்கள் ஆண் துணை இல்லாமல் கருத்தரிப்பவை. அவை போன்றே மனித வரலாற்றில் முதல் முறையாக மேகா ஆகாஷ் ஆண் துணை இல்லாமல் கருத்தரித்துள்ளாராம். அதாவது, Parthenogenesis வகை கருத்தரித்தல் என்கிறார்கள் படத்தில்.

பாலாஜி தரணீதரன் இயக்கிய முதல் படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நாயகன் விஜய் சேதுபதிக்கு பின் பக்க தலையில் பந்து பட்டு தற்காலிக மறதி ஏற்படும். முதல் படத்தைப் போலவே இந்த மூன்றாவது படத்திலும் மருத்துவம் சம்பந்தமான விந்தையான ஒரு கருவைக் கையாண்டிருக்கிறார். ஆனால், முதல் படத்தில் இருந்த சுவாரசியம், பரபரப்பு இந்த மூன்றாவது படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங். அதற்கான இடமிருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறார்.

காளிதாஸ், மேகா ஆகாஷ் இருவருக்கும் படத்தின் முக்கால் பகுதிக்கு எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை மட்டுமே நடிப்பில் தந்தால் போதும் என காட்சிகள் உள்ளன. இருவருடைய ஜோடிப் பொருத்தமும் சரியாக இருக்கிறது. இருவரையும் ஆரம்பத்திலேயே காதலர்கள் என சொல்லிவிடுவதால் அவர்களுக்குள் காதல் காட்சிகளுக்கும் வாய்ப்பில்லை. மேகாவிற்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு தான் அப்பா இல்லை என்று தெரிந்தும் அவர்தான் தன் மனைவி என்பதில் உறுதியாக இருந்து திருமணம் செய்து கொள்கிறார்.

குழந்தை பெறக் காரணமாக இருப்பது மட்டும் அப்பா என்பதற்குத் தகுதியில்லை குழந்தை பெற்றுக் கொள்ளப் போகும் மனைவியை காத்துக் கொள்வதில்தான் அப்பா என்பதற்குத் தகுதி எனச் சொல்லி அதில் மட்டும் நெகிழ வைக்கிறார்கள். அது போலவே படத்தின் முடிவிலும் தெய்வக் குழந்தை என்பதையும் மீறி மத ஒற்றுமை, நல்லிணக்கம் என பாடம் சொல்லி படத்தை முடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களை சொல்வதற்கு மட்டும் இந்தப் படம் பயன்பட்டிருக்கிறது.

மேகா பெற்றோர், காளிதாஸ் பெற்றோர்களாக நடித்திருப்பவர்கள் ஒரு நடுத்தரக் குடும்பத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளார்கள். ஒரு சிறுவன் தான் கடவுளின் அவதாரம் என சொல்லி செய்யும் சில விஷயங்கள் கிளைக் கதையாக அமைந்து கொஞ்சம் சுவாரசியத்தைத் தந்துள்ளது. அதற்கும் கடைசியில் ஒரு சரியான முடிவைக் கொடுக்கிறார் இயக்குனர்.

96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்தப் படத்தில்தான் கோவிந்த் மேனன் ஆக அறிமுகமாகி இருக்கிறார். பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்று ஒரு கார்டு போட்டுவிடுகிறார்கள். ஆனால், மறைமுகமாக இந்து மத நம்பிக்கைகளை மட்டும் காயப்படுத்தும் விதமாக சில காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். சமீப கால சினிமாக்களில் இப்படியான காட்சிகள் வருவதன் மூலம் யாரைத் திருப்திப்படுத்த நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

டீசரைப் பார்த்து ஏமாந்து போன படங்களின் பட்டியலில் இந்தப் படமும் சேரும்.

ஒரு பக்கக் கதை - கால் பக்கம்

 

பட குழுவினர்

ஒரு பக்க கதை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓